தலையங்கம்

தமிழ்நாடு அரசு உறுதியான முடிவு எடுக்க வேண்டும்

நியூட்ரினோ திட்டத்தை தேனி பொட்டிப்புரத்தில் அமல்படுத்தக்கூடாது. மேற்குத் தொடர்ச்சி மலையும் மலையின் வளமும்தான் முக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சார் மு..ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது மட்டுமின்றி பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு மக்களிடத்தில் கருத்து கேட்காமலேயே மக்கள் கருத்தைக் கேட்பதற்காக கருத்துக் கேட்புக் கூட்டம் 2010லேயே நடத்திவிட்டோம் என்று கூச்சமேயில்லாமல் பொய் சொல்கிறது. அதேபோன்று சென்னை&சேலம் எட்டு வழிச்சாலை திட்டம். 3 மணி நேரத்தில் சென்னை&சேலத்திற்கிடையே விரைந்து செல்ல, விரைவில் சாலை அமைக்கப்பட்டுவிடும் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. இயற்கை வளங்களை அழித்து அப்படி ஒரு சாலை அமைக்கப்படக் கூடாது என்று போராடிய மக்களுக்கு உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததுதான் திமுக அரசு. இப்போது ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதிலும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் அதிக முனைப்பு காட்டிவரும் நிலையில், திமுக அரசு உறுதியான முடிவு எடுக்க வேண்டும். அதேபோல் கூடங்குளத்தில் அணுக் கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என்று வெறும் கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது, அணுக் கழிவை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டபோது, அணு சக்தித் துறையிலிருந்து அதை கர்நாடகா மாநிலத்தில் சும்மா கிடக்கும் கோலார் தங்க சுரங்கத்திற்குள் புதைக்கப் போகிறோம் என்று சொன்னார்கள். மறுநாளே கர்நாடகா மாநிலத்தில் இருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம், அம்மாநில காங்கிரஸ், பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் களத்தில் குதித்தன. ஆயிரக்கணக்கான நாட்கள் நடைபெற்ற கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டத்தைக் கண்டு கொள்ளாத அன்றைய ஒன்றிய அரசு உடனடியாக, கர்நாடகா கட்சிகள் போராட்டக் குரலைக் கண்டு நாங்கள் அணுக் கழிவை கோலார் தங்கச் சுரங்கத்தில் வைக்கப்போவதில்லை என்றும் கூடங்குளத்திலேயே வைத்துவிடுவோம் என்றது. காங்கிரஸ் ஆட்சி போய் பாஜக ஒன்றிய அரசில் அணுக் கழிவை கூடங்குளத்தில் வைப்பதற்கான வேலையை வேகமாக ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அணுஉலையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் நம் நாட்டு அணுசக்திக் கழகத்திற்கு இன்னும் முழுமையாகத் தெரியாது. வெறும் 13.5 சதுர கி.மீ. பரப்பு கொண்ட கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் நெருக்கடியான சூழலில், ‘அணுஉலைக்கு அப்பால்அமைப்பை யும் கட்டுவது பேராபத்து என்று சுற்றுப்புறச் சூழலியலாளர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை தமிழ்நாட்டில் எக்காரணம் கொண்டு அனுமதிக்க முடியாது என்று உறுதியாக அறிவிக்க வேண்டும். நீட் எதிர்ப்பு ஒரு பக்கம் நீட் தேர்வு நடத்துவது இன்னொரு பக்கம் என்பதுபோன்று பேராபத்தான இந்தத் திட்டங்களுக்கு எதிர்ப்பு ஒரு பக்கம் என்றும் அந்தத் திட்டங்கள் அமலாக்கத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இன்னொரு பக்கம் என்றும் இருப்பது நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைக்கும் நிலைக்கு திமுக அரசின் செயல்பாடு அமைந்துவிடும். ஆகவே தமிழ்நாடு திமுக அரசு மக்கள் விரோதத் திட்டங்கள் அமல்படுத்தப்படாமல் செய்ய தேவையான உறுதியான முடிவை எடுத்திட வேண்டும்.