திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் புதிய படமான காளியின் விளம்பர அறிவிப்பு சம்பந்தமாக அவர் எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள், வசைகள், தணிக்கைக்கு உள்ளாக்கப்படுமென்ற அச்சுறுத்தல்கள் அருவருக்கத்தக்கவையாகும். மேலும், இந்தியாவில் வளர்ந்து வரும் இந்து மேலாதிக்க சகிப்புத்தன்மையற்ற சூழலையே இது பிரதிபலிக்கிறது.
பெண்கள், மாற்றுப் பாலுறவு நாட்டமுள்ள (எல்ஜிபிட்டிகியூஐஏ) நபர்களின் சுதந்திரத்தையும் அவர்களை உள்ளடக்கிய தன்மையின் உருவகமாகவும் அதனைத் தழுவியதாகவும் காளி தெய்வத்தை சுற்பனை செய்துகொள்ளும் உரிமை இந்தியப் பெண்களுக்கு இருக்கிறது என்று நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். பெரும்பாலான மதங்களின் ஆணாதிக்க பாதுகாவலர்கள், பெண்களின், எல்ஜிபிட்டிகியூஐஏ நபர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தவும் தணிக்கை செய்யவுமே எப்போதும் விரும்புகிறார்கள். காளியின் படத்தை தணிக்கை செய்வதற்கான முயற்சிகள் (விளம்பரத்தில் புகைப்பிடிப்பது மற்றும் பெருமைக் கொடியை வைத்திருப்பது என்ற) அப்படியான அவர்களின் முயற்சிகளுக்கான அறிகுறியேயாகும். எந்த மதநம்பிக்கையின் அடிப்படையிலும், "தெய்வ நிந்தனை" என்ற குற்றச்சாட்டை சாக்குப்போக்காகக் கொண்டு, வன்முறை, வன்முறைக்கான அச்சுறுத்தல்களில் ஈடுபடுவது என்பது வெட்கக்கேடானதும் கண்டிக்கத்தக்கதுமாகும். குடிமக்கள், கலைஞர்கள். திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆகியோர் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அவர்களுக்குள்ள உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம். கடந்த காலத்தில் பெருமாள் முருகன், தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்ற எழுத்தாளர்களையும் எம் எஃப் உசைன் போன்ற கலைஞர்களையும் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் அச்சுறுத்தியுள்ளதை நாம் கண்டிருக்கிறோம். தற்போது லீனா மணிமேகலையை அச்சுறுத்துபவர்களும் அப்படியான நபர்களே.
டாக்டர் ரதி ராவ்,
தலைவர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்.
மீனா திவாரி,
பொதுச் செயலாளர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்.
கவிதா கிருஷ்ணன்,
செயலாளர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்