ஏப்ரல் 15 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்க, பிரயாக்ராஜ் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் அகமது இருவரும் தண்டனைக் கைதிகளாக போலீஸார் புடை சூழ கையில் விலங்குடன் அழைத்துச் செல்லப்படும்போது, அவர்களுக்கு மிக அருகில் வந்து சங் பரிவார் குண்டர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்களைக் கொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார்கள். அவர்கள் இருவரும் இறக்கும் வரை சுடுகிறார்கள். அதை போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடப்பதையெல்லாம் அப்படியே தொலைக்காட்சியில் உலகெங்கும் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்தே இந்தப் படுகொலையை அரங்கேற்றினார்கள் சங்பரிவார் குண்டர்கள். உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் முதல்வர் ஆன பின்பு போலி மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லலாம் என்றார் யோகி. குற்றவாளிகள் என்று சொல்லப்படுபவர்களை காவல்துறை என்கவுண்டரில் கொல்வது என்பதை விட, சங்பரிவார் கும்பல்கள் எந்த விதமான அச்ச உணர்வும் இன்றி, வெளிப்படையாகவே கொலை செய்கிறார்கள். பாஜகவின் யோகி ஆதித்யாநாத் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், சட்டத்தின் ஆட்சி என்பது முற்றிலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அத்திக் அகமதுவின் மகன் அசாதை போலீஸார் என்கவுண்டரில் கொன்றார்கள். குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் என்கவுண்டர்தான் சர்வரோக நிவாரணி என்கிறார் சாத்வீகத்தைப் போதிப்பதாகச் சொல்லும், காவி உடை தரித்த யோகி. அவர் வெளிப்படையாகவே அத்திக் அகமதுவை மிரட்டினார். அதனால், அத்திக் அகமது உச்சநீதிமன்றத்தில், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று முறையிட்டார். அத்திக் அகமதுவின் வழக்கறிஞர், குஜராத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு அத்திக்கைக் கொண்டு வந்தால் அது அத்திக்கிற்கு மரணத்திற்கான அழைப்பாணையாக இருக்கும் என்று கூறினார். உச்ச நீதிமன்றமோ, அத்திக் ஏற்கனவே காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் அதனால், அரசாங்கம் அவரைக் கவனித்துக் கொள்ளும் என்று வாய் மொழியாகச் சொன்னது. சொன்னதுபோலவே காவலர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அத்திக்கும் அஸ்ரப்பும் கவனிக்கப்பட்டுவிட்டார்கள். அத்திக் போல, ஆதித்யாநாத்தும் ஒரு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர். யோகி 2006ல் கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் தனக்கு உத்தரப்பிரதேசத்தில் அச்சுறுத்தல் இருக்கிறது, பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டார். அவர் இப்போது முதல்வர் பதவியில் இருந்து மற்றொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றுள்ளார். உத்தரப்பிரதேச அரசு ஆவணங்களின்படி 2017ல் 1038 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்கள். சிறையில் இருப்பவர்கள் விடுதலை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார்கள். இதில் அதிகம் கொல்லப்படுபவர்கள் இஸ்லாமியர்கள்தான். அத்திக், அஸ்ரப் இருவரும் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அவர்களின் கொலைக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. யாரையும் எவரும் கொன்று அழிக்கலாம் என்றால், சட்டம், நீதிமன்றம், காவல்துறை எல்லாம் எதற்கு? அவையெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிற காவிப் பாசிச பாஜகவினரைப் பாதுகாப்பதற்கு மட்டும்தானா? காவலர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவருக்கே இந்த முடிவு என்றால், எளிய மக்களின் நிலை என்னவாகும். பாசிச பாஜகவின் காட்டு தர்பார் மக்களால் முறியடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், மனிதத் தன்மையற்றவர்கள் மட்டுமே நாட்டில் மிஞ்சியிருப்பார்கள்.