மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் வேலைக்கு ஆளெடுப்பதில் நடைபெற்ற முறைகேடு களைக் கண்டித்து, புரட்சிகர இளைஞர் கழகம்(ஆர்ஒய்ஏ) மற்றும் அகில இந்திய மாணவர் கழகம்(அய்சா) சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மேற்கு வங்க மம்தா அரசு, சிபிஐ (எம்எல்)விடுதலை கட்சியியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் தோழர் அபிஜித் மஜும்தார், அய்சா தலைவர் நிலாஷிஸ், ஆர்ஓய்ஏ தலைவர் ரன்அஜாய் மற்றும் பல முன்னணி தோழர்களைத் தாக்கி கைது செய்தது. ஊர்வலமாக சென்றவர்களை ராம்லீலா மைதானத்தில் தடுத்து நிறுத்திய போலீசார் தடியடி தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் தோழர்கள் உட்பட பலர் காயம் அடைந்தனர். மேற்கு வங்கத்தில் அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களையும் உடனடியாக பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரிணாமுல் கட்சி அமைச்சர்கள் பார்த்தா சட்டோபாத்யாய் மற்றும் பரேஷ் அதிகாரி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இந்த பேரணி நடைபெற்றது.

ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவது திரிணாமுல் மம்தா அரசாங்கத்தின் அடையாளமாக மாறி வருகிறது. டியூச்சாபச்சாமி நிலக்கரி திட்டத்தை எதிர்க்கும் ஆதிவாசிகள், பராக்காவில் அதானியின் உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் மற்றும் அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்பு முறைகேடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மாணவர், இளைஞர், செயல்வீரர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.

பாஜக, ஆட்சியை கைப்பற்றிவிடும் அச்சுறுத்தலில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தை காப்பாற்றத்தான், 2021ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்க மக்கள் திரிணாமுல் கட்சிக்கு மூன்றாவது முறையாக ஆட்சியை வழங்கினர்; 2021 தேர்தல் தீர்ப்பின் உணர்வை திரிணாமுல் அரசாங்கம் கேலிக்கூத்தாக்கி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.