தோழர்களே! சிபிஐஎம்எல் கட்சியின் மாநாடு வெற்றிபெற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுவின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் நாட்டின் நிலைமைகளை எல்லாம் தெளிவுபட எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி என்கிற அரசியல் கட்சி ஆர்எஸ்எஸ்ஸின் அங்கமாகச் செயல்படுகிறது. அவர்களுக்கு நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில், மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கை கிடையாது. மனுதர்மத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்பாக ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தேசிய கல்விக் கொள்கை எல்லாம் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான். மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல, இருக்கிற பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டி ருக்கிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறோம் என்று சொன்னவர்கள் இப்போது 71 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மோடி காசி தமிழ் சங்கமத்தில் தமிழைப் புகழ்ந்து பேசுகிறார். வெகுசிலரே பயன்படுத்துகிற, சாமியிடம் மட்டுமே பேசப்பயன் படுத்துகிற சமஸ்கிருதத்திற்கு மோடி 2018ல் ஒதுக்கியிருக்கிற தொகை 198 கோடியே 31 லட்ச ரூபாய். தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 10 கோடியே 59 லட்ச ரூபாய். 2019-20ல் சமஸ்கிருதத்திற்கு 231 கோடியே 15 லட்ச ரூபாய். தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 7 கோடியே 7 லட்ச ரூபாய்தான். இந்த பிரதமர்தான் உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் என்றும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறார். பாரதி காசியில்தான் முறுக்கு மீசை வைத்தார் என்று சொன்ன மோடி, அங்கு பாரதி தான் அணிந்திருந்த சாதியின் அடையாளமான பூணூலை அறுத்தெறிந்தார் என்பதைச் சொல்லவில்லை. நாட்டின் அனைத்து உயர்பதவிகளில் இருப்பவர்களும் ஒன்றிய அரசின் அடியாட்களாகப் பயன்படுத்தபடுகிறார்கள். தமிழ்நாட்டில், கேரளத்தில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் அடியாட்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆளுநர் ரவி, இந்தியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் சில சக்திகளால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. அதற்கு அறிவார்ந்த சமூகம் என கூறப்படுகிறவர்கள் உதவினர். அவர்களில் ஒருவர் காரல் மார்க்ஸ் என்று நாகர்கோவிலில் பேசியபோது கூறியுள்ளார். இப்போதுதான் நேரடியாக அவர்கள் கம்யூனிஸ்டு களிடம் வந்துள்ளார்கள். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றவர் காரல் மார்க்ஸ். ஆளுநர் ரவி, சாதி பிரச்சனையைப் பேசுகிறார், மதப் பிரச்சனையைப் பேசுகிறார், சனாதனம் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று பேசுகிறார். இங்கிருக்கிற அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். தேர்ந்தெ டுக்கப்பட்ட அரசுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்ற அரசு. சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ள அரசு, பாசிசக் கொள்கையில் நம்பிக்கை உள்ள அரசு, நாட்டின் நலனுக்காக, மக்களின் நலனுக்காக இந்த அரசு அகற்றப்பட வேண்டும், அதை அகற்றுகின்ற பணியில் கம்யூனிஸ் டுகள், ஜனநாயக சக்திகள், மதச்சார்பின்மை கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நன்றி வணக்கம்.