உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் வீழ்ச்சி தடையற்று தொடருகிறது. 2020 இல் கணக்கெடுக்கப்பட்ட 107 நாடுகளில், 97வது தரவரிசையிலிருந்தது. 2021இல் ஏழு தரவரிசைகள் வீழ்ந்து இந்தியாவின் இடம் 116 இல் 101 என்றானது. சமீபத்திய 2022 குறியீட்டில் மேலும் ஆறு தரவரிசைகள் வீழ்ந்து 121 நாடுகளில் 107 வது இடத்தை அடைந்துள்ளது. போரால் நாசமாக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் தவிர, இந்தப் பட்டியலில் நம்முடைய மற்ற அனைத்து அண்டைய நாடுகளும் இந்தியாவை விட பெருமளவு முன்னணியில் உள்ளனர். மக்கள் தொகையில் இந்தியாவை விட ஓரளவுக்கு மட்டும் முன்னணியில் இருந்து கொண்டு, உலகத்திலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு என்ற இடத்தை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் சீனா, உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவை விட வெகுதூரம் முன்னணியில் 1 முதல் 17 வரையிலான மிக உயர்ந்த இடங்களின் வரம்புக்குள் உள்ளது. சீனாவில் பட்டினி நிகழ்வுகள் மிகக்குறைவாகவே உள்ளபோது, இந்தியாவில் அது மிகத் தீவிரமாக உள்ளது என வேறு வார்த்தைகளில் இதனைக் கூறலாம். ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளிடையே தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதிபலிக்கும், குழந்தைகளை வீணடிக்கும் விகிதத்தில், உலகின் மிக உயர்ந்த இடத்தை இந்தியாவே கொண்டுள்ளது.
பொது விவாதங்களில் இருந்து பட்டினியை தடை செய்வதன் வழியாக மோடியின் ஆட்சி அதனை எதிர்கொண்டு போரிடுகிறது. மேலும், உலக பட்டினி குறியீட்டை அதுவொரு மேற்கத்திய சதி எனவும் கூறுகிறது. பத்தாண்டுகளுக்கு முன், சங்கப்படையும் ஆதிக்கமிகு ஊடகமும், விலைவாசி உயர்வுக்கும் ரூபாயின் வீழ்ச்சிக்கும் எதிராக 'குதிகுதி'யெனக் குதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போது பெட்ரோல், சமையல் எரிவாயு, பெரும்பான்மை மக்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் விண்ணைத் தாண்டி செல்கின்றன. டாலருக்கு எதிராக தினமும் ரூபாய் வீழ்ந்து கொண்டிருக்கிறது. அது, நூறைத் தொடுவதற்கு இன்னும் சில காலமே உள்ளது. பத்தாண்டு களுக்கு முன், ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு வீழ்ச்சியடைவதை பலவீனமான அரசாங்கத்தின், தவறான பொருளாதார நிர்வாகத்தின் உச்ச அடையாளமாகக் குறிப்பிடுவதை குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வழக்கமாகக் கொண்டிருந்தார். மோடி இன்று இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்கும் போது, ரூபாயின் தங்கு தடையற்ற வீழ்ச்சியை குறித்து கள்ளமௌனம் சாதிக்கிறார். அதேநேரத்தில், டாலர் வலிமையடைந்து விட்டது என நிதியமைச்சர் அதனை விளக்குகிறார்! கடும் பட்டினி, விண்ணைத் தொடும் விலைவாசி, ரூபாயின் வீழ்ச்சி அல்லது மாயமாக மறையும் வேலைகள் என்ற யதார்த்தத்தை எதிர் கொள் வதற்கு மாறாக, தன்னுடைய பார்வையாளர் களிடம் 'தொழில் செய்வதை எளிதாக்குவது' என்ற குறியீடு பற்றிய புனைவுகளை தொடர்ந்து மோடி அள்ளி வீசுகிறார். இது, தரவரிசைகள் எப்படி முறைகேடாக மாற்றப்பட்டன என்பதை ஒரு சுதந்திர தணிக்கை அம்பலமாக்கிய பிறகு, உலகவங்கி செப்டம்பர் 2021 லிருந்து தொடராமல் விட்டுவிட்ட ஒரு குறியீடாகும்.
பொய்களைப் பரப்பியும், வெறுப்பினை அறுவடை செய்தும் மட்டுமே அவர்களால் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்பது சங்கப்படையினருக்கு நன்றாகவே தெரியும். எனவே, வர இருக்கின்ற இமாச்சல பிரதேச, குஜராத் தேர்தல்களுக்கு முன்னதாக வெறுப்பு பரப்புரை மீதான புதுப்பிக்கப்பட்ட கவனக் குவிப்பை நாம் பார்க்கிறோம். உத்தர பிரதேச தேர்தல்களுக்கு முன்னதாக, அதனுடைய கர்நாடக சோதனைச் சாலையில் ஹிஜாப் தடை என்ற பரிசோதனையை பாஜக நிறைவுடன் நிகழ்த்தியது. தற்போது ஹிஜாப் தடை பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து கால தாமதத்திற் குள்ளாகிக் கொண்டிருக்கும் போது, டெல்லி யிலும் தலைநகர் பகுதியிலும் உள்ள சங்கப் படையின் தலைவர்கள் மீண்டுமொருமுறை விஷத்தை கக்குவதிலும், முஸ்லிம்களுக்கு எதிராக, புறக்கணிப்பிலிருந்து இனப்படுகொலை வரையிலான பல்வகை துன்புறுத்தல்களுக்கு அழைப்பு விடுப்பதிலும் மும்முரமாக உள்ளனர். மேலும், குஜராத்திற்கு உள்ளேயே இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டுவிழாவின் அதே நாளில் துவங்கப்பட்ட துருவச் சேர்க்கை நவராத்திரி விழாவிலும், அதனைத் தொடர்ந்து வரும் கர்பா கொண்டாட்டத்தின் போதும் முஸ்லிம்களை குறிவைத்து விலக்குதல், பொதுவில் அவமானத்திற்கு உள்ளாக்குதல், கசையடி கொடுத்தல் என மேலும் கூர்மையாக் கப்பட்டது. ஆகஸ்டு 15 இல், பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்புணர்வு, கொலைக் குற்றவாளிகளின் விடுதலை மத்திய புலனாய்வு துறை, சிறப்பு நீதிபதியின் ஆலோசனைக்கு எதிராகவும், பாலியல் வன்புணர்வு, கொலை போன்ற கொடூர குற்றங்களுக்கு தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்படக்கூடாது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் தானே அறிவித்த பொதுமன்னிப்பு கொள்கைக்கு முரணாகவும், அமைச்சகத்தால் அனுமதி வழங்கப்பட்டது என்பது தற்போது பதிவாகியுள்ளது.
மதவாத அணிச் சேர்க்கையும், வெறுப்பும் கலந்த இந்தப் பரப்புரை, மனப்பிறழ்ச்சியையும் பழிவாங்குதலையும் அரசுக் கொள்கையாக கொண்டிருப்பதன் கோட்பாடாகும்.
குடிமைச் சமூகம் தான் சமீபத்திய போரின் முன்னணி களம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். ஊடகம் அல்லது சமூக ஊடகம், நீதித்துறை, அரசுசாரா நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகள் என எதுவானாலும், அப்படியான ஒவ்வொரு நிறுவனத்தின் சுதந்திரம் பற்றிய கருத்து, நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தற்போது குறிப்பிடுவதன் மூலம் இந்த கோட்பாட்டை புதிய மட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சித்தபிரமை கொண்ட இந்த நிலை யானது சதி வழக்குகளை புனைவதற்கும், எதிர்கருத்துடைய குடிமக்கள் மீது கொடூர சட்டங்கங்களை ஏவுவதற்கும், அவர்களை பல்லாண்டுகளாக சிறையில் வைத்திருப்பதற்கும் நிர்வாகத்தினரை இட்டுச் செல்கிறது. தீவிரவாதம் அல்லது மாவோயிசம் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகளில் மூளையே மிகவும் ஆபத்தான உடல் உறுப்பு என குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் கூட, 90% மாற்றுத் திறனாளியான சக்கர நாற்காலியில் இருக்கும் பேராசிரியரின் விடுதலையை நிறுத்திவைத்து விட்டது. வெறுப்பினை விற்பனை செய்யும் தொழில்முறை விற்பனையாளர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் போது, வெறுப்பிற்கு எதிராக பரப்புரை செய்த உமர் காலித் போன்ற போராட்டக்காரர்களின் பிணை மனுக்கள் 'எந்தவொரு தகுதியும் இல்லை' என தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இப்படியான வெறுப்பு, பொய்கள், அச்சம் நிறைந்த சூழலில் நாம் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களைக் கொண்டிருக்க முடியுமா? இனிமேலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நாம் நினைத்துக்கூட பார்க்கக் கூடாது என தேர்தல் ஆணையம் விரும்புவது போலவே தெரிகிறது. வாக்காளர் பட்டியலை ஆதார் அட்டையுடன் இணைப்பது, முழுமை யான தன்னார்வத்துடன் தான் செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறது. தற்போது இருக்கும் அல்லது புதிதாக சேரும் எந்தவொரு வாக்காளரும்,ஆதார் தகவல்களை தராவிட்டால் வாக்களிக்கும் உரிமை அற்றவர்களாக ஆக்கப்படமாட்டார்கள் எனவும் சொல்கிறது. ஆனால், களத்தில் வாக்காளர் பட்டியல் ஆதார் அட்டையுடன் தொடர்ந்து திட்டமிட்டபடி இணைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. குஜராத்திலும் இமாச்சல பிரதேசத்திலும் தேர்தலுக்கு முந்தைய திட்டங்களை துவக்குவதற்கான, வரி விலக்கிற்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் பாஜக மும்முரமாக இருக்கும்போது, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை பொருளாதார சாத்தியப்பாட்டு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற திருத்தங்களை தேர்தல் ஆணையம் முன்வைக்கிறது. அதன்மூலம், பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் சுதந்திரமென்னும் உணர்வினை கீழ்நிலைப் படுத்தும் அரசியல் தணிக்கை அதிகாரத்தை தனக்குத் தானே அளித்துக் கொள்கிறது.
கூடுதலாக, தனிப்பட்ட நிறுவனங்களிடமும் தொழில்துறை அமைப்புகளிடமும், அவர்க ளுடைய தொழிலாளர்களின் தேர்தல் பங்க ளிப்பை கண்காணிக்கும், வாக்களிக்காத தொழிலாளர்களின் பெயர்களை வெளியிட்டு அவமானப்படுத்துவது உள்ளிட்ட, உரிமையை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை குஜராத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது! ஆக அச்சமற்ற, சாதகமற்ற, சுதந்திரமான தேர்தல்களின் இடத்தில், ஆதார்வாக்காளர் பட்டியல் இணைப்பாலும் தேர்தல் பங்கெடுப்பை கண்காணிக்கும் கார்ப்பரேட்டுகள் மூலமாகவும் வாக்காளர்களை அச்சுறுத்தலுக்கும் கண்காணிப் பிற்கும் உட்படுத்தும் ஒரு முறைமை உருவாக்கப் பட்டு கொண்டிருப்பதை நாம் தற்போது காண்கிறோம். 'பங்கெடுப்பதை கண்காணிப்பதில்' துவங்கி, வாக்காளர்களின் விருப்பத்தேர்வு மீது செல்வாக்கு செலுத்தியும், கருத்துக்களைத் திணித்தும் உண்மையான முடிவுகளை முன்தீர்மானிப்பதை நோக்கி செல்வதற்கு சிறு இடைவெளி மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை முழுமையான கேலிக்குரியதாக மாற்ற அரசு அச்சுறுத்தும் போது மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள், உரிமைகள் ஆகியவற்றுக்கான இயக்கங்களின் இடமாக தேர்தல் களத்தை மீட்டெடுத்து, விழிப்புடன் பாசிசத்தை தடுக்க வேண்டியது குடிமக்களின் வேலையாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)