காவிப் பாசிச பாஜக அரசு, தமிழ்நாட்டில் எப்படியாவது காவிக் கொடியைப் பறக்கவிட்டிட வேண்டும் என பல திட்டங்களைத் தீட்டி வருகிறது தெரிந்த ஒன்றுதான். அப்படி பாசிச பாஜக கொண்டு வரும் திட்டங்களையெல்லாம் முறியடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அதன் வழியிலேயே தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசும் பின் தொடர்ந்து செல்வதானது தமிழ்நாட்டு மக்களை, தங்களுக்கு வாக்களித்து அரியணையில் உட்கார வைத்த மக்களைத் தண்டிக்கும் செயல் ஆகிவிடாதா? பாஜகவின் தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றி இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது ஒருபுறம் ஒன்றிய அரசின் வழியில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி விட்ட தமிழக அரசு, மற்றொருபுறம் மின்சார இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆதார் என்பது அறிமுகப்படுத்தப்பட்ட போதே எல்லா நடவடிக்கைகளையும் ஆதார் எண்ணுடன் இணைத்து, பின்னர் தனி மனித சுதந்திரத்தையே பறிக்கும் நிலைக்கு அது இட்டுச் செல்லும் என்று சமூக ஆர்வலர்கள் பலர் எச்சரிக்கைவிடுத்தார்கள். அனைவரும் வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் என்றார் மோடி ஆட்சிக்கு வந்தவுடன். எரிவாயு மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் போடப்படும் அதனால் எல்லாரும் எரிவாயு கணக்குடன் ஆதார் எண்ணை இணையுங்கள் என்றார். பின் வங்கிக் கணக்குடன் இணைக்கச் சொன்னார்கள். இப்போது என்ன நடக்கிறது? ஆயிரம் ரூபாய்க்கும் மேல் எரிவாயு சிலிண்டர் விற்கிறபோது எந்தப் பணமும் நம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை. நாமெல்லாம் கைப் பணத்தைக் கொடுத்து சிலிண்டர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ரூபாய் 500, 1000 செல்லாது என்று அறிவித்து அதை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் மக்கள் காத்துக் கிடந்து செத்தது போல் இப்போது மின்சாரக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்கக் காத்துக் கிடக்கிறார்கள். பணமதிப்பு இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, நடுத்தர மக்கள்தான். அதேபோல் இப்போது மின் கட்டண உயர்வு, ஆதார் எண் இணைப்பு என்று நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் பாதிக்கப்படப் போவது ஏழை, நடுத்தர மக்கள்தான். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் நிலை இதனால் சிக்கலுக்குள்ளாகலாம். எல்லாம் டிஜிட்டல் மயம் என்று ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதுவும் ஒழுங்காக வேலை செய்வதே கிடையாது. எல்லாவற்றிலும் முறைகேடுகள். எல்லாவற்றையும் ஆதாருடன் இணைக்கச் சொல்லிவிட்டு, ஆதார் அட்டை இருந்தாலும் வேறு அடையாள அட்டைகள் ரேசன் அட்டை, பான் கார்டு போன்றவற்றை அடையாளத்திற்கு கேட்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. அனுமார் பெயருக்கே ஆதார் அட்டை போட்டவர்கள் அல்லவா. மத்திய மோடி அரசின் போக்குவரத்து சட்ட விதிகளை தமிழ்நாடு அரசும் அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் அதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மீது, தமிழர்கள் மீது பற்று இருப்பதாக் காட்டிக் கொள்வதற்காக காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள் மோடியும் யோகியும். அதற்கு இங்கிருந்து மாணவர்களை அழைத்துச் சென்று, சங்கிகள் பயிற்சியளிக்கிறார்கள். அவர்கள் என்ன காசிக்குக் கூட்டிச் செல்வது நாங்களும் உங்களை காசிக்குக் கூட்டிச் செல்கிறோம் என்று திமுக அரசும் போட்டி போட்டு மக்களை காசிக்குக் கூட்டிக் கொண்டு போகிறது. காவிச் சங்கிகளுக்கு எதிராக, பாஜகவின் கொள்கைத் திட்டங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லிக் கொண்டு, கார்ப்பரேட் ஆதரவு, தனியார்மயக் கொள்கைத் திட்டங்களை சத்தமில்லாமல் அமல்படுத்தி தமிழக மக்களைத் தத்தளிக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக டாஃபே டிராக்டர் தொழிற்சாலை தொழிலாளர்கள் முதல் மாற்றுத் திறனாளிகள் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகள் எதிலும் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தயாராக இல்லாமல் இருப்பதால் மக்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாதகாகும்.