தோழர்களே! இந்த மாநாட்டின் 13 தீர்மானங் களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார வரவேற்று எனது நெஞ்சார்ந்த ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு இரண்டு முக்கியமான நோக்கங்களுக்காக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. கூட்டாட்சி முறையை நடைமுறைப் படுத்திட வேண்டும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும். தேவையான ஒரு சூழலில் இந்த கோரிக்கை களை முன்வைத்து ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. சனாதன பாசிசத்தை எதிர்த்து இடதுசாரி, ஜனநாயக முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைப்பது தான் இன்றைய உடனடித் தேவையாகும். நானும் அப்துல் சமது அவர்களும் இடதுசாரிகளுடன் சேர்ந்து அமர்ந்துள்ளோம். ஒரு மாற்று அணி என்பது தமிழ்நாட்டு அளவில் மட்டுமின்றி இந்திய அளவில் தேவைப்படுகிறது. இத்தனை காலங்கள் கருத்து முரண்களால் சிதறிக் கிடந்த இடதுசாரிகள் கூட இன்றைக்கு ஒரே அணியில், ஒரே மேடையில், ஒரே அரங்கில் ஒரே களத்தில் கைகோர்க்கக் கூடிய தேவையை உணர வைத்த சனாதன பாசிச சக்திகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இஸ்லாமிய அமைப்புகளை மதவாத அமைப்பு களாகவும் அம்பேத்கரிய அமைப்பு களை சாதிய அமைப்புகளாகவும் விமர்ச்சித்துக் கொண் டிருந்த காலம் மாறி இவர்கள் நமக்கான ஜனநாயக சக்திகள், இவர்களோடு கைகோர்க்க வேண்டும் என்ற புரிதல் இடதுசாரி களத்திலே உருவாகியிருக்கிறது. இதுவொரு பரிணாம வளர்ச்சி. இது ஒரு வரலாற்றுத் தேவைக்கான அரசியல் யுக்தி. நாம் உருவாக்குகிற மாற்றணி என்பது தேர்தல் களத்திற்கு மட்டுமே உருவாக்கப்படுகிற மாற்று அணி அல்ல. சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பாசிசத்தை எதிர்க்கிற உழைக்கும் மக்களுக்கான அணி. அதுதான் உண்மை யான மாற்று அணி. எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்லர். இன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்றிலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டுச் செயலாற்றியவர்கள். இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைக்க வேண்டும், மதவெறி தேசியத்தைக் கட்டமைக்க வேண்டும் அதற்காக சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்பது அவர்கள் செயல்திட்டங்களில் ஒன்று. அதற்கு ஏதுவாக பொருளாதார ரீதியான 10% இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்து சட்டமாக்கிவிட்டார்கள். அதுபோல் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 நீக்கப்பட்டு, காஷ்மீர் உடைக்கப் பட்டுவிட்டது. அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிய வேண்டும் அதற்கு முன்னதாக அதைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பது அவர்கள் செயல்திட்டம். இந்த வலதுசாரிகள் வெளிப்படையாகவே ஆயுதங்களைப் பயன்படுத்து கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள். இடதுசாரி அரசியலுக்கு எதிரானவர்கள். சமூகநீதிக்கு எதிரானவர்கள். இவ்வளவு மோசமான எதிரியை எதிர்கொள்ள நாம் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியதிருக்கிறது. மூன்றாவது முறை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் முதலில் கை வைக்கப்போவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதுதான். இந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில்கூட அதை அவர்கள் செய்யலாம். நம்முடைய அரசியல் பகை நாம் நினைப்பதைப் போல இலகுவானது இல்லை. எளிதாக வீழ்த்தப்படக்கூடியவர்கள் இல்லை. மிகமிக ஆபத்தான ஒரு தீய சக்தி. அவர்களை எதிர் கொள்வதற்கு சிபிஐஎம்எல் லிபரேஷன் முன்வைத்தி ருக்கக்கூடிய மாற்று அணி என்பது மிக மிக முக்கியமானது. அந்தக் களத்தில் உங்களோடு விடுதலை சிறுத்தைகள் உற்ற துணையாக இருப்போம். நிபந்தனைகள் அற்ற முறையிலே கை கோர்த்துக் களமாடுவோம். நன்றி வணக்கம்!