தமிழ்நாட்டு அரசியலில் காலூன்ற பாஜக தீவிரமான முயற்சி களை மேற்கொண்டு வருகிறது; மற்றொருபுறம், ஆர்எஸ்எஸ் பாரத (இந்துத்துவா) கலாச்சாரத்துடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை இணைக்க காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. புனித யாத்திரைப் பயணங்களாக தமிழ்நாட்டு மக்களை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கும், குஜராத்திற்கும் அழைத்துச் செல்வதுடன், இந்துத்துவா கருத்தியலை புகுத்தும் கோயில் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் கட்டமைக்கப்படுகின்றன.

சமீபத்தில் நிறைவுபெற்ற சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் விழாவில் பேசிய பிரதமர் மோடி "குஜராத்தில் சோமநாதபுரம் சிவன் கோவில் தாக்கப்பட்ட பொழுது, சவுராஷ்டிரா பகுதியில் இருந்து தப்பியவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களைத் தமிழகம் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டது. அவர்கள் புது வாழ்க்கை தொடங்க உதவியது.

ஆனால் அதற்கும் முன்பிருந்தே, குஜராத் தமிழகத்திற்கு இடையே ஆழமான தொடர்புகள் இருந்தன. 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இருக்க முடியுமா?

தமிழ்நாட்டு சவுராஷ்டிரா மக்களின் வரலாறு:

சவுராஷ்டிரா சமூகத்தினர், கி.பி. 11ஆம் நூற்றாண்டில் கஜினி முகமதுவால் குஜராத் சோமநாதர் கோவில் தாக்கப்பட்டபோது தப்பித்து தமிழ்நாடு வந்தவர்களா?

வரலாறு தெரிவிப்பது என்னவென்றால், "கி. பி. 11ஆம் நூற்றாண்டில் கஜினிமுகமது சோமநாதர் கோயில் மீதான படையெடுப்புக்குப் பிறகு சவுராஷ்டிரியர்கள் தெற்கு குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு புலம் பெயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. கி.பி. 13ஆம் நூற்றாண்டு வரை யாதவ மன்னர்கள் ஆட்சியில் சவுராஷ்டிரர் கள் இன்றைய மஹாராஷ்டிராவின் தௌலதா பாத்தில் உள்ள தேவகிரியில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. யாதவ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி. 14ஆம் நூற்றாண்டில், கர்நாடகா ஹம்பியைத் தலைநகராகக் கொண்ட விஜயநகரப் பேரரசு விரிவடைந்தது. விஜயநகரப் பேரரசு மன்னர்களின் அழைப்பின் பேரில் சவுராஷ்டிரர்கள் தென்னிந்தியாவிற்குள் வந்தனர்; மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னருக்கு சிறந்த பட்டாடைகள் உற்பத்தி செய்பவர்களாக இருந்தனர். விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கி.பி.16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நாயக்க மன்னர்களால் தஞ்சாவூரிலும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மதுரையிலும் குடியமர்த்தப்பட்டனர்.

"தென்னிந்தியாவில் குலங்களும், குடிகளும்" தொகுப்பு நூல்களை வெளியிட்ட எட்கர் தர்ஸ்டன் பட்டு நூல்காரர் என்ற தலைப்பில் இவர்கள் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார். அவர்கள் 'கி.பி.11ஆம் நூற்றாண்டில் குஜராத்தில் நடைபெற்ற அன்னியர் தாக்குதல்கள் காரணமாக வெளியேறியதாக" ஒரு வாய்மொழித் தகவல் களைத் தெரிவித்தாலும், தமிழ்நாட்டுக்கு சவுராஷ்டிரர்களின் வருகை 16ஆம் நூற்றாண்டில் நடந்ததாகவே பல வரலாற்று ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். சவுராஷ்ட்ரர்களின் சமூக அமைப்புகளும் கூட இக்கூற்றை உறுதி செய்கின்றன.

கஜினி முகம்மது படையெடுப்பால், சில குடும்பங்கள் தென்னிந்தியாவிற்கு வந்திருக்கலாம் அல்லது சத்ரபதி சிவாஜி தென்னிந்தியா மீது படையெடுத்த போது வந்த சில குடும்பங்கள் திரும்பாமல் தமிழ்நாட்டில் தங்கி இருக்கலாம் என தமிழ்நாட்டுக்குள் சவுராஷ்டிரா மக்கள் வருகை பற்றி பல்வேறு கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. எனினும், வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் ஏற்கப்படும் கூற்று என்னவென்றால், சவுராஷ்ட்ரர்கள் மன்னர்களுக்கு பட்டாடைகள் தயாரிப்பவர்களாக (Royal Weavers) இருந்ததால், விஜயநகரப் பேரரசு காலத்தில் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாட்டின் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு இருக்க வேண்டும். இன்றளவும் மதுரை திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் சவுராஷ்ட்ரர்கள் வாழ்கின்றனர். பிறகு, கும்பகோணம், சேலம், திருச்சி, திருநெல் வேலி மாவட்ட பகுதிகளுக்கும் குடியமர்த்தப்பட்டனர். 

வரலாற்றை திரிக்கும் முயற்சி

கி.பி. 11ஆம் நூற்றாண்டில், குஜராத்தில் சோமநாதபுரம் சிவன் கோவில் தாக்கப்பட்ட போது சவுராஷ்ட்ரர்கள் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், 500 ஆண்டுகள் கழிந்த பின்னர், கி.பி.16ஆம் நூற்றாண்டில்தான் அவர்கள் தமிழ்நாடு வந்ததற்கான சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டில், கி.பி. 11ஆம் நூற்றாண்டில் நிலவிய சோழர்கள் ஆட்சி காலத்திய கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள் மற்றும் வெளிநாட்டு பயணக் குறிப்புகள் உள்ளிட்ட எவற்றிலும், "மன்னர் குடும்பங்களுக்கு பட்டுத் துணிகளை நெய்து கொடுத்த இந்த பட்டுநூல்காரர்கள்" பற்றிய எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை.

தமிழ்நாட்டு சவுராஷ்டிரா மக்களின் பொதுப் புத்தியில், இசுலாமியர் வெறுப்பு அரசியலை திணிப்பதும், அவர்களை தங்களுடைய வாக்கு வங்கியாக மாற்றுவதும்தான் சங்கப் பரிவாரத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டில் உள்ள சில சாதிகளை, சமூகக் குழுக்களை கொத்துக் கொத்தாக இந்துத்துவா அரசியல் பிடிக்குள் கொண்டு செல்வது பாஜக-ஆர்எஸ்எஸ்-சங்கப் பரிவாரத்தின் திட்டமாகும். அதற்காக, வரலாற்றைத் திரிப்பதை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் பாஜக செய்து வருகிறது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் நோக்கமும் அதுவே ஆகும்.