(விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளிட்ட “மனுஸ்மிருதி பெண்கள்-சூத்திரர்களைப் பற்றி என்ன சொல்கிறது? என்ற புத்தகத்திற்கு விசிக நிறுவனர்-தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுதிய முன்னுரை)
இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!
மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன் விவரம் அறியாமல் கேட்பது சரி. ஆனால் எல்லாம் அறிந்திருந்தும் சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாக கேட்கின்றனர். இந்துச் சமூகம் எனப்படுவது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியின் அடிப்படை யில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டே அது இயங்குகிறது. சமூகம், கலாச்சாரம் பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் மற்றும் பொருளாதாரம் என அனைத்துமே மனுஸ்மிருதி அடிப்படை யிலான வரையறைகளைக் கொண்டே செயல்படுகிறது. தலைமுறைத் தலைமுறையாகத் தொடர்கிறது. இந்துச் சமூகத்தினரின் இன்றைய வாழ்விலும் மனுஸ்மிருதி என்னும் மனுச்சட்டமே அரசமைப்புச் சட்டமாக இருந்து கோலோச்சுகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்துவிட்டது என்றாலும், அரசியல் தவிர்த்து சமூகம், கலாச்சாரம் உள்ளிட்ட தளங்கள் அனைத்திலும் நூறு சதவீதம் மனுச்சட்டமே அரசமைப்புச் சட்டமாக நடைமுறையிலிருக்கிறது. அரசியல் தளத்திலும்கூட நாடாளுமன்ற சனநாயக நடைமுறைகளில் மட்டுமே சற்று நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டு, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் இன்றைய அரசமைப்புச் சட்டத்திற்கு இடம் கொடுக்கிறது. மற்றபடி அரசியல் தளத்திலும்கூட பெருமளவில் மனுஸ்மிருதியின் தாக்கமே மேலோங்கியுள்ளது.
மனுஸ்மிருதி என்பது வைதீக மதம் என்னும் வேத மதத்தைப் பின்பற்றியோருக்கென மனு என்பவரால் தொகுக்கப் பட்டதாகும். இதனை அவ்வேத மதத்தின் கொள்கை அறிக்கை மற்றும் அரசமைப்புச் சட்டம் எனலாம்.
வேத மதம் என்பது ஆரியர் என்னும் மரபினத்தைச் சார்ந்தவர்களுக்குரிய கலாச்சார நிறுவனமாகும். அதனைப் பின்பற்றும் ஆரியர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும் சமூக அமைப்பு முறைகளை வரையறுத்துள்ள ஒரு கோட்பாட்டு ஆவணம் தான் மனுஸ்மிருதி ஆகும்.
வர்ணாஸ்ரமம் என்பதுதான் மனுஸ்மிருதி யின் அடிப்படையான கோட் பாடாகும். அக்கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்துச் சமூக அமைப்பு முறையும் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதாவது, அச்சமூகம் சவர்ணாஸ் மற்றும் அவர்ணாஸ் எனும் இருபெரும் பிரிவு களைக் கொண்டதென அது வகைப்படுத்துகிறது. அவற்றில், சவர்ணா பிரிவு நான்கு வர்ண அடுக்குகளைக் கொண்டதாகும். அவர்ணா பிரிவு அதற்குட்படாத எதிர்க் கருத்தியலைக் கொண்ட தாகும்.
சவர்ணா எனப்படும் நான்கு வர்ண சமூக அமைப்புக்கான வாழ்வியல் நெறிமுறைகளை வரையறுத்திருப்பதே மனுஸ்மிருதி ஆகும். அத்தகைய மனுஸ்மிருதியின் கோட்பாடாக விளங்கும் வர்ணாஸ்ரமத்தின் மையக் கருப் பொருள், "பிறப்பினடிப்படையில் உயர்வு தாழ்வு" என்னும் கருத்தியலே ஆகும்.
மனுஸ்மிருதியின் கருப்பொருள் வர்ணாஸ் ரமம்; வர்ணாஸ்ரமத்தின் கருப்பொருள் பிறப்பினடிப்படையிலான உயர்வு தாழ்வு; உயர்வு தாழ்வின் கருப்பொருள் பாகுபாடு; பாகுபாட்டின் கருப்பொருள் ஆதிக்கம்; ஆதிக்கத்தின் கருப்பொருள் உழைப்புச் சுரண்டல். எனவே, உழைப்புச் சுரண்டலுக்கான மூலக் கோட்பாட்டு ஆவணம் தான் மனுஸ்மிருதி.
உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதும் உள்ளது. வலியோர் எளியோர் என்னும் முரண்பாட்டின் விளைவாக இது நிகழ்கிறது. ஆனால், இந்திய மண்ணில் மனுஸ்மிருதி வரையறுத்துள்ள வர்ணாஸ்ரமக் கோட்பாட்டின் அடிப்படையில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் உயர்வு தாழ்வு என்னும் பாகுபாடுகளின் வழி யாகவே உழைப்புச் சுரண்டல் நிகழ்கிறது. அத்துடன், உடலுழைப்பு செய்வோர் மிகவும் கீழானவர்கள், இழிவானவர்கள் என்னும் தாழ்வு மனநிலையைக் கட்டமைத்து மீண்டெழ இயலாதவகையில் அவர்கள் சுரண்டலைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. முடக்கி அதாவது, எதிர்ப்போ, கிளர்ச்சியோ, புரட்சியோ வெடிக்காத வகையில் மக்களைப் பிளவு படுத்தியும் உயர்வு தாழ்வு என்னும் உளவி யலால், வர்ணத்தால், சாதியால், பாலினத்தால் உயர்ந்தோர் எனப்படுவோர் எளியோரின் உழைப்பை சுரண்டும் கொடுமையைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏதுவாக மனுஸ்மிருதி வழிவகை செய்கிறது.
மனுஸ்மிருதியின் இத்தகைய ஆதிக்கம், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றால் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாய்ப் பாதிக்கப்படுவது சூத்திர வர்ணச் சமூகப் பிரிவினரும் அவர்ணச் சமூகப் பிரிவினரும் நான்கு வர்ணங்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகப் பெண்களும் ஆவர்.
மனுஸ்மிருதி, தீண்டப்படாதோர், பழங்குடி யினர் ஆகிய அவர்ணப் பிரிவினரைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர்கள் நான்கு வர்ணங்களுக்குள் அடங்கவில்லை. எனவேதான், அவர்கள் அவர்ணஸ்தர் என அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்களை இந்துக்கள் என்னும் வரையறைக்குட்படுத்தி அவர்கள்மீது ஆதிக்கம் செய்வதும் ஒடுக்கு முறைகளை ஏவுவதும், அதன்வழி அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதும் நான்கு வர்ணங்க ளுக்கும் கீழானவர்கள் என இழிவுபடுத்துவதும் தொடர்கிறது.
அதேபோல சவர்ணஸ்தர்களில் நான்காவது வர்ணமான சூத்திரர்கள் மற்றும் நான்கு வர்ணங்களையும் சார்ந்த மகளிர் ஆகியோர் ஒடுக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் தொடர் கிறது. அதற்கு மனுஸ்மிருதியின் வர்ணாஸ்ரமக் கோட்பாடும் அதனைத் தொகுத்த மனு என்பவரும் தான் காரணமாகும்.
மனுஸ்மிருதியை எதிர்ப்பது ஏன்?
புரட்சியாளர் அம்பேத்கர் 1917ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தனது முதல் உரையினை நிகழ்த்திய போது "எனக்கு இறந்த வரைக் கொல்லும் ஆற்றல் இருக்குமானால் நான் மனுவை தேடிக் கொல்வேன்" என்று ஆவேச மாகக் கொந்தளித்தார். அவர் அப்படிக் கொந்தளிக்கக் காரணம் மனு என்பவர் உருவாக்கிய மனுஸ்மிருதி தான்.
அந்த மனு என்பவர் சுமதி பார்க்கவா என்னும் வியாபாரம் செய்யும் பிரிவை சார்ந்த ஒரு வைஸ்யர். அவர் மனுஸ்மிருதி மூலம் இந்தியாவில் நிலவும் சாதியப் பிரிவுகளை நிலைப்படுத்தியதுடன் பார்ப்பன-பனியா சாதிக் கூட்டணிக்கான அடிப்படையை வகுத்தளித்தார். அந்தக் கூட்டணி இன்றுவரைத் தொடர்கிறது. அது மட்டுமின்றி அந்தக் கூட்டணிக்குப் பணிசெய்யும் அடிமைச் சமூகப் பிரிவாகவே சூத்திரர்களை அடையாளப்படுத்தினார் மனு.
இந்த சாதிக் கூட்டணிக்குத் தடையாக இருந்த சத்திரியர்கள் துடைத்தெறியப்பட்டார்கள் என்பதை பரசுராமர் கதை கூறுகிறது. அதாவது, சத்திரிய வர்ணத்தை முற்றாக அழித்தொழிக்கும் வகையில் 'சத்திரிய இனப் படுகொலையைச்' செய்தார் பரசுராமர். சத்திரியகுலப் பெண்களின் கருவறையில் இருந்த குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் கொன்று சத்திரிய வம்சத்தைச் சார்ந்த 21 தலைமுறைகளைப் பூண்டோடு அழித்தொழித்தார் என அக்கதை கூறுகிறது. அதாவது, பார்ப்பனர்களின் நலன்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களின் வம்சத்தையே அழித்தொழிப்பது என்கிற மேலாதிக்கவெறி தான் பார்ப்பனியமாகும்.
அத்தகைய பார்ப்பனீய மேலாதிக்க வெறித்தனத்தை இம்மண்ணில் நிலைநிறுத்திய கோட்பாடுதான் மனுஸ்மிருதியாகும். அதுமட்டு மின்றி, பார்ப்பனரல்லாத பிற வர்ணச் சமூகங்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாமலும் புராண மாயைகளில் சிக்க வைத்து முடக்கி வைத்திருகிறது. மேலும், பிறப்பு முதல் இறப்பு வரையில் அவர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத் துகிறது. அந்த அளவுக்கு மனுஸ்மிருதியானது கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம் நரகம் போன்ற கற்பிதங்களின் மூலம், ஒருவகையான கருத்து மாயையினை உருவாக்கி சுயசிந்தனைக்கு இடமில்லாமல் தடுத்து வைத்திருக்கிறது. அத்துடன், மனுதருமத்தை மீறும் சூத்திரர்க ளுக்கும் பெண்களுக்கும் அளிக்கப்படும் தண்ட னைகள் மூலம் ஒரு பேரச்சத்தையும் உருவாக்கி யிருக்கிறது.
அக்காலத்தில், மன்னர்களை வளைத்துப் போட்டு மனுச்சட்டத்தையே அரசமைப்புச் சட்டமாக ஏற்கச்செய்து அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். அதன்மூலம் சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்குக் கல்வியை மறுத்து அவர்களை மூடநிலையிலேயே கிடக்கவும் நீடிக்கவும் செய்தனர்.
அத்துடன், மனுஸ்மிருதி, வேதங்கள் உள்ளிட்ட இந்துக்களின் புனித மூல நூல்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வராமலும் தடுத்துவிட்டனர். அத்தகைய தடையினை மனுஸ்மிருதியே உருவாக்கி வைத்திருக்கிறது. அதாவது, சூத்திரர்கள் மற்றும் பெண்கள் வேதம் உட்பட எந்த புனித நூல்களையும் கற்கக் கூடாது என்றும் பார்ப் பனர்கள் அவர்களுக்குக் கற்பிக்கக்கூடாது என்றும் தடைவிதித்துள்ளது.
பெண்களுக்கு பூணூல் அணியும் உரிமை இல்லை என்பதால் அவர்களும் சூத்திரர்களே என்பது மனுவின் தீர்ப்பு. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அனைவரும் நரகத்திற்கு போவார்கள் என்று பயம் காட்டுகிறார் மனு. பார்ப்பனர், ஷத்திரியர் வைசியர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்கும் சேவை செய்வதுதான் சூத்திரர்களின் கடமை; அவ்வாறு பணிவிடைகள் செய்வதன் மூலமே சூத்திரர்களுக்குச் சொர்கம் கிடைக்கும் என்றும் கூறுகிறார் மனு. அதுமட்டுமின்றி சூத்திர்களின் பிறப்பே மிகவும் கீழானது என்று வரையறுத் திருக்கிறார். பெண்களைப் பற்றிய மனுவின் எண்ணம் மிக மிக இழிவானதாகும்.
அதாவது, பெண்கள் இயல்பிலேயே சபல புத்தியுடையவர்கள்; பிறப்பிலேயே தாழ்ந்த வர்கள்; உறவுமுறையற்று உடற்கூடலுக்கு முனைவார்கள் என்பதுதான் பெண்களைப்பற்றிய மனுவின் மதிப்பீடு. பெண்களைத் தனியே விடக்கூடாது என்றும்; அவர்கள் பிறப்பு முதல் = இறப்புவரையில் ஆண்களின் கட்டுப்பாட் டிலேயே இருக்க வேண்டும் என்றும்; பெண்கள் கல்விக் கற்கவும் கூடாது என்றும் வலியுறுத்து கிறார் மனு.
அது மட்டுமின்றி பெண்களுக்குக் குழந்தை யிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்றும்; கணவன் இறந்தால் அவளை உடன்கட்டை ஏற்றி அவனுடனே எரித்துவிட வேண்டும் என்றும்; அப்படி இல்லை என்றால் அவள் காலம் முழுவதும் மறுமணம் செய்யாமல் விதவையாக வீட்டில் முடங்கி இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.
இவ்வாறு பெண்களின் உரிமைகள் மற்றும் இயல்பான சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிராக உள்ளார் மனு. மேற்கண்ட வன்கொடுமைகளில் தற்போது கணவனோடு பெண்ணை எரிக்கும் 'சதி வழக்கம்' மட்டும்தான் நடைமுறையில் இல்லை. - மற்றவையெல்லாம் இன்றும் நடைமுறையில் - உள்ளன. மனுஸ்மிருதியைப் படிக்கும் ஒவ்வொ ருவரும் இதனைப் புரிந்துக் கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ்ஐ எதிர்ப்பது ஏன்?
ஆர்.எஸ்.எஸ் என்பது இந்துத்துவம் என்கிற சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இது இந்து மக்களிடையே அமைதியையும் நல்லிணக் கத்தையும் வளர்ப்பதற்கு மாறாக மதத்தின் பெயராலும் வர்ணம் மற்றும் சாதி ஆகியவற்றின் பெயராலும் சமூகங்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் அடிப்படையான நோக்கம் மனுஸ்மிருதியின் வர்ண சாதி பாகுபாடுகளை நீர்த்துப்போகாமல் நிலைநிறுத்துவதே ஆகும். அதன்மூலம் இந்து மதவழி தேசியத்தைக் கட்டமைப்பதும் இந்து மதம் சார்ந்த அரசை உருவாக்கி பார்ப்பனீய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதுமாகும். அதற்கென மராட்டிய சித்பவன் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பார்ப்பனிய மேலாதிக்க மதவெறி அமைப்பே ஆர்.எஸ்.எஸ் ஆகும்.
மராட்டியத்தை ஆண்ட சத்ரபதி சிவாஜி மற்றும் அவரது சந்தததியருக்குப் பின்னர், அவ்வாட்சியில் அமைச்சர்களாக இருந்த பேஷ்வாக்கள் என்னும் பார்ப்பனர்கள் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பேஷ்வாக்களின் ஆட்சியில் மனுஸ்மிருதியை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினர். அதனால், பெண்கள், சூத்திரர்கள் மற்றும் அவர்ணர்களான தீண்டப்படாதவர், பழங்குடி யினர் ஆகியோர் கடுமையான வன்கொடுமை களுக்கு ஆளாயினர். இச்சமூகப் பிரிவினருக்கு கல்வி, அதிகாரம், சுதந்திரம் முதலியவை மறுக்கப்பட்டன. அத்துடன், அவர்கள் விலங்கு களை விட மிக இழிவாக நடத்தப்பட்டனர்.
இவ்வாறு பேஷ்வாக்களின் சனாதன கொடுங்கோலாட்சியின் வன்கொடுமைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்கள், 1818 சனவரி 01 அன்று ஆங்கிலேயப் படையின் துணையோடு பீமா கொரேகான் எனுமிடத்தில் அவர்களின் படையைத் தோற்கடித்து பேஷ்வாக்களின் அரசைத் தூக்கி எறிந்தனர். தோற்கடிக்கப்பட்ட பேஷ்வா பார்ப்பனர்களின் படை சிதறியோடியது. அப்படி சிதறி ஓடியவர்களில் முக்கியமானவர்கள் கொங்கண பார்ப்பனர்கள் என்னும் சித்பவன் பார்ப்பனர்களும் அடங்குவர். பிற்காலத்தில், அவர்களின் வழித்தோன்றல்கள் 107 ஆண்டுகள் கழித்து உருவாக்கிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ் எனும் ஃபாசிச கலாச்சார தேசியவாத அமைப்பாகும். இந்த அமைப்பு உள்வாங்கிக் கொண்ட கொள்கை-கோட்பாடுதான் மனுஸ் மிருதியாகும்.
அத்தகைய மனுஸ்மிருதியை மீண்டும் அதிகாரபூர்வமாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்க வேண்டுமென்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த வர்ணாஸ்ரம சமூகக்கட்டமைப்பை, சமூக ஒழுங்கமைப்பைத் தக்கவைக்க வேண்டுமென்பதே அவர்களின் இறுதி இலக்காகும். அதற்கு சமூகநீதியை முற்றாக சிதைக்க வேண்டும் என்பது அவர்களின் செயல்திட்டமாகும்.
சமூகநீதி கோட்பாடானது பழைய சனாதன சமூக ஒழுங்கைத் தளர்வுறச் செய்கிறது. மெல்லமெல்ல காலப்போக்கில் அவ்வொ ழுங்கைத் தகர்த்துவிடும் என்னும் அச்சத்தையும் உருவாக்குகிறது. அதிகாரம் மறுக்கப்பட்ட வர்களை அதிகார வலிமையுள்ளவர்களாக பரிணாமம் பெறவைக்கிறது. எனவே சமூகநீதிக் கோட்பாட்டைச் சிதைப்பது சனாதனிகளின் தவிர்க்க முடியாத தேவையாகிறது. அதனடிப் படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சமூகநீதிக் கெதிராக நடத்திவரும் வன்முறைகள் மற்றும் பயங்கரவாத செயல்கள் ஏராளமாகும். அவ்வாறு அவ்வமைப்பு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன் முறைகள், கலவரங்கள், சாதிய மத மோதல்கள், குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளைப் பற்றிய ஏராளமான உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.
இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பெரும்பான்மை மதவாதத்தை முன்னிறுத்தி, சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பை விதைத்து, பெரும்பான்மை இந்துக்களின் வாக்குவங்கியைத் திரட்டி ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்பினர் ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் இந்தியாவின் அனைத்து ஜனநாயக நிறுவனங் களையும் கைப்பற்றித் தங்களின் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக் கின்றனர். எனவே, அவர்களைப் பற்றி நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் செயலாற்ற வேண்டியது சனநாயக சக்திகளின் கடமையாகும்.
இந்து மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கை களையும் தங்களின் அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் ஆர்எஸ்எஸ்- பாஜக அமைப்பினர் என்பதை இந்துவாக உணரும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு மக்கள் அவர்களைப் பற்றிப் புரிந்துக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர். ஆகவே,
மனிதகுலத்துக்கே ஒவ்வாத மனுஸ் மிருதியை உயர்த்திப்பிடிக்கும் அவர்கள், அதனை உழைக்கும் மக்களிடமிருந்து மறைக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஏனெனில் உழைக்கும் மக்கள் அதனைக் கற்று அதன் நுட்பமான சதியை அறிந்து கொண்டால் அவர்களின் பார்ப்பனிய மேலாதிக்க நாசகார சிந்தனைகள் வெளிப்பட்டு விடும் என்பதால் தான். எனவே அவர்களை அம்பலப்படுத்தும் வகையில், அவர்களின் சனாதன சதியை முறியடிக்கும் நோக்கில் இது விலையில்லா சிறு நூலாக வெளியிடப்படுகிறது. பார்ப்பன வர்ணத்தவர் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த மனுஸ்மிருதி நூல்கள் மூன்றினை ஒப்பீடு செய்து உருவாக்கப்பட்டுள்ள இச்சிறு வெளியீடு மனுஸ்மிருதியின் உண்மை யான நோக்கங்களைத் தெளிவுப்படுத்தும் என்று நம்புகிறேன். குறுகிய கால இடை வெளியில் இதனைத் தொகுத்துக் கொடுத்த விசிக துணைப்பொதுச் செயலாளர் தோழர் கௌதம சன்னா அவர்களுக்கும் இதனை அச்சிடுவ தற்குரிய பணிகளை ஒருங்கிணைத்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவர்களுக்கும், மற்றும் விரைந்து இதனை அச்சிட்டு வழங்கிய விடுதலை அச்சகத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)