புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலைடா குவாரா இந்தியாவிற்கு வந்தபோது டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக பொதுச் செயலாளர் து.ராஜா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, ஆர்ஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, கியூபாவின் தூதர் அலெக்ஸாண்டர் சிமன்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய அலைடா, பொருளாதார தடை பற்றி பேசுவது எளிதானது. ஆனால், அதை நேரில் அனுபவிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதை உணரமுடியும் என்றார். அவர் மேலும் நாங்கள் பொருளாதாரத் தடைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காக நாங்கள் பெரும் விலை கொடுத்துள்ளோம். கியூபாவிற்கு மருந்துகள் விற்றால் அந்த நிறுவனத்திற்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்படும், கியூபாவுடன் வணிகம் செய்தால் அந்த நாட்டில் இருந்து தன்னுடைய முதலீட்டை அமெரிக்கா திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்றார்.