ஆர்எஸ்எஸ் அக்டோபர் 2ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரியது. அன்றைய நாளில் சமூகநீதி மனிதச் சங்கிலிக்கும் அனுமதி கோரப்பட்டது. எனவே யாருக்கும் அனுமதி இல்லை என்று தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அக்டோபர் 11 அன்று சமூகநீதிக்கான மனிதச் சங்கிலி எவ்விதப் பிரச்சனையும் இன்று நடந்து முடிந்தது. ஆனால், ஆர்எஸ்எஸ் 60 இடங்களில் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி பேரணி நடத்த நீதிமன்றம் மூலம் அனுமதி கோரியுள்ளது. இந்தப் பேரணியின் மூலம் பெரும் கலவரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லால், பிரதமர், முதல்வருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும், சாலைப் போக்குவரத்தை நிறுத்தி வைத்து வழிவிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு அரசாங்கப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கும் அரசாங்கப் பாதுகாப்பும் படடோடபமும் தரப்படுகிறது. அதிமுக போய் திமுக வந்த பின்னரும் ஆர்எஸ்எஸ்-சங்கிகளுக்கு அவர்கள் கூட்டம் நடத்தினால் அவர்கள் விரும்பம்போல் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. அதே வேளை, இக்க(மாலெ) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் அரங்கக் கூட்டம் நடத்தினால்கூட கடும் கெடுபிடியை தமிழ்நாடு காவல்துறை காட்டுகிறது. இது முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளின் நடவடிக்கைகளை முடக்கும் செயலாகும். இடதுசாரிக் கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கு தோரணக் கொடிகள் கட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கும், அப்புறப்படுத்தும் காவல்துறை, ஆர்எஸ்எஸ் பேரணி என்றாலே கம்பும் வேலும் அவர்கள் கையில் இருக்கும் என்கிற நிலையில் அதற்கு மட்டும் அனுமதி வழங்கலாமா? அப்படியென்றால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள தமிழ்நாட்டின் காவல்துறை, காவிகளின் அராஜகச் செயல்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்று சொன்னால், அது தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களித்ததற்கு என்ன பொருள்? கோயமுத்தூர் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை வைத்து, அண்ணாமலையும் ஆர்எஸ்எஸ்ஸூம் அரசியல் செய்து வருகிறார்கள். அக்டோபர் 31 அன்று கோயமுத்தூரில் பந்த் என்று அறிவித்தார்கள். பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திட்டமிட்டபடி பந்த் நடக்கும் என்று அறிவிக்க, அண்ணாமலையோ நான் பந்த்திற்கு அழைப்பே கொடுக்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார். திமுக அரசு கார் வெடிப்பு அதை தொடர்ந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முனையத்திடம் கொடுத்துவிட்ட பின்னரும் (தமிழ்நாடு காவல்துறையைக் கொண்டே விசாரணை நடத்தியிருக்கலாம் தமிழக அரசு) ஆளுநர் ஆர்.என்.ரவி நான்கு நாட்கள் தாமதம் ஏன்? என்று அரசியல் பேசுகிறார். நீட் தேர்வு ரத்து, 6 தமிழர் விடுதலை போன்ற பல பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பி ஆண்டுக் கணக்கில் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ள ஆளுநர் ஆர்எஸ்எஸ்காரராகவே பேசுவது அனுமதிக்க முடியாததாகும். ஏற்கனவே மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை இல்லம் தேடிக் கல்வி என்றும், நீட் தேர்வு தொடர்வது மக்கள் விரோத மோட்டார் வாகனப் போக்குவரத்து விதிகள் (சாராயக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருடன் கூட வருபவருக்கும் அபராதம் எனும் அபத்தத்தை) அமலாக்கம் என்றும் ஒன்றிய அரசுடைய கொள்கைள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழ்நாட்டில் திராவிட மாதிரி ஆட்சியில் அமலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வழியில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்படுமானால், தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சி, பெரியார்-அண்ணா வழியில் ஆட்சி என்பதற்கு அர்த்தமின்றிப் போகும்.