பாஜக சங்கிகள் திடீரென தாய் மொழிக் கல்வி பற்றிப் பேசுகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் ஆர்எஸ்எஸ்-ன் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் தாய் மொழிக் கல்வி பற்றியும் மக்கள் தொகை கட்டுப்பாடு, சிறுபான்மை யினரிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துதல், பெண்கள் அதிகாரம் பற்றி எல்லாம் பேசவிருக்கிறார்களாம். மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறைச் செயலாளர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, சட்டம் தொடர்பான படிப்பை தாய் மொழியிலேயே படிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அனைவருக்கும் நீதி எளிதாகக் கிடைக்கும் என்றும் பேசியுள்ளார். இன்னொருபுறம் மறுமலர்ச்சி நாளில், மத்திய பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவப் படிப்பை, எம்பிபிஎஸ் படிப்பை இந்தி மொழியில் பயிலுவதற்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகம் இந்தி மொழியில் இருக்கிறது. அதில் அனாட்டமி (Anatomy) என்பதை அப்படியே இந்தியில் அடித்துள்ளார்கள். அனாட்டமி என்பதை தமிழில் உடற்கூறியல் என்று மொழி பெயர்த்துச் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனாலும், எம்பிபிஎஸ் படிப்பை ஆங்கிலத்தில் பயின்றால் மட்டுமே உலகளவில் இருக்கக் கூடிய மருத்துவ அறிவைப் பெற முடியும். சீனாவிலும் ஜப்பானிலும் கூட ஆங்கிலத்தில் மருத்துவப் படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இந்தச் சூழலில் இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு, தாய் மொழியில் சட்டப்படிப்பு என்றும் சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கும் சங்கித் தலைவர்கள் கூறுகிறார்கள் என்றால் இவர்களது உண்மையான நோக்கத்தை நாம் உற்று நோக்கத்தான் வேண்டும். சமீபத்தில் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு நாடு முழுவதும் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதற்கு எதிராக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மொழித் திணிப்பை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மற்றொருபுறம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முதலாளிகள் இந்தி படித்தால் இந்தியா முழுவதும் வேலைக்குச் செல்லலாம் என்று மீண்டும் பழைய பல்லவியைப் பாட ஆரம்பித்துள்ளார்கள். எந்தவொரு பாடத்தையும் அவரவர் தாய் மொழியில் படிப்பதுதான் சிறந்தது என்று சொல்கிறபோது, தாய் மொழிக் கல்வியில் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை எல்லா மொழிகளிலும் அமித்ஷா ஏன் அமல்படுத்த முன்வரவில்லை. மாறாக இந்திக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார் ஏன்? பிரதமர் மோடி முதலில் உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக அந்தந்த பிராந்திய மொழியை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கட்டும். தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, தபால் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலையளிக்கட்டும். மாறாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் இனி அலுவல் மொழியாக இந்திதான் இருக்கும் என்றும் ஆங்கிலம் கூடாது என்று உத்தரவு போடுகிறது ஒன்றிய அரசு. இதன் மூலம் இந்தி பயில்வதைக் கட்டாயமாக்குகிறது. மோடி அரசு ஒரு மொழி, ஒரு தேசம், ஒரே கலாச்சாரம் என்ற ஒற்றைத் தன்மை கொள்கையை படிப்படியாக அமல்படுத்துவதை நோக்கியே காய் நகர்த்துகிறது. நாடாளுமன்ற அலுவல் குழு பயிற்று மொழியாக இந்தி மொழி இருக்கும் என்று பரிந்துரைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் பிரதமர் மோடி சட்டப்படிப்பு தாய் மொழியில் படித்தால் நல்லது என்று பசுப்புகிறார். இவர்களின் நடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தி மொழித் திணிப்பை முறியடிக்க வேண்டும்.