2022, செப்டம்பர் 22, அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கள்ளக்குரிச்சி மாவட்டக் கமிட்டி கூட்டம்(2) கெடிலத்தில் நடைபெற்றது. மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அஞ்சலி கூட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் மறைந்த தோழர் பி. சீனிவாசராவ் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள், இந்த மாதத்தில் தியாகிகளான தோழர்கள் சந்திரகுமார்- சந்திரசேகர், சுப்பு, பாலன் உள்ளிட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் தலைவர்கள், தேச விடுதலை இயக்கப் போராளிகள் உள்ளிட்டோரும் மற்றும் பலரும் நினைவு கூரப்பட்டனர்.
கூட்ட முடிவுகள்
1. கனியாமூர் பள்ளி மறுசீரமைப்பு பணிகள் பற்றி தகவல் சேகரிக்க சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ், நிழற்பட நிருபர் அஜித் இருவரும் சக்தி இன்டர் நேஷனல் பள்ளிக்கு ஆதரவான குண்டர்களாலும் தறுதலைகளாலும் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை கூட்டம் வன்மையாக கண்டித்தது. தாக்குதலுக்கு ஆளானவர்கள் உரிய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கூட குற்றவாளிகள் மீது இதுவரை வழக்குகூட பதிவுசெய்ய வில்லை. சிறப்பு புலனாய்வு பிரிவு, (21-09-'22 நாள் ஒருவர் கைது) நாள்தோறும் தேடித்தேடி குற்றமற்றவர்களை கைது செய்து வருகிறது. வழக்கை விசாரித்து வரும் சிபிசிஅய்டி பிரிவு இன்னும் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்தவில்லை. ஆனாலும் கடும் குற்றம் பிரிவுகளில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்டோரை 42 நாட்களிலேயே உயர்நீதிமன்றம் பிணையில் விட்டுவிட்டது. அதோடு, பள்ளியை சீரமைத்து மீண்டும் திறப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கல்வித்துறை இதை தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த நிலைதான், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகளும் அவரது அடியாட்களும் துணிச்சல் பெற்று பத்திரிகையாளர்கள் மீதே கொடூரமான தாக்குதல் நடத்துவதற்கு காரணமென்று கூட்டம் குற்றம் சாட்டியது. தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள், உரிய காவல்நிலையத்தில் புகார் செய்த பிறகும் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லைவில்லை. தொடர்ந்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இங்குள்ள காவல்துறை, சட்டம் ஒழுங்கை காக்கத் தவறி வருகிறது. எனவே கள்ளக்குரிச்சி காவல் சரகத்துக்கு உட்பட்ட காவல்துறையினரை ஒட்டு மொத்தமாக இடம் மாற்றம் செய்யவேண்டும். அதோடு குற்றமிழைத்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோரது பிணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவேண்டுமெவும் கூட்டம் வலியுறுத்தியது.
2. கனியாமூர் பள்ளி மாணவி மர்மக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் இன்னும் அரசு சட்டத்தின் பிடியில் கொண்டு வரவில்லை. முதன்மைக் குற்றவாளிகளை நீதிமன்றம் பிணையில் வெளியே விடுவதை எதிர்த்து அரசுதரப்பு வாதாட வில்லை அல்லது உப்புச்சப்பு இல்லாமல் வாதாடியிருக்கிறது. கல்விக் குற்றவாளிகள் அரசு அதிகாரத்துக்கு சவால் விடுவதும் அரசு அதற்கு பணிந்து போவதும் ஒட்டுமொத்த கல்விச்சூழலுக்கே கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையை வெளிச்சமிட்டு காட்டுகிற வகையிலும் மாணவியின் மரணத்துக்கு நீதி கோரி மக்கள் ஆதரவை திரட்டுகிற வகையிலும் விரிவான பரப்புரை இயக்கத்தை நடத்திட கூட்டம் முடிவு செய்தது. இந்த பள்ளிகுறித்த உண்மைகள் மக்களிடம் சென்றுவிடக்கூடாதென்பதற்காக கட்சிகள், அமைப்புகளின் கருத்துரிமை, உள்ளிட்ட போராட்டங்களை தடுக்கும் வகையில், அதிமுக பாதையில் பயணம் செய்கிற அரசை, கூட்டம் விமர்சனம் செய்தும் இந்த பரப்புரை இயக்கத்தை நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது. இகக (மாலெ) கட்சி, இரண்டு முறை இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை அனுமதி மறுத்த தையும் கூட்டம் வன்மையாக கண்டித்தது. இந்த சம்பவங்களை விளக்கி விரிவான அரசியல் பரப்புரை மேற்கொள்வதன்றும் கூட்டம் முடிவு செய்தது.
3.வேலைப்பிரிவினை:
மாவட்ட வேலைகளை கட்சி வழிகாட்டுதலின்படி, திட்டமிட்ட வகையில் முன் எடுத்துச் செல்வதற்காக வேலைப்பிரிவினையும் பொறுப்புகளும் முடிவு செய்யப்பட்டன. திருநாவலூர், சின்னசேலம் ஒன்றிய கட்சிப் பொறுப்பு தோழர் கலியமூர்த்தி, உளுந்தூர்பேட்டை ஒன்றிய கட்சிப் பொறுப்பு தோழர் ஆறுமுகம், தியாகதுருகம் ஒன்றிய கட்சிப் பொறுப்பு தோழர் கொளஞ்சிநாதன், திருக்கோவிலூர் ஒன்றிய கட்சிப் பொறுப்பு தோழர் தணிகாசலம், தீப்பொறி பொறுப்பு கொளஞ்சிநாதன். அமைப்புத் துறை பொறுப்பு அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
வெகுமக்கள் அமைப்புகளுக்கான கட்சிப் பொறுப்பு:
அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தோழர் ஏழுமலை. அகில இந்திய விவசாயிகள் மகாசபை தோழர் ஆறுமுகம், எஅய்சிசிடியூ கொளஞ்சிநாதன் பெண்கள், மாணவர், இளைஞர் அரங்க கட்சிப் பொறுப்பு கலியமூர்த்தி எனவும் முடிவு செய்யப்பட்டது.
4 நிலைக்குழு தோழர்கள் கலியமூர்த்தி, கொளஞ்சிநாதன், ஆறுமுகம், ஏழுமலை, கந்தசாமி ஆகிய 5பேர் கொண்ட மாவட்ட நிலைக்குழுவை கூட்டம் ஒருமனதாக தேர்வு செய்தது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்டக் கமிட்டிக் கூட்டம் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அவிகிதொச உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்துவது பற்றியும் கூட்டம் விரிவாக விவாதித்தது. நான்கு ஒன்றியங்களில் வரும் அக்டோபர் 10 க்குள் 15 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூட்டம் முடிவு செய்தது.
5. கட்சி அலுவலகம், உறுப்பினர் சேர்ப்பு, மாநாடு நிதி வசூல், பிரதிநிதிகள் தேர்வு, மாநாடு அறிக்கை விவாதம்- கருத்துகள் சேகரிப்பு போன்றவை பற்றி அடுத்து வரும் கூட்டங்களில் முடிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தோழமையுடன்,
T. கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர்
இகக(மா-லெ)
கள்ளக்குரிச்சி மாவட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)