தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளத்தில் சாதிய வன்மத்துடன் அங்கிருந்த கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு பொருள்கள் கொடுக்க மறுத்ததன் காரணமாக பிரச்சனை எழுந்து, போராட்டங்கள் நடத்திய பின்னர் சாதி ஆதிக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அவர்கள் ஆறு மாத காலத்திற்கு ஊருக்குள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி வன் கொடுமை தடுப்பு நீதிமன்றத்தால். அதே தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் என்ற ஊரில் உள்ள 7ம் வகுப்பு படித்து வந்த சீனு என்கிற அருந்ததியர் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் அம் மாணவன் படித்து வந்த நாடார் உறவின் முறைப் பள்ளிக்கூடத்தில் பணியில் இருக்கும் உடற் கல்வி ஆசிரியர், சாதிய வன்மத்துடன் மாணவன் சீனுவை, நீயெல்லாம் ஏன் படிக்க வருகிறாய், கழிவு அள்ளப் போக வேண்டியதுதானே என்கிற ரீதியில் பேசியதாகவும் அதனால் மனமுடைந்து அம்மாணவன் தூக்கு போட்டுக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் வேறு சில ஆசிரியர் களும் இதுபோன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களிடம் சாதியாதிக்க வன்மத் துடன் பேசுவது நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள்.
ஆனால், தற்போது விசாரணையில், கடந்த 15ம் தேதி காலையில் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற மாணவன் சீனு, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபின் வந்து தூக்குப் போட்டுக் கொண்டான் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த மாணவனின் உயரத்தைக் கணக்கில் எடுக்கும் போது அவரால் உயரமான இடத்தில் தூக்கு மாட்டிக்கொள்ள இயலாது என்றும் அவன் ஏறுவதற்கு ஏற்ப எந்தவொரு மேசை, நாற்காலி எதுவும் வீட்டில் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி, மேற்படி பள்ளிக்கூடத்தின் காம்பவுன்ட் சுவர் நான்கு அடி உயரம் மட்டுமே உள்ளது என்றும் அம் மாணவனின் வீடானது பள்ளிக்கூட காம்பவுன்ட் சுவரை ஒட்டியே உள்ளது என்றும் அம் மாணவன் வீடும் அதைச்சுற்றியுள்ள இடமும் அருந்ததிய மக்களுக்கு சொந்தமானது என்றும் அதை அந்த பள்ளிக்கூட நிர்வாகத்தினர் கேட்டதற்கு கொடுக்க மறுத்துவிட்டதால்தான் முதலில் காம்பவுன்ட் சுவர் இல்லாமல் இருந்த பள்ளிக்கூடத்திற்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டு இறந்து போன மாணவர் குடும்பத்தினர் சுற்றிச் செல்லும் நிலையை உருவாக்கினார்கள் என்றும் கூறுகின்றனர். உடற்கல்வி ஆசிரியரின் சாதியாதிக்க போக்கு மற்றும் பேச்சு பற்றி தலைமையாசிரியரிடம் தான் முறையிட்டதாகவும் அதற்கு தலைமை ஆசிரியர் சக்கிலியர் யாராவது பள்ளிக்கூடம் வைத்திருந்தால், டி.சி வாங்கிக் கொண்டு அங்கு போய் உன் பையனைச் சேர்த்துக் கொள் என்று சொன்னதாகவும் பையனின் தந்தை கதறுகிறார். இந்த நிலையில், அம் மாணவனை அடித்ததில் இறந்து போய்விட்டதால் பள்ளிக்கூடத்திற்கு அருகே உள்ள அவனது வீட்டில் வந்து தற்கொலை போல் ஜோடித்து விட்டு விட்டார்களோ என்கிற சந்தேகத்தையும் அங்கிருப்பவர்கள் எழுப்புகிறார்கள்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக ளுக்கும் மனு கொடுக்கப்பட்டு, பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத வரை மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என்று அறிவித் துள்ளார்கள் அங்குள்ள மக்களும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் திராவிடத் தமிழர் கட்சி, தமிழர் உரிமை மீட்புக் களம், தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட அமைப்புகள். இந்த மரணம் தொடர்பாக உண்மை அறியும் குழுவாக தென்காசி மாவட்ட இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஐயப்பன், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் சுந்தர்ராஜ், தென்காசி மாவட்ட இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் அயூப்கான் மற்றும் தோழர்கள் மாரியப்பன், தம்பித்துரை, பேச்சி முத்து ஆகியோர் சென்று வந்தனர். காவல் துறையினர் இறந்த மாணவரின் பெற்றோர் இல்லாமலேயே உடற்கூராய்வு செய்து முடித்து விட்டு உடலை வாங்கக் கட்டாயப்படுத்துகிறது.
கோரிக்கையை வலியுறுத்தி 17.10.2022 அன்று வீரசிகாமணியில் மறியல் என்று அறிவித்து இருந்த நிலையில், அந்த பகுதிக்கோ, அரியநாயகிபுரத்திற்கோ செல்ல முடியாத அளவிற்கு போலீஸ் போட்டு தடை செய்து விட்டனர். அரியநாயகிபுரம் ஊருக்குள் வேறு யாரும் செல்ல முடியாதபடி அங்குள்ள மக்களுக்கு பாஸ் கொடுத்து, மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. போலீஸின் நடவடிக்கையைப் பார்க்கும்போது அவர்கள் கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதுபோல் தென்காசியிலும் செயல்படுவதாகவேத் தெரிகிறது.
தமிழகத்தில் மாணவர்கள், இளம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதும் சாதியாதிக்கத் துடன் குறிப்பாக இடைசாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தில் நடந்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நாடார் உறவின் முறை பள்ளிக்கூடத்தில் இதற்கு முன்னர் புதிரை வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மர்ம மரணமடைந்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள். ஆட்சியாளர்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தலையும் வாக்கு களையும் கணக்கில் கொண்டு ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் அல்லது பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் சாதியக் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆனால், சமூக நீதி பேசக் கூடிய தமிழகத்தில், பெரியார் பெயரில் ஆட்சி நடத்தும் திமுகவின் ஆட்சியில்தான் சாதியாதிக்க வன்முறைகளும் கொலைகளும் பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகம் நடக்கின்றன.
அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டார் என்றால், இன்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா ரயிலுக்குள் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவற்றுக்கெல்லாம் காரணம் காவிப் பாசிசஆர்எஸ்எஸ் சங்கிகளின் பிற்போக்கு மதவெறி, சாதியாதிக்கக் கருத்துக்கள் தமிழகத்திலும் வேரூன்றிக் கொண்டு வருவ தையே காட்டுகிறது. ரவுடிகளை வளர்த்து விடுவது, வேலையில்லா இளைஞர் களை கூலிப் படைகளாக, அடியாட்களாக மாற்றுவது போன்ற வேலைகளை பாஜக மிக வேகமாக தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது என்றால், இன்னொரு புறம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக இதுபோன்ற சாதியாதிக்க மனோபா வத்துடன் செயல்படுபவர்கள் மீதும், பெண்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பவர்கள் மீதும் உடன் நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, குற்றவாளி களைக் காப்பாற்றும் மும்முரத்தில்தான் உள்ளது. இது பெரியாரின் கனவை தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, காவிப் பாசிசத்தின் காலடிச் சத்தத்தை தமிழகத்தில் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
தமிழ்நாடு அரசு மாணவன் மரணத்திற்குக் காரணமான அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
சாதியாதிக்க வன்மத்துடன் செயல்படும் மேற்படி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
மரணமடைந்த மாணவன் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)