தோழர்களே!

நாம் பதினோராவது கட்சிக் காங்கிரசை நோக்கிய தயாரிப்பில் இருக்கும்போது தமிழ் நாட்டில் 11ஆவது மாநில மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். 11வது கட்சி காங்கிரஸ் வரும் பிப்ரவரியில் பாட்னாவில் நடக்க விருக்கிறது.

நமது நாட்டு அரசியலில் மிகவும் நெருக்க டியான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று தொழில்நுட்பத்தில் எல்லோரும் 5ஜி பற்றி பேசுகிறோம். மோடி அரசாங்கம் 5'சி' என்பதை கடைப்பிடிக்கிற அரசாங்கமாக இருக்கிறது. அவர்கள் கலாச்சார தேசியவாதம் (கல்சுரல் நேஷனலிசம்) என்ற ஒரு 'சி'ஐ கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த கலாச்சார தேசியவாதம் என்பது ஐந்து'சி'களின் கலவையாகும். அவற்றுள் முதலாவது 'சி' (கேஸ்டியிசம்) என்ற சாதியவாதமாகும். இது நாட்டின் முற்போக்கு வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. அதனால்தான், 1936 இலேயே பாபாசாகிப் அம்பேத்கர் சாதி அழித்தொழிக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். பாஜகவின் அரசியலுக்கும் கருத்தியலுக்கும் சாதி மையமாக உள்ளது. டாக்டர் அம்பேத்கர் ஜாதியை ஒழிக்க சொன்னார் என்றால் இவர்கள் அதை பாதுகாப்பதற்காக நிற்கிறார்கள். அவர்கள் சாதியை கலாச்சாரக் குறியீடாக பார்க்கிறார்கள். சாதிய அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக அவர்கள் நிற்கிறார்கள்.

பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தது.5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 3:2 என்ற விகிதத்தில் அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட இரு நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு எதிரானது என்று தீர்ப்பு எழுதி யிருக்கின்றனர். மற்ற 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்திருக்கின்றனர். இது 2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இட ஒதுக்கீடு மீது நடத்தப் பட்ட துல்லியத் தாக்குதலாகும். பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்றால் நீங்கள் ஏன் அதே அளவுகோலை தலித்துகள்,ஆதிவாசிகள், இதர பிற்பட்ட பிரிவினருக்கு மறுக்கிறீர்கள்? இதன் மூலம் நீங்கள் பாகுபாட்டை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். இந்தப் பிரிவினர்தான் உண்மை யிலேயே எல்லோரையும் விட பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் சமூக ரீதியான, வரலாற்று ரீதியான, கல்வி ரீதியான பின்தங்கிய நிலைமைகளை மாற்றிட கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு.10% இட ஒதுக்கீடு மூலம் சாதிய படி நிலையை, கட்டமைப்பைப் பாதுகாக்கவே உதவ முடியும்.சிலர் 10 சதவீத ஒதுக்கீடு போனால் என்ன நமக்கு 50 சதவீதம் இருக்கிறது 60% இருக்கிறது என நினைக்கிறார்கள். உண்மையிலேயே 10% இட ஒதுக்கீடுக்கான துவக்கம் என்பது ஒதுக்கீட்டு கொள்கையையே ஒழித்துக் கட்டுவதற்கான துவக்கமாகும் இதற்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது.

இரண்டாவது ‘சி’ என்பது கம்யூனலிசம் அதாவது மதவாதம் என்பதாகும். பாஜக எல்லாவற்றையுமே இந்து, முஸ்லிம் என்ற லென்ஸ் கொண்டு பார்க்கிறது. நாடு முழுவதும் மதக் கலவரங்கள் நடைபெற்ற பின்னணியில் டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வருகின்ற டிசம்பர் 6 வந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகும் அந்த இடம் பற்றிய தாவா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது பாஜககாரர்கள் நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருந்தாலும் நாங்கள் அதை மதித்து நடக்க மாட்டோம் என்றார்கள். ஏனென்றால், இது இந்துக்களின் நம்பிக்கை தொடர்பானது என்றார்கள். அரசாங்கச் சட்டத்தை மதிக்க மாட்டோம், எங்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்று ஒவ்வொருவராக நாட்டில் சொல்ல ஆரம்பித்தால் சட்டத்தின் ஆட்சி என்பதற்கு அது முடிவாக அமைந்து விடும்.

1991ல் நமது நாடாளுமன்றம் ஒரு தீர்மா னத்தை நிறைவேற்றியது அதன்படி தாவாவில் இருக்கும் அயோத்தியா தவிர மற்ற வழிபாட்டு தளங்கள் அனைத்தும் 1947 ஆகஸ்ட் 15 நாடு சுதந்திரம் அடைந்த போது என்ன நிலையில் இருந்ததோ அதேபோல் பாதுகாக்கப்படும் என்றது. அந்த வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம்,மசூதியை கோவிலாக மாற்றுவது அல்லது கோவிலை தேவாலயமாக மாற்றுவது என எதுவும் கூடாது என்றது. உச்ச நீதிமன்றம் கூட பாபர் மசூதி வழக்கில் மசூதி இடிப்பை மிகப்பெரிய குற்றச் செயல், அரசியல் சாசன சட்டத்தை மீறிய குற்றம் என்றது. அது சட்டத்தின் ஆட்சியை மீறிய செயல் என்றும் கூட சொன்னது. இருந்த போதிலும் உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளித்துவிட்டு மசூதி கட்ட தனியாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. உச்ச நீதிமன்றம் இத்தோடு இந்த மதவாத நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வரும் என்றும் அமைதியும் சமரசமும் நிலவும் என்றும் நம்பியது.

அயோத்தியில் மிகப்பெரும் கோவில் கட்டி வருவதை தேர்தல் பிரச்சனையாகி கொண்டிருக் கிறார்கள். 2024 இல் கட்டுமானப் பணிகள் முடிந்து விடும். அதற்கடுத்து அவர்கள் இப்போது காசி, மதுரா, கர்நாடகாவில் ஸ்ரீரங்கப்பட்டினம், ஆந்திராவில் சார்மினார் என்று அடுத்தடுத்து தாவாக்களை கையில் எடுக்கிறார்கள். இப்போது 1991 மத வழிபாட்டுத்தள பாதுகாப்பு சட்டத்தை சவாலுக்கு இழுத்து அது நீக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இப்படியே இவர்கள் நாடு முழுவதும் மதவாத மோதல்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அது இந்தியாவுக்கான முடிவாக அமைந்து விடும். அது நாம் கொண்டிருக்கும் சமூக அமைதிக்கு இதுகாலும் நாம் பெற்றிருக்கக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான முடிவாக அமைந்து விடும்.பாஜக மதவாத விசத்தை வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளையும் அதற்காக பயன்படுத்தி வருகிறது.

மூன்றாவது 'சி' கார்ப்பரேட் மயமாக்குவது. நாளை டிசம்பர் 26 வரலாற்று சிறப்புமிக்க மகத்தான விவசாயிகள் போராட்டத்தின் அந்த நாளை நாம் நினைவு கூறுவோம். விவசாயிகள் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மோடி அரசாங்க மானது அதானி, அம்பானி கம்பெனி ராஜ்யத்தை, பனியாவின் ராஜ்யத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்கிறார்கள். பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையும் தொழிற் சாலை, விவசாயம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம் மாத்திரம் அல்ல நமது பொது வாழ்க்கையின் அனைத்து சமூக சேவைகளையும் அவர்கள் கார்ப்பரேட் மயமாக்கி வருகிறார்கள். தனியார் மயமாக்கம் என்றால் அதன் முதல் விளைபொருள் விலைவாசி உயர்வு.கல்விக் கட்டண உயர்வு, அதே போல் மருத்துவ சேவைக் கட்டண உயர்வும் ஆகும். இன்னொரு பக்கம் தனியார்மயம் இட ஒதுக் கீட்டையும் ஒழித்துக் கட்டிவிடும். பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தபோது நிலம் கையகப்படுத்தி யதால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைத்தது. வேலை வாய்ப்புகளும் ஓரளவு வழங்கப்பட்டன. இப்போது நிலத்தை இழந்தவர் களுக்கு இழப்பீடும் இல்லை. வேலையும் இல்லை என்றாகி விட்டது. பெரிய அளவில் வேலையின்மை நிலவுகிறது. இப்போ தெல்லாம் கைப்பற்றிய நிலத்துக்கு இழப்பீடும் கொடுக்காமல் வேலை வாய்ப்பும் இல்லாமல் முதலீடுகள் போடப்படுகின்றன. கடந்த 70 ஆண்டு கால காலத்தில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் நாட்டில் என்னவெல்லாம் கட்டப்பட்டுள்ளதோ அவை யெல்லாம் தொழிலாளர் களின் உழைப்பால், தியாகத்தால், வியர்வையால் கட்டப்பட்டவை. நமது உழைப்பு, நமது வரிப்பணம் மூலம் கட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை, நமது சொத்துக்களை தனியார் மயமாக்கி வருகிறது மோடி ஆட்சி.

நான்காவது 'சி'என்பது (சென்ட்ரலைசேஷன்) அதாவது மத்தியத்துவப்படுத்துவது. பாரதிய ஜனதா கட்சியை பாரதிய புல்டோசர் கட்சி என்று அழைக்கலாம். அவர்கள் எல்லாவற்றையும் தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் பன்மைத்துவத்தை இடித்து வருகிறார்கள். அவர்கள் ஒரே நாடு ஒரே வரி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம் என்கிறார்கள். நாளை அவர்கள் ஒரே நாடு ஒரே மதம் அடுத்து ஒரே மொழி என்றும் சொல்லக்கூடும். நான் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு கடையில் பார்த்தேன் ஒரே கடை, ஒரே பொருள் என்று எழுதி வைத்திருந்தார்கள். ஆனால் அங்கு எல்லா பொருட்களும் விற்பனையாகின. படம் ஒன்றும் இருந்தது. அந்தக் கடைக்காரர் சொல்லக்கூடிய ஒரே பொருள் என்பது மோடியின் படம்தான். இந்தியா முழுவதும் எல்லா கடைகளிலும் மோடியின் படத்தை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தனிநபர் துதி பாடல் ஆகும். இது மிகவும் மோசமான மத்தியத்துவப்படுத்துதல் ஆகும். இந்தியா என்றால், அதன் பண்மைத்துவம். அது இல்லாவிட்டால் இந்தியா இல்லை. மாறாக யாராவது இந்த பன்மைத்துவத்தை தகர்க்க முற்பட்டால் பன்மைத்துவத்தை ஒற்றைத் தன்மையானதாக மாற்ற முற்பட்டால், அது கலாச் சாரம், மொழி, பொருளாதாரம் என எதுவாக இருந்தாலும் சரி அல்லது உணவு பழக்க வழக்கம், உடை என்று இருந்தாலும் சரி அத்தோடு இந்தியா என்பது முடிந்துவிடும். பாஜக இது போன்ற ஒரு மத்தியத்துவப்படுத்தலைத் தான் நாடு முழுவதும் உந்தி தள்ள முயற்சிக்கிறது.

இந்த நாலு 'சி'களையும் இந்திய மக்கள் மீது திணிக்க முற்பட்டால் அவர்களை பழைய காலனிய ஆட்சியாளர்களோடு ஒப்பிட முடியும். இதைத்தான் பகத்சிங் வெள்ளை எஜமானர்கள் இடத்தில் பழுப்பு நிற எஜமானர்கள் வருவது பற்றி அன்றே எச்சரித்திருந்தார். இன்று அதே கலாச்சாரம் திரும்ப வருகிறது. காலனிய ஆட்சியாளர்கள் ஆட்சி செய்தது போலவே இவர்கள் செய்கிறார்கள். ஆள் தூக்கிச் சட்டங்கள் கொண்டு வருகிறார்கள். நீங்கள் உண்மையைப் பேசினால் சிறைக்கு அனுப்பப் படுவீர்கள். நீங்கள் உண்மையை எழுதினால், நீதி கேட்டால், சிறைக்கு அனுப்பப்படுவீர்கள். எல்லா இடங்களிலும் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி அமலாக்கப்படுகிறது. துப்பாக்கி குண்டு கொண்டு, ஒடுக்குமுறை கொண்டு செய்யப்படுகிறது. 4 'சி'களை அமுல்படுத்தும் போது ஆட்சி அதன் தொடர் விளைவாக காலனிய ஆட்சி முறை என்ற ஐந்தாவது சி வந்து விடுகிறது. இந்து ராஜ்ஜியம் உருவாகுமானால் அது பேரழிவாக இருக்கும் என்று அம்பேத்கர் எச்சரித்து இருந்தார். இப்போது அந்தப் பேரழிவை நாம் எதிர் கொண்டு வருகிறோம் அதிலிருந்து இந்தியாவை பாதுகாத்தாக வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் போது பாபாசாகிப் அம்பேத்கர் சொன்ன அந்தப் பேரழிவு இன்று நம் முகத்தின் எதிரில் நிற்கிறது. அதை நாம் உணர முடிகிறது. இப்போது என்ன செய்யப் போகிறோம்? நாம் பேரழிவில் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து காப்பதற்கான பதில் வினை பற்றி யோசிப்போம். பேரழிவிருந்து காப்பதில் முதல் நடவடிக்கை மீட்புப் பணியாகும். முதலில் இந்தியாவின் ஜனநாயகத்தை மீட்டாக வேண்டும். பாசிச பாஜகவிடமிருந்து ப்ளூடூசர் ராஜ்யத்திலிருந்து இந்தியாவை மீட்டாக வேண்டும்.அவர்கள் ஏற்கனவே சேதாரத்தை ஏற்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஏற்படுத்தி வருகிறார்கள். பொருளாதாரத்தில், நமது சமூக ஒற்றுமையில், கலாச்சாரத்தில் வரலாற்றில், மதிப்பீடுகளில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சேதாரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடனடியாக நாம் அவற்றை சரி செய்தாக வேண்டும். இந்தியாவை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும். அதற்கு மிகவும் சக்தி வாய்ந்த மாபெரும் ஜனநாயகம் நமக்கு தேவை. அதற்காகத்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

 பொதுமக்களாகிய நம்மிடம் ஒரு சி இருக்கிறதுஅது கான்ஸ்டிடியூஷன் என்ற அரசியலமைப்புச் சட்டம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களாகிய நாம் உருவாக்கி நமக்கு நாமே அளித்துக்கொண்ட சட்டமாகும். அது சோசிலிச மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசை நமக்கு உத்தரவாதம் செய்கிறது. அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்கிறது. அது குடிமக்கள் அனைவருக்குமான சமூக பொருளாதார அரசியல் நீதி பற்றி பேசுகிறது. மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய கம்யூனிஸ்டுகளாகிய நமக்கு இதில் ஆற்ற வேண்டிய கடமை இருக்கிறது. ஆகவே தான் சிபிஐ(எம்எல்) கட்சி போராடக் கூடிய சக்திகளின் ஒற்றுமையை, இடதுசாரிகளின் முற்போக்கு சக்திகளின் ஒற்றுமையை உருவாக்கிட முயற்சிக்கிறது. சாதியத்துக்கு எதிராக, மதவாதத்திற்கு எதிராக, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக, காலனிய ஆட்சி முறை நிர்வாகத்திற்கு எதிராக போராடுபவர்கள் ஓரணியில் திரள அழைப்பு விடுக்கிறது. சிபிஐ (எம்எல்) கட்சியின் 11 வது மாநில மாநாட்டில் அது போன்ற சக்திகளின்ஒற்றுமையைக் காண முடிகிறது. நாம் அனைவரும் இணைந்து வந்ததன் மூலம் நமக்கு இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

இப்போது ஒரு நல்ல செய்தியை உங்க ளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை கிடைத்துள்ளது. பாதிரியார் ஸ்டேன்சுவாமிக்கு பிணை கிடைக்கவில்லை. ஸ்டேன்சுவாமி இதே திருச்சியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் சென்று அங்குள்ள ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். அவரை ராஞ்சியில் கைது செய்து, புனே சிறையில் அடைத்து வைத்திருந் தார்கள். அவருக்கு மருத்துவ உதவி மறுக்கப் பட்டது. அவர் தண்ணீர் குடிக்க உறிஞ்சு குழாய் கூட மறுக்கப்பட்டது. அவரை நாம் சிறையிலேயே இழந்து விட்டோம். 7 நாட்களுக்கு முன்னர் ஆனந்த் டெல்டும்டேவுக்கு பிணை வழங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு முகமை அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து டெல்டும்டேவுக்கு பிணை வழங்கியுள்ளது. இதே போல் மற்ற அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் என நம்புவோம்.

90% உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் பேராசிரியர் சாய்பா பாவை நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால், உச்சநீதி மன்றம் அவர் உடல் ஊனமுற்றவராக இருக்கலாம், ஆனால் அவர் மூளை வேலை செய்கிறது. மனித உடலில் மூளை தான் மிகவும் ஆபத்தான உறுப்பு என்று சொல்லி விடுதலையை நிறுத்தி வைத்து விட்டது. அவர்கள் சொல்வது சரிதான் 130 கோடி மக்களின் மூளை வேலை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் பாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொன்னால், இந்த ஆட்சி முடிவுக்கு வரும். இந்த மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். உருவாக்கப் பட்டுள்ள இந்த ஒற்றுமை இன்னும் வலுவாக்கப் பட வேண்டும். விவசாயிகள் போராட்டம் போல, குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் போல, வேலை கேட்டு மாணவர் இளைஞர் பெண்கள் நடத்தி வரும் போராட்டம் போல, இன்னும் அதிகரித்த அளவிலான போராட்டங்கள் தேவை. போராட்டங் களால்தான் இந்த மக்கள் விரோத ஆட்சியை அப்புறப்படுத்த முடியும். அத்தகைய போராட்டங்களை கட்டியமைத்திட உறுதியேற்போம்.