கட்சி முழுவதும் தோழர் என்கே என்று அழைக்கப்பட்ட நீலகண்டன் நடராஜன் பிறந்ததிண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த அரசப்பிள்ளைபட்டியில் அவரது உடல்அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமை நாளில்தோழர் என்கே திண்டுக்கல் மாவட்ட கட்சிஅலுவலகத்தில் 11 ஆவது கட்சிக் காங்கிரஸ் தயாரிப்புக்கான மாவட்ட கமிட்டிக் கூட்டத்தைநடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும் நேரத்தில் உடல் நிலை சரியில்லையென்று தோழர் என்கே சொன்னதால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர், சற்றும் எதிர்பாராத நிலையில் எவரும் எதிர்பாராதவாறு இறந்து விட்டாரென்ற பேரதிர்ச்சி செய்திதான் நமக்கு இடி போல வந்து சேர்ந்தது. செய்தியை அறிந்துகொண்ட திண்டுக்கல் மாவட்டத்தின் சிபிஐ(எம்) கட்சி செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் தோழர்கள் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
அன்றிரவே தோழர் என்கேவின் உடல் அவர் பிறந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரின் தம்பி பேராசிரியர் விஜயகுமார் மற்றும் குடும்பத்தார் கனத்த இதயத்துடன் தோழர் என்கேவின் உடலை எதிர்கொண்டனர்.
11.12.2022 காலை முதலே அரசப்பிள்ளைப்பட்டி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்டுகள் திரண்ட வண்ணமிருந்தனர். என்கேவின் உடல் வைக்கப்பட்டிருந்த அவரது வீட்டில், விரிவான ஏற்பாடுகளை, என்கேவின் இளவல் விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தாரும் தோழர் என்கேவின் ஊர் நண்பர்களும் செய்திருந்தனர். அங்கு நடந்த அஞ்சலிக் கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தோழர் சுப்புராமன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் தோழர் மதிவாணன் நிகழ்ச்சியை நடத்தினார். தோழர் என்கேவுக்கு தானும் அஞ்சலி செலுத்துவதைப்போல, மழையும் சேர்ந்து கொண்டது.
தோழர் என்கேவிற்கு அஞ்சலி செலுத்த சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகளுடன் வந்திருந்தார். தோழர் என்கேவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின், அஞ்சலி கூட்டத்தில் பேசிய தோழர் பாலகிருஷ்ணன், "இன்றைய அபாயகரமான அரசியல் சூழலில் இடதுசாரி ஒற்றுமைக்காக பெரும் ஆற்றலுடன் இயங்கியவர் " என்றும் "சிபிஐ, சிபிஐ எம், விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்ட சிபிஐ எம்எல் கட்சியின் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர்" என்றும் புகழஞ்சலி செலுத்தியவர், செயலாளரை இழந்து பேரிழப்புக்கு ஆளான கட்சியினர், குடும்பத்தினரது துயரத்தில் பங்கேற்பதாகச் சொன்னார்.சிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ர் தோழர் சந்தானம் புகழஞ்சலி செலுத்தினார். எஸ்யூசிஐ(சி) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சத்தியமூர்த்தி இடதுசாரி ஒற்றுமையை வலியுறுத்தி அஞ்சலி உரையாற்றினார். புரட்சிகர சோசலிச கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.தங்கப்பெருமாள் அஞ்சலி தெரிவித்து பேசினார்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மாலெமா)வின் சார்பாக பேசிய தோழர் ஆரோக்கியமேரி, என்கேவின் மாறாத புன்னகையும் மலைக்காத உள்ளமும்தான் நினைவுக்கு வருவதாக கூறினார். இடது தொழிற்சங்கத்தின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) தோழர் ஏ.கோவிந்தராஜ், நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களை அமைப்பாக்குவதில் ஈடுபட்டு தொழிற்சங்க முன்னோடிகளை என்கே உருவாக்கியதை நினைவு கூர்ந்தார்.பியூசிஎல் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரும் வழக்கறிஞரும் நாவலாசிரியருமான தோழர் பாலமுருகன், கோவை தொழிலாளர்கள் மத்தியிலும், நாமக்கல்லில் கொத்தடிமை நிலையில் பணியாற்றிய விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் அவர் மேற்கொண்ட துணிச்சல் மிகுந்த பணிகளை நினைவு கூர்ந்தார். உயிரை தூசாக எண்ணி அவர் நடத்திய போராட்டங்களை சுட்டிக்காட்டி தோழர் பாலமுருகன் பேசினார். தோழர் என்கே தனது சொந்த ஊருக்கு நீண்டகாலமாக செல்லவில்லை என்றாலும், அந்த ஊரைச் சேர்ந்த தன் வயதொத்த சிபிஐ(எம்) தோழர்களுடன் கருத்துப்போர் செய்வதைத் தொடர்ந்து வந்திருக்கிறார். சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த அரசப்பிள்ளைப் பட்டி கிராமத்தின் தோழர்கள் கதிர்வேலும், பெரியசாமியும் என்கேயுடனான தங்கள் உறவைப் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். மரணத்துக்கு முதல் நாள் தோழர் என்கே தன்னை தொலைபேசியில் அழைத்து அரசியல் விவாதம் செய்ததை ஒலிபெருக்கியில் ஒலி பரப்பிக்காட்டினார் தோழர் கதிர்வேல்.
நமது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள், ரேவதி, சங்கரபாண்டியன், சிம்சன், இரணியப்பன், சுந்தர்ராஜன் ஆகியோர், கட்சியின் நெருக்கடியான காலகட்டத்தில் தோழர் என்கே ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்தனர். "தோழர் என்கேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அந்த மாரடைப்பு ஒரு நொடி எங்களுக்குள்ளும் மாரடைப்பாக இறங்கிவிட்டது" என்று கூறிய ரேவதி, தோழர் என்கே இறக்கவில்லை, அவர் என்றும் நம்மோடு இருப்பார் நமது போராட்டங்களோடு இருப்பார்" என்றும் கூறினார். இறுதியாக பேசிய தோழர் பாலசுந்தரம், "கரட்டுப்பட்டி முத்துராஜ் அவர்களால் கட்சியை பற்றி அறிந்து கொண்ட என்கே, அவரது பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தோழர் பி.வி.சீனிவாசனது புரட்சிகர வசிகரிப்பால் ஈர்க்கப்பட்டு, முழுநேர புரட்சியாளராக தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அப்போது முதல், தனது உறுதியில் சற்றும் தளராமல் மாநில கமிட்டியை இறுதி கணம் வரை வழிநடத்திச் சென்றதை விவரித்து உறுதியேற்பு அஞ்சலி செலுத்தினார்.
நமது கட்சியின் கேரள மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் ஜாய் பீட்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சிபி(எம்எல்) (மக்கள் விடுதலை) கட்சியின் சேர்மன் தோழர் ஜே.சிதம்பரநாதன் அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தார். பல்வேறு நட்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் கோவை மாவட்ட பொறுப்பாளர் லோகநாதன் உள்ளிட்ட தோழர்களும் என்கேவின் இறுதிப்பயணத்தில் கலந்து கொண்டனர். பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தை தமிழ்நாட்டின் மிகப்பெரிய போர்க்குணமிக்க போராட்டமாக எழுப்பி நிறுத்தியதில் முக்கிய தூணாக விளங்கிய தோழர் என்கேவுக்கு அஞ்சலி செலுத்த, பிரிக்கால் தொழிலாளர்கள் ஜெயப்பிரகாஷ், நடராஜன் உள்ளிட்ட தோழர்களும் வந்திருந்தனர். கட்சியின் மத்தியக்கமிட்டி உறுப்பினர்கள், மாநிலக்கமிட்டி உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் தோழர் என் கேவின் இணையர் தோழர் தேன்மொழி உள்ளிட்டவர்கள் செங்கொடியை தோழர் என் கே மீது அணிவித்துஇறுதி மரியாதை செலுத்தினர். என்கேவின் உடலைச் சுமந்த ஊர்தி, மத்திய, மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள், வெகுமக்கள் அமைப்புகளின் தலைவர்கள் மாவட்டங்களிலிருந்து திரண்டு வந்திருந்த தோழர்கள், ஆதரவாளர்கள் பின்தொடர, தாழ்த்திய செங்கொடிகள், தோழர் என்கே உருவப் பதாகை களைத் தாங்கிய பெண் தோழர்கள் உள்ளிட்ட அணிவகுப்பு ஊர் முழுவதும் சுற்றிச் சென்றது. அரசபிள்ளைப்பட்டி ஊர் மக்களும் திரண்டு நின்று தங்களது துக்கத்தை வெளிப்படுத்த, தோழர் என் கே வின் இறுதிப் பயணம் இடுகாட்டில் முடிவடைந்தது.
தலைமறைவு காலம் முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று இக்கட்டான தருணத்தில் கட்சியின் மாநில செயலாளராக துணிந்து பொறுப்பேற்று கட்சியை முன்னரங்குக்கு வெற்றிகரமாக கொண்டுவந்து தமிழ்நாட்டில் வலுவான, விரிவான கட்சியைக் கட்டும் உத்வேகத்துடன் பாடுபட்டு தனது உயிர் உள்ளிட்ட அனைத்தையும் கட்சிக்கு அர்ப்பணித்த தோழர் என் கே நடராஜனின் வழியில் நடக்க உறுதியேற்போம் என்ற புரட்சி முழக்கங்கள் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)