விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு ஆதார விலை வழங்கிடுக உள்ளிட்ட 28 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏஐகேஎம், அயர்லா உள்ளிட்ட இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பாக ஜூலை 31 - ஆகஸ்டு 1 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஒன்றிய அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு 3 வேளாண் விரோத சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தினால் மோடி அரசு அந்த சட்டங்களை திரும்பப் பெற்றது. அப்போது பிரதமர் ஆதார விலை குறித்தும் இதர கோரிக்கைகள் குறித்தும் குழு அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பெயரளவில் பாஜகவினரை மட்டும் வைத்து அந்த குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த குழுவை ஐக்கிய விவசாயிகள் சங்கம் நிராகரித்தது. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மீண்டும் மோடி அரசு கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதை கண்டித்தும் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.