ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறுபேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 17ல் இதே வழக்கில் சிறைத் தண்டனையில் இருந்த பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, அதே அடிப்படையில் ஆறு பேர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இகக(மாலெ)விடுதலை கட்சியும் பல்வேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும், இந்த எழுவர் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன. ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் மனித உரிமைகள் கோரிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் இந்த தீர்ப்பு திகழ்கிறது.
"சட்டப்பிரிவு 161யைப் பயன்படுத்தி, அவர்களை ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும்" என தமிழ்நாடு சட்டமன்றம் இரண்டு முறை தீர்மானங்கள் இயற்றி அனுப்பியபோதும், ஆளுநர் அலட்சியப்படுத்தி உள்ளார்; இது குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்,
"தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளதை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அரசியலமைப்புச் சட்ட கடமைகளை புறக்கணித்ததன் மீதான விமர்சனமாக கருத வேண்டும். இந்த விமர்சனத்திற்கு தார்மீக பொறுப்பு ஏற்று தமிழ்நாடு ஆளுநர் பதவி விலக வேண்டும் எனக் கோருகிறோம். ஒன்றிய அரசு, இத்தகைய விஷயங்களில் நாடு தழுவிய பொது நடைமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வலியுறுத்துகிறது.
அதே போல, "இத்தகைய விவகாரங்களில் ஆளுநர் முடிவுக்காக காத்திருக்க வேண்டாம்; மாநில அரசே விடுதலை செய்யலாம்" என ராஜ்குமார் வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதை எம்எல் கட்சியும் மனித உரிமை அமைப்புகளும் சுட்டிக்காட்டி எழுவர் விடுதலையை வலியுறுத்திய போதும், ஏன் திமுக அரசாங்கம் தானாகவே முடிவு எடுக்கவில்லை என்பது வியப்பளிக்கிறது.
சிறைத்தண்டனையின் நோக்கம், சிறையிலேயே சாகும்வரை குற்றவாளிகளை தண்டிப்பது அல்ல; அவர்களை சமூகத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்காக திருத்தி மாற்றியமைப்பது என்பது தான். இதற்காக அரசுக்கு சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டப் பிரிவு 161 ஆளுநர் அதிகாரங்கள் (மாநில அரசுக்கு அளிக்கப்படும் அதிகாரங்கள்) என்பதன் வழியாக, கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பளிக்கிறது என்றால், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 433 ஏ-ன் படி ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு தண்டனை குறைப்பு, விடுதலை என்று வரையறுத்துள்ளது. எனினும், இத்தகைய சட்ட விதிமுறைகள், ஏற்பாடுகள் புறக்கணிக்கப் படுவதால் பல்வேறு வழக்குகளில் ஆயுள்தண்டனை பெற்ற நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் தற்போதும் தமிழ்நாடு சிறைகளில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். "பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள்தண்டனை சிறைவாசிகள் விஷயத்தில் உரிய விடுதலை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்!" எனவும், பெண் சிறை வாசிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும் எனவும், சிபிஐஎம்எல் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.