நான் மட்டுமல்ல வேறு யாரும் கூட அதை நம்ப மறுப்பார்கள். ஆனால், அது திடீரென்று நடந்து முடிந்து விட்டது. நமது இதயத்தை சுக்குநூறாக்கும் உண்மை செய்தியாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கு தோழர்.என்.கே வின் நண்பர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கும் கூட. அதேபோல் நாட்டுப்புற, நகர்ப்புற தொழிலாளர்களுக்கு, பிரிக்கால் தொழிலாளர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள், திட்டத் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அவரை வெகுமக்கள் தலைவராகப் பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைக்காக நிற்கக்கூடிய தலைவராகப் பார்த்தார்கள். அவர், அந்த மக்களைப் போராட்டங்களில் எழுச்சியுறச் செய்தார். அணி திரட்டினார். அமைப்பாக்கினார். அவர் புதிய சமுதாயத்தைப் படைப்பதற்கான கனவை அந்த மக்களோடு பகிர்ந்து கொண்டார். தங்களது அன்பான தலைவருக்கு அவர்கள் கண்ணீர் சிந்தி விடை யளித்தனர். தோழர்.என்.கே வோடு ஜனநாயகப் போராட்டங்களில் பல தருணங்களில் வீதிகளில் களம் கண்ட பிற கட்சித் தலைவர்களுக்கும் ஊழியர்க ளுக்கும் கூட அவர் மரணம் பேரிழப்பாகும். தோழர் என்.கே, அவர் ஆற்றிய செயல்களாலும் அர்ப்பணிப் பாலும் நம்முடன் என்றென்றும் வாழ்வார். தொடர்ந்து
நமக்கு ஆதர்சனமாக இருப்பார்.

நான் முசாபர்பூர் மத்தியக் கமிட்டிக் கூட்டத்தில் கடைசியாக அவரை சந்தித்தேன். அப்போதுதான் வெற்றிகரமான, சிறப்பு வாய்ந்த தமிழ்நாடு மாநில மாநாடு முடிந்திருந்தது. இடைக்காலச் செயலாளராக செயல்பட்ட அவர், அந்த மாநாட்டில் மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர், எப்போதும் போல அந்த அமைதியோடும் தோழமை உணர்வோடும் என் கையைப் பிடித்துக்குலுக்கினார். அவர், எப்போதையும் விட துணிச்சல் மிக்கவராகவும் நம்பிக்கை மிக்கவராகவும் மட்டுமல்ல ஒரு போராட்டக் களத்தை வெற்றி கொண்டு, அடுத்த பெரிய போராட்டக் களத்திற்கு தயாராக இருப்பவராக எனக்குத் தோற்றமளித்தார்." கட்சி மைய தலைமையின் ஆற்றல்மிக்க வழிகாட்டுதலால் தமிழ்நாடு, நெருக்கடி கட்டத்தை போராடி வெற்றி கண்டுள்ளது. விரிவாக்கம் அடைந் துள்ளது." என்று சொல்லி உறுப்பினர் சேர்ப்பு, போராட்டப் பகுதிகள் ஆகியவற்றை வளர்த்தெடுத்து முன் கொண்டு செல்வதிலும் தமிழ்நாட்டு கட்சியை புரட்சிகர இடதுசாரிகள் அனைவருக்குமான மையமாக மாற்றுவதிலும் தீர்மானகரமாக இருப்பதாக கூறினார்.

தோழர் என்.கே எப்போதுமே வலுவானவராக நிலையானவராக இருந்தார். இருந்தபோதிலும் இம்முறை புதிய என்.கேவை சந்தித்தேன். கட்சி மத்தியக் கமிட்டியின் ஆளுமையை மீறுகிற அளவுக்கு தனிநபர்வாதமும் குழுவாதமும் தமிழ்நாட்டு கட்சி அமைப்பில் இருந்தபோது, அதுவும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் மட்டத்தில், மாநிலக் கட்சிக்கு தலைமை தாங்குபவர் மட்டத்தில் இருந்த போது, இன்னும் சிலருக்கும் அதுபோல் இருந்தபோது, அது கட்சிக்கு மிகப்பெரிய சவால் என்பது வெளியிடைமலை. தோழர்.என்.கே, அவருக்கே உரிய வகையில் தனி நபர் விசுவாசத்தை விட கட்சியை உயர்த்திப் பிடித்தார். இந்தக் கடுமையான போராட்ட காலகட்டம், என்.கே வை மேலும் புடம் போட்டு எஃகு போன்ற உறுதியை அவருக்குக் கொடுத்தது. மாறுபட்ட கருத்து கொண்ட தோழர்களை ஒற்றுமைப் படுத்துவதில் அவருக்கு கூடுதல் முதிர்ச்சி இருந்தது. கூட்டுச் சிந்தனைக்கு உரிய மரியாதையையும் அவர் வழங்கினார்.

தோழர் என்.கேவுக்கு செவ்வணக்கம்!