தோழர் என்கே மீது பலருக்கும் மிக உயர்ந்த மரியாதை ஏற்பட்டதற்குக் காரணம் அவர் மிகமிக எளிமையானவர். வாழ்நாள் முழுக்க மிகமிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து உதாரணமாக திகழ்ந்தவர். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர். அவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து அவர்களை போராட்டங்களில் அணிதிரட்டியவர் என்பது ஆகும்.

அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றிய போராட்டம், கட்சி விசைத்தறி தொழி லாளர்களைத் திரட்ட அவரை பொறுப்பாக்கிய போது நடந்த போராட்டம் ஆகும். உரிமைகள் ஏதுமற்ற, அநியாயங்களைத் கேட்பதற்கு யாருமற்ற, விசைத்தறி முதலாளிகளுக்குப் பயந்தே வாழ்ந்து வந்த, அந்த அமைப்பாக் கப்படாத தொழிலாளர்கள், அத்தகைய மாபெரும் போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்திட முடியும் என யாரும் நம்பவில்லை. 85- 86 காலகட்டத்தில், குமாரபாளையத்தில், போராட்டத்தை அடக்க வந்த போலீஸ் பட்டாளத்தை எதிர்த்துப் போராடினார்கள் பெண் தொழிலாளர்கள். சிபிஅய் எம் எல் கட்சியின் தலைமையில், விசைத்தறி தொழிலாளர் தலைமையில் நடந்தது அந்தப் போராட்டம்.

இன்னொரு முக்கியமான, மறக்க முடியாத நிகழ்வு பிரிக்கால் போராட்டம். தோழர் என் கே அப்போது கோவையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். பிரிக்காலில் நடந்த அசம்பாவித சம்பவம் காரணமாக வெள்ளை பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது அரசாங்கம். ஜனநாயக செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தைத் திறந்தால் கைது செய்து கொண்டு போய் விடுவார்கள் என்ற நிலை. சங்கத் தலைவர் மீது அநியாயமாக பொய் வழக்கு. தலைமறைவு. எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. சில நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். தொழிலாளி என தெரிந்தாலே கைது. பேருந்து நிலையத்தில் கூட நிற்க முடியாது. அப்படிப்பட்ட அடக்குமுறை நிறைந்த காலகட்டத்தில் நடந்த போராட்டம்.

கடும் அச்சத்தில் இருந்த தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை அணுகி, பேசி, தைரியம் ஊட்டி,போலீஸ்அடக்குமுறைக்கு எதிராக மிகப் பெரும் பேரணியை கோவை மாநகரத்தில் நடத்தினோம். நிர்வாகமோ, அரசோ பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், அத்தகைய இக்கட்டான சூழலில் அணி  திரள்வதை எதிர்பார்க்கவில்லை. 

பொது மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு அச்சத்தைப் போக்குவது, உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்குவது அன்றைய தலையாய கடமையாக இருந்தது. அந்த அடக்குமுறை எதிர்ப்புக் கருத்தரங்கத்திற்கு, உண்மையை விளக்கும் கருத்தரங்கிற்கு, ஏஅய்சிசிடியுவின் அன்றைய பொதுச் செயலாளர்,

தோழர் ஸ்வப்பன் முகர்ஜியும் வந்து இருந்தார். அந்தப் போராட்டம் அமைப்பாக்கப்பட்ட நினைவை, என் கே வுடன் சேர்ந்து பணியாற்றிய அந்த நினைவை என்றுமே மறக்கவே முடியாது. அந்த அடக்குமுறை எதிர்ப்புக் கருத்தரங்கம் தோழர் என் கே தலைமையில் தான் நடைபெற்றது. 

தோழர் என்கே மாநில செயலாளராக இருந்த போது சேர்ந்து பணியாற்றிய அந்த நாட்களும் மறக்க முடியாதவை. தமிழக உட்கட்சி வாழ்க்கையின் மிக நெருக்கடியான தருணத்தில் அவர் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருந்தார். மூன்றே வருடங்கள்தான் அவர் மாநிலச் செயலாளர். ஆனால், தமிழக கட்சி வரலாற்றில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் அவர் தலைமை தாங்கிய காலத்தில் நடைபெற்றது.

கட்சியின் சுதந்தரத்தை உயர்த்தி பிடிக்கும் அதே வேளையில், தமிழகத்தில் உள்ள இதர இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்க ளோடு சேர்ந்து செயல்படுவது, ஒரு அணியாக ஒன்று படுவது காலத்தின் தேவை, காவி பாசிஸ்டுகளை விரட்டியடிக்க அவசியமானது என கருதினார். அகில இந்திய அளவில் 2018ல் நடந்த கட்சியின் 10வது காங்கிரசிலேயே இந்த கட்சி வழி நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட, தமிழகத்தில் அது நடைமுறைக்கு வந்தது தோழர் என்கே மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில்தான். அதற்கு தோழர் என்கேயும் அவரோடு சேர்ந்து செயல்பட்ட கூட்டுத் தலைமையும் தான் காரணம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

2019ல் கூடுவாஞ்சேரியில் நடந்த அந்த மாநில ஊழியர் கூட்டத்தில் இருந்து கடைசியாக 11வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது வரையிலான அந்தப் பயணத்தில் நாம் போற்றிட, நினைவில் ஏந்திட, கற்றுக் கொள்ள பல அம்சங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் சிபிஅய் எம்எல் கட்சியை மிகப் பெரும் கட்சியாக மாற்றுவது, வளர்ப்பது மட்டும்தான் கட்சிக்கு உள்ளும் வெளியிலும் பல விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வல்லது என்ற கருத்தை முழுமையாக உள்வாங்கி இருந்தார்.

சில்லறை விசயங்களில் திசை தப்பி விடாமல் மையக் கடமையில் உறுதியாக ஊன்றி நிற்பதன் மூலமாக மட்டுமே கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் என்று அதை நோக்கி கடுமையாக பணியாற்றினார்.

துணிச்சலான முன்முயற்சிகள் மேற் கொள்வதில் தயாராக முன் நின்றார். மறுசீரமைப்பு இயக்கம் நடத்துவது என்ற முடிவை நடை முறைப்படுத்துவதில் முன்னணியில் நின்றார். வழமைக்கு மாறாக முடிவுகள் மேற்கொள்ளப் படும் போது துணிச்சலாக அவற்றை அமல் படுத்தினார்.

பலரும் மேற்கொள்ள தயங்கும் முடிவு களையும் கூட எடுப்பதில் மத்திய கமிட்டி அணுகுமுறையுடன் இணைந்து நின்றார். செய்து தான் பார்க்கலாமே என்று எந்த முயற்சியையும். அது பரிசோதனையாக இருந்தாலும் கூட, எடுப்பதற்குத் தயங்கியதில்லை.

தமிழகத்தின் குறிப்பான அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அதே நேரத்தில், தமிழக கட்சி, அகில இந்திய கட்சியின், கட்சி வழியின் ஒரு அங்கமாகத்தான் இருக்கமுடியும் இருக்க முடியுமே தவிர வேறொன்றாக இருக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார். அவருக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடு உண்டா இல்லையா என அவர் சிந்தித்ததே இல்லை. கட்சியின், கமிட்டியின் முடிவு என்றால் அதை சற்றும் பிசகாமல் செயல் படுத்துவதில் முன்னணியில் இருந்தார்.

தோழர் என்கே பல விதங்களிலும் தான் கட்சியின் பிரதிநிதி என்று கருதினாரே தவிர தன்னை மட்டுமே முன்னிறுத்த வேண்டும் என முயற்சித்தது இல்லை. கட்சியை விட தான் பெரியவன் என கனவிலும் நினைத்திடவில்லை. தன் நிறை குறைகள் என்ன என அவர் புரிந்து வைத்திருந்தார். அவரால் செய்ய முடிந்தாலும், முடியாவிட்டாலும் கூட, செய்பவர்களுக்கு அவர் வாய்ப்பு அளித்தார். தமிழகத்தில் ஒரு கூட்டுத் தலைமையை நிறுவுவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்று இருக்கிறோம் என்றே கூற வேண்டும்.

11வது மாநில மாநாடும், பொதுச் செயலாளர், தோழர் திபங்கர் அவர்களும் அறைகூவல் விடுத்தது போல சிபிஅய்எம்எல் கட்சியை மிகப் பெரும் கட்சியாக, வலுவான கட்சியாக வளர்த்தெடுப்பது தான் நமது லட்சியம், தோழர் என் கே யின் லட்சியம், கனவு. அந்த லட்சியத்தை, அந்தக் கனவை நனவாக்கிட, தோழர் என்கேயின் பாதையிலே முன்னேறுவோம்!

தோழர் என்கே நினைவைப் போற்றுவோம்! மிகப் பெரிய, வலுவான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி எழுப்புவோம்!