அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாநில ஊழியர் கூட்டம் 16.04.2023 அன்று திருச்சி அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ரேவதி, இக்க(மாலெ) கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர் கிருஷ்ணவேணி, தேன்மொழி, பிலோமினா, ஈஸ்வரி, மனோன்மணி கொண்ட தலைமைக்குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியது. 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

"மகளைப் பாதுகாப்போம்" என்று சொல்லும் மோடி ஆட்சி, பெண்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. பெண்கள் இயக்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வேலை செய்துவரும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை மோடி அரசு ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. டிஜிட்டல் வருகைப் பதிவேடு என்ற பேரால், இந்த வேலைத் திட்டத்திலிருந்து பெண்களை வெளியேற்றும் மோடி ஆட்சியின் சதித் திட்டதை முறியடிக்க போராட்டங்களை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த 5 குழந்தைகளுக்கு தாயான பெண், அவருக்கு வேலை மறுக்கப்பட்டதால் பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு மோடி ஆட்சி தான் பொறுப்பு. நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றாமல் மோடி அரசு மறுத்து வருகிறது. பெண் விடுதலை போராட்டத்தில் முன்னோக்கிச் செல்ல மோடி ஆட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றும் தொடர் பரப்புரை இயக்கத்தை நடத்துவதென கூட்டம் முடிவு செய்துள்ளது. ஜனநாயகத்தைக் காக்கும் தேசத்தைக் காக்கும் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெறுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

* பெண்களுக்கு வரவேற்கத்தக்க சில சமூகத் திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியிருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கத் தவறிவிட்டது. பெண்களுக்கு இன்னும் சொத்துரிமை வழங்க வில்லை. சட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது. தோள் சீலைப் போராட்டம், வைக்கம் போராட்டம், பெண்களும் அர்ச்சகராகலாம் போன்ற முற்போக்கு மரபுகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளும் பெருகி வருகிறது. பள்ளிகள், கலாஷேத்ரா போன்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருகின்றன. மதுரை எஸ்விஎன் கல்லூரியில் பெண் மாணவர்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இதில் மாநில பெண்கள் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்திட வேண்டும். இது போன்ற குற்றங்கள் தொடர்வதற்கு காரணம் பொள்ளாச்சி தொடங்கி இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை என்பதுதான். பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் வேளையில் குற்றவாளிகள் அச்சமின்றி திரிவதுதான் காரணம். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் 5440 வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதே மிக மோசமான ஒரு எடுத்துக்காட்டு.

கல்வி நிறுவனங்களில், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப் படவேண்டியதை உறுதி செய்ய வலியுறுத்தி மாநில மகளிர் ஆணையத் தலைவரையும் முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தவும் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

மே மாதத்தில் பெண்கள் கழக உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடத்துவது, அதைத் தொடர்ந்து மாவட்ட மாநாடுகள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மனுதர்ம எதிர்ப்பு சிறப்பு மாநாடு நடத்துவது ஆண்டு இறுதியில் பெண்கள் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்துவதென்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.