கடந்த திங்கள் கிழமை தொடங்கிய புதுச்சேரி ஜிப்மர் தற்காலிக ஊழியர்கள் வேலை நிறுத்தம் நான்கு நாட்களுக்குப் பிறகு வியாழனன்று முடிவுக்கு வந்தது. 2200 படுக்கைகள், 5000 ஊழியர்கள், 2000 க்கு மேற்பட்ட மாணவர்கள், பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள பல்லாயிரக் கணக்கான நோயாளிகளைக் கொண்ட ம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ விருந்த மானுட துயரம் முடிவுக்கு வந்துள்ளது. நான்கு நாட்களாக தங்களது நீதிக்காகப் போராடிய தற்காலிக ஊழியர்களது பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது!

ஜிப்மர் நிர்வாக இயக்குநர் ராகேஷ் அகர்வால் தலைமையிலான பொறுப்பற்ற, ஊழல் நிர்வாகமே 580 தற்காலிக ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு காரணம். 2000க்கும் மேற்பட்ட நிரந்தரமான மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இருந்த போதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தற்காலிக ஊழியர்கள் இல்லை என்றால் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் இயக்கம் நின்று போய்விடும்.

ஏன் இந்த போராட்டம்?

தற்போது 580 பேராக உள்ள தற்காலிக ஊழியர்கள் தங்களை நிரந்தரப் படுத்த வேண்டு மென கோரி வருகிறார்கள். இந்தக் கோரிக் கையை வலியுறுத்தி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு தொடுத்த ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, 2017 முதல் அவர்களை நிரந்தரப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜிப்மர் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வில்லை. தற்காலிக ஊழியர் ஒருவருக்கு மாதம் ரூ.11,000 ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே வேலை செய்யும் நிரந்தர ஊழியருக்கு மாதம் ரூ 44,000 வழங்கப்படுவதாக போராடிய ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த வகையில், 137 கோடியே 80 லட்சம் ரூபாயை ராகேஷ் அகர்வால் தலைமையிலான நிர்வாகம் அபகரித்துள்ளது? கடந்த ஆண்டு சுமார் ரூ 200 கோடியை நிர்வாகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாக புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் திரு என். சிவா கூறுகிறார். ஆண்டுக்கு சுமார் ரூ 1430 கோடி வரவுசெலவு செய்யும் ஜிப்மர் நிர்வாகம், ரூ 137 கோடியை போராடிய ஊழியருக்கு வழங்க
மனமில்லாமல் ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. ஆண்டு தோறும் மோடி அரசாங்கம் நிதியைக் குறைக்கிறது என்றால் ஜிப்மர் நிர்வாகமோ தனது ஊழியர் விரோத, ஊழல் முகத்தை மாஸ்க் போட்டு மறைத்துக் கொள்கிறது. மோடி அரசு புதுச்சேரி ஜிப்மருக்கு நிதியை குறைத்து வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மக்களவை உறுப்பினர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

புதுச்சேரியில் இருந்த பிரஞ்சு ஆட்சி இந்த மருத்துவ நிறுவனத்தை 1823 ல் தொடங்கியது. அடுத்த ஆண்டு இந்த மருத்துவ நிறுவனத்துக்கு 200 வயது. 2008ல் மக்களவை சட்டத்தின் வாயிலாக ஒரு முன்மாதிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிறுவப்பட்டது. 1964ல் நேருவின் மறைவையடுத்து இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜவகர்லால் நேரு பெயர் சூட்டப்பட்டது. அன்புமணி அமைச்சராக இருந்தபோது இது தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது. அதுமுதல் இந்த நிறுவனம் தன்னாட்சி 'தறுதலை' நிறுவனமாக மாறிவிட்டது. மருந்துகள் இல்லை என்று சொல்லி மாத்திரை மருந்துகளுக்கு ஜிப்மர் எதிரில் வரிசை கட்டி இருக்கும் மருந்துக் கடைகளுக்கு அனுப்பி விடுகிறது! இதன் மூலம் அகர்வால்கள் அடையும் ஆதாயங்கள் என்ன என்பது ஒரு விசாரணை ஆணையம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 30 மருத்துவ கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் 15 தனியார் நிறுவனங்கள். 15 அரசு நிறுவனங்கள். இவற்றுக்கு மத்தியிலும் ஜிப்மர் மருத்துவ மனைக்கு படையெடுக்கும் மக்கள்தான் அதிகம். புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களிலிருந்து நோயாளிகள் வந்து குவிகின்றனர். ஒரு நாளைக்கு 5000 புற நோயாளிகள் மருத்துவம் தேடி ஜிப்மர் வருகின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு ஒன்றரை கோடி பேர் வந்து செல்கின்றனர். இது, வசதி குறைந்த சமூகப் பொருளாதார பிரிவினருக்கு முன்மாதிரியான(மிகத் தரமான, மிகக் குறைந்த செலவில்) மருத்துவம் வழங்கும் நோக்கம் உடையது என நாடாளுமன்ற சட்டம் கூறுகிறது. ஆனால் ஜிப்மர் நிர்வாகம் அந்த குறிக்கோளுக்கு
எதிராகச் சென்று கொண் டிருக்கிறது. மக்கள் விரோத, ஊழியர் விரோத பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தடுத்து நிறுத்துவது எப்படி? 

நான்கு நாட்கள் நடந்த வெற்றிகரமான ஊழியர் வேலை நிறுத்தம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, எதிர்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் ஊழியர் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சங்கம் முன்வைத்த ஆறு கோரிக்கைகளில் நான்கை உடனடியாக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக பத்திரிகை குறிப்பு கூறுகிறது. ராகேஷ் அகர்வால் ஆணவம் சரிந்தது. தெலுங்கானாவில் இருக்கமுடியாமல் புதுச்சேரியில் நிரந்தரமாக தங்கிவிட்ட தமிழிசையோ, அவரது அண்ணன் ரங்கசாமியோ 'அடுத்த முதல்வர்" நமச்சிவாயமோ ஜிப்மர் தற்காலிக ஊழியர் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை? புதுச்சேரியில் மஞ்சள் அட்டை குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவம் பார்ப்பதில்லை என்ற ஏராளமான புகார்கள் உள்ளன. புதுச்சேரி மண்ணில் இருக்கும் புதுச்சேரி தண்ணீரை குடிக்கும், மின்சாரத்தை உறிஞ்சும் ஜிப்மர் புதுச்சேரி ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்க மறுப்பது சட்ட விரோதம். ஒன்றிய மோடி அரசும் புதுச்சேரியின் என் ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை சீரழிவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அது ஜவகர்லால் நேருவின் பெயரை தாங்கி நிற்பது தான் காரணமோ? போராடி வெற்றி பெற்றுள்ள சங்கம் விழிப்பாக இருக்க வேண்டும். வாக்குறுதி யிலிருந்து ஜிப்மர்
நிர்வாகம் பின்வாங்கினால் பிற மருத்துவ ஊழியர்கள், மக்கள், இடதுசாரிகள் ஆதரவுடன் மீண்டும் போராடத் தயங்கக் கூடாது. ஜிப்மர் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஊழியர்கள், மாணவர்களுக்கு தொழிற்சங்க, மாணவர் பேரவை உள்ளிட்ட ஜனநாயக உரிமை வழங்க போராட வேண்டும். உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற, தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குறை தீர்க்கும் அமைப்பு கேட்டு, ஆண்டு தோறும் ஜிப்மர் வரவு செலவு கணக்கு பொதுத் தணிக்கைக்கு, மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்திட கோர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, காசுக்கு மருத்துவக் கல்வி, காசுக்கு மருத்துவம் எனும் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்.

இறுதியாக, ஆனால் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாத ஒன்று. ஜிப்மர் தற்காலிக ஊழியர் வேலை நிறுத்தத்தில் தலையிட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டு வந்ததைப் போல, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 200 நாட்களாக கடும் வறுமை, குடும்பங்களின் பட்டினி துயரத்துக்கு மத்தியிலும் தங்கள் நியாயமான கோரிக்கை களுக்காக போராடி வரும் பல நூற்றுக்கணக்கான எல் அண்ட் டி தொழிலாளர் போராட்டத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தொழிலாளருக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவர மாநிலங்களவை உறுப்பினர் திரு செல்வகணபதியும் எதிர்க் கட்சித் தலைவர் திரு சிவா அவர்களும் முயற்சி செய்ய வேண்டும்.