ஒன்றிய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை வழக்கம் போலவே அதிகமாக வாய்ச் சவடால் விடும் பாஜகவின் நிதிநிலை அறிக்கைதான். 2014ஆம் ஆண்டில் இருந்து பாஜக போட்ட நிதிநிலை அறிக்கைகளில் இவ்வாண்டும் புதிய விசயம் என்று சொன்னால், 'அமுத காலத்தில் 'சப்தரிஷிகள்' நம்மை வழிநடத்துகிறார்கள் என்ற வாக்கியம்தான். நிர்மலா சீதாராமன் வழக்கமாக வாசிக்கும் திருக்குறளையும் இந்த ஆண்டு காணவில்லை. 'அனைவருக்கும் வீடு', 'விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு', 'உள்கட்டுமானத்தில் ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு' '2024க்குள் ஐந்து டிரிலியன் டாலர் பொருளாதாரம்' போன்ற இதுவரை எதுவும் நிறைவேற்றப்படாதவை, மீண்டும் காணப்பட்டன. நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரியைக் காட்டிலும் மத்திய ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளது. நிதியமைச்சர் கார்ப்பரேட்களுக்கு, செல்வந்தர்களுக்கு வரி விதிக்கத் தயங்குகிறார். அதிகரிக்கும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்க, கார்ப்பரேட்களுக்கு செல்வந்தர்களுக்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் சொல்கிறார்கள். வேலைவாய்ப்பின்மையால் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் கோபத்தைத் தணிக்க எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எளிய மனிதர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வும் சொல்லப்படவில்லை. அதேபோல், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றியும் எதுவும் இல்லை. உணவு மானியத்தை, திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.214696 கோடியில் இருந்து ரூ.137207 கோடியாகக் குறைத்துள்ளார். உர மானியம் ரூ.154098 கோடியில் இருந்து 131100 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் கிஸான் திட்டத்திற்குக் கூட ரூ.68000 கோடியை ரூ.60000 கோடியாகக் குறைத்துவிட்டார்கள். கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலை இல்லை. இந்த நிலையில் ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை ரூ.60000 கோடியாகக் குறைத்துவிட்டார்கள். உணவு மானியம் ரூ.90000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு ரூ.1810 கோடியில் இருந்து ரூ.610 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையிலும் சாதாரண மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொருள்களுக்கு மறைமுக வரியில் இருந்து சலுகை அளிக்கவில்லை. நடுத்தரவர்க்கத்தினரின் எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. வருமான வரி செலுத்துபவர்கள் ரூ.5 லட்சம் வரை முழு வரி விலக்கு எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது மாதச் சம்பளம் பெறுபவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமிப்பு, வீட்டுக் கடன் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றில் இருந்து வரி விலக்கு கிடையாது. பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு 66% உயர்த்தப்பட்டு, ரூ.79000 கோடியாக்கியுள்ளதாக பெருமையாக நிதிநிலை அறிக்கை சொல்கிறது. ஆனால், எதார்த்தத்தில் 2021-22 நிதியாண்டில் மேற்படித் திட்டத்தில் செலவு மட்டுமே ரூ.90020 கோடியாகும். மக்களின் அடிப்படையான கல்வி, சுகாதாரம், மருத்துவம், கிராமப்புற வளர்ச்சி போன்றவற்றிற்கு எதுவும் இல்லை. நிரந்தரமான உள்நாட்டு முதலீட்டிற்கான எதைப் பற்றியும் நிதிநிலை அறிக்கை பேசவில்லை. கோவிட் கொள்ளை நோய் அதிர்வில் இருந்து பொருளாதாரம் மீட்கப்பட்டு விட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால், எதார்த்தத்தில் இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர், விவசாயிகள் நலன்கள் காக்கப்படவில்லை. கோவிட் காலத்தில் தனியார்மயம், பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்றது போன்றவை அதிக அளவில் சாதாரண மக்களை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்திகோ விட்டிற்கு முன்பு 2019-20லிலும் 2021-2022லிலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. பொருளாதார சர்வே 2023ல் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 8% முதல் 8.5% வரை உயர வேண்டும் என்றது. ஆனால், உண்மையில் 7%ஆக குறைந்துள்ளது. பணவீக்கம் 6%க்கு குறையாமல் இருந்து கொண்டிருக்கிறது. மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.42 லட்சம் கோடியில் கடந்த காலத்தில் வாங்கிய கடன்களுக்கான வட்டிக்கு மட்டும் ரூ.10.80 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்துவது, பொருளாதார சமத்துவமின்மையைக் குறைப்பது, பொதுச் சேவைக்கான அரசாங்கத்தின் செலவை அதிகரிப்பது, அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற எது பற்றியும் நிதிநிலை அறிக்கை பேசவில்லை. மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.

இகக(மாலெ)