இந்தியாவிலேயே முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது சென்னை மெரீனா கடற்கரையில்தான். மே 1, 1923 அன்று, தோழர் சிங்காரவேலரால் சென்னையில் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. அதே போல, சென்னையில்தான் முதல் தொழிற்சங்கமும் தோழர் சிங்காரவேலரால் துவக்கப்பட்டது. 2023ல் இந்திய தொழிலாளர் வர்க்கம் அனுசரிக்கும் மே முதல் நாள், மே நாள் கொண்டாட்டத்தின், மே நாள் சூளுரையின் ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதாகும்.

மே நாள், 8 மணி நேர வேலைக்காக தொழிலாளர்கள் தமது உயிரைத் துறந்த தியாகத்தின் நாள்! பின்னர், எட்டு மணி நேர வேலையை சட்டமாக, உரிமையாக உலகத் தொழிலாளர் வர்க்கம் வென்றெடுத்ததைக் குறிக்கும் நாள். ஆனால், இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு நூற்றாண்டு கால தியாகத்தால் வென்றெடுக்கப்பட்ட சட்டங்களை மோடியின் பிஜேபி அரசு தட்டிப்பறிக்கிறது. 12 மணி நேர வேலை என்பது பிஜேபி ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சட்டமாக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் முதல் நாள் அன்று நாடு முழுக்க அந்த தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை நடைமுறைக்குக் கொண்டு வந்து, தனது கார்ப்பரேட் முதலாளிகள் விசுவாசத்தைக் காட்டிடத் துடித்த ஆர்எஸ்எஸ்-பிஜேபி மோடி அரசு, இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் தொய்வற்ற தொடர் போராட்டம் காரணமாகவும், அதை நடைமுறைப்படுத்தினால், 2024ல் தோற்றுப் போய்விடுவோமோ என்ற பயத்தின் காரணமாகவும் தற்காலிகமாக அதை அமுல்படுத்துவதை ஒத்தி வைத்திருக்கிறது.

மோடியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் வர்க்கத்துக்கு இழைத்த கொடுமைகள், துரோகங்கள் எண்ணற்றவை. கொரோனா ஒரு வரப்பிரசாதமாக பிஜேபிக்கு கிடைத்து விட்டதால், கொரானாவைக் காரணம் காட்டி. தொழிலாளர் விரோதச் சட்டங்களை நிறைவேற்றி விட்டது. அவற்றை நடைமுறைப்படுத்தும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளில் தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாகி விட்டது. 300க்கும் குறைவான தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் இல்லை என்றாகி விட்டது. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் வேலையிலிருந்து துரத்துவதும் முதலாளிகளுக்கு எளிதாகிவிட்டது. எந்தவொரு பாதுகாப்பு வளையங்களும் உருவாக்கப்படாமலே, பெண்கள் இரவு நேரப் பணியாற்ற வேண்டும் என்பது சட்டமாகி வருகிறது.

சட்டப்படி கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவப் பாதுகாப்பு (இஎஸ்ஐ) தற்போது தனியார் காப்பீடுத் திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது. அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களையும் சட்ட பாதுகாப்புக்குள் கொண்டு வருவதாக தம்பட்டம் அடிக்கும் மோடி அரசு, இன்சூரன்ஸ் திட்டங்களைத்தான் மருத்துவத் திட்டம் என ஏமாற்றுகிறது. ஒரு தொழிலாளி எவ்வளவு பணம் இன்சூரன்சில் கட்டுவாரோ அவ்வளவுதான் பயன் கிடைக்கும். அநியாயம் என்னவென்றால், தொழில் நடத்துவது எமது தொழில் அல்ல என சொல்லும் அதே மோடி அரசு, புதிய சட்டங்களின் மூலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக மட்டும் செயல்படுகிறது. அதன் மூலம், சமூகப் பாதுகாப்புக்கு, தொழிலாளர்களுக்கு, அவர்களது உழைப்பால் கொழுத்த அந்த முதலாளிகள் பொறுப்பல்ல, வாரியங்களே பொறுப்பு. வாரியங்கள் அறிவிக்கும் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தொழிலாளர் செலுத்தும் பணத்தின் அளவே பொறுப்பு என்கிறது. இதன் மூலம் இ.எஸ்.ஐ, பி.எப், பணிக்கொடை உள்ளிட்ட அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் தொழிலாளர்களே பொறுப்பு என்கிறது பிஜேபி அரசு.

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய பென்சன் திட்டம் வேண்டும், புதிய பென்சன் திட்டம் வேண்டாம் என போராடி வருகிறார்கள். ஆனால், பழைய பென்சன் திட்டம் வழங்க முடியாது என்கிறது மோடி அரசு. மோடியின் அடிச்சுவட்டைப் பின்பற்றி திமுகவின் நிதி அமைச்சரும், தமது தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டுவர முடியாது என்கிறார்.

"வேலை இல்லாத் திண்டாட்டம் மட்டுமல்ல, ஊதியமும் கூட தொழிலாளர்களின் மிகப் பெரும் கவலையே” என்கிறார் பொருளாதார நிபுணர் ஜீன் டெரஸ். “2014 முதல் 2022 வரையிலான மோடி ஆட்சியின் 8 ஆண்டுகளைக் கணக்கிட்டுப்பார்த்தால், தொழி லாளர் ஊதியம் பெருமளவு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. உண்மை ஊதியத்தைக் கணக்கிட்டுப்பார்த்தால், ஊதியத்தை அதிகரித் திருப்பதாக சொல்லப்படும் துறையின் தொழிலாளர்களுக்கும் அது மிக அற்பமாகவே இருக்கிறது. விவசாயத் தொழிலாளர் ஊதியம் 0.9 சதவீதமும் கட்டடத் தொழிலாளர் ஊதியம் 0.2 சதவீதமும் விவசாய மல்லாத தொழில் செய்யும் தொழிலாளர் ஊதியம் வெறும் 0.3 சதவீதமும் மட்டுமே அதிகரித்து இருக்கிறது" என்கிறார். சரியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், கட்டடத் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. படித்து முடித்த வேலையில்லாப் பட்டாளமும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்திய நாட்டின் பெரிய வளம் மனித வளம் என்றால் அதை மலிவான விலையில் முதலாளிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான திட்டங்களையே மோடி தீட்டி வருகிறாரே தவிர அந்த மனிதர்கள் வளம் பெறுவது பற்றி அவருக்குக் கிஞ்சித்தும் கவலையே இல்லை. ஜீன் டெரஸ் கூறுவது போல, பிஜேபி அரசு பட்ஜெட்டுக்கு முன்னால் வெளியிட்டிருக்கும் 200 பக்க பொருளாதார சர்வே தொழிலாளர்கள், அவர்கள் நிலைமை, ஊதியம் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவே இல்லை.

பிஜேபி அரசின் தொலைநோக்குப் பார்வையில், நிரந்தரமான தொழிலாளர்களே இல்லை என்பது மட்டுமல்ல, நிரந்தரமே வேண்டாம் எனச் சொல்பவர்களை, பக்கோடா தொழிலாளர்களை, எந்தவித பாதுகாப்புமற்ற டெலிவரி தொழிலாளர்களை, கிடைக்கும் வேலையைச் செய்தாக வேண்டிய தொழிலாளர்களை இந்தியா முழுவதும் உருவாக் குவதே மோடியின் கனவாக இருக்கிறது.

வேலைப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஏதுமற்ற தொழிலாளர்கள், இளைஞர்களை உருவாக்குவதுதான் பிஜேபி- ஆர்எஸ்எஸ்ஸின் கனவுத் திட்டமாக இருக்கிறது. ஏனென்றால், அப்படிப்பட்ட வேலையில்லாப் பட்டாளம், அரைகுறை வேலை, அரைகுறை கூலி/ஊதியம் பெறும் பட்டாளம் வளர்கிற போது தான், விரக்தியுற்ற இளைஞர் பட்டாளத்தை, அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம்தான் பாசிச மதவெறி அரசியலுக்கான பட்டாளத்தை உருவாக்கிட முடியும் என பிஜேபி-ஆர்எஸ்எஸ் கருதுகிறது. அதற்கேற் பத்தான். அப்படிப்பட்ட ஒரு நிலைமையை உருவாக்கிடத்தான், தொழிலாளர் சட்டங் கள், கார்ப்பரேட் முதலாளிக்கான சட்டங்களாக உருமாற்றப் படுகின்றன. அரசுத்துறை, பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு, அதானிக்கும் அம்பானிக்கும் தாரை வார்க்கப் படுகின்றன. அதற்கு எதிராக எழுந்து வரும் தொழிலாளர் கிளர்ச்சிகளை ஒடுக்கிட கருப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் மீது ஏவப்படுகின்றன.

தமிழ்நாடு அரசாவது தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு சாதகமாக ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தால், அதுவும் நடப்ப தாக தெரியவில்லை. உதாரணமாக, தூய்மைப் பணியாளர்களுக்கு என மாநில அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியமும் கிடைக்க வில்லை. கோவை, குமரி மாவட்ட ஆட்சியாளர்கள் அறிவித்த மாவட்ட ஊதியமும் கிடைக்க வில்லை. கோவை தூய்மைப் பணியாளர்கள் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வாக்குறுதி வழங்கப்பட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டன. ஆனால், இன்றுவரை நாளொன்றுக்கு 715 ரூபாய் சம்பளம் மட்டும் அவர்களுக்கு கானல் நீராகவே இருக்கிறது. இந்த நிலையில் திமுக அரசு, தொழிற் சாலைகள் சட்டத் திருத்த மசோதவை முன்வைத்திருக்கிறது. இது கண்டனத்திற்குரியது. மோடியின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முதலாளிகள் ஆதரவு பாதையிலேயே திமுக அரசும் பயணிப்பதையே இது காட்டுகிறது. திமுக பிஜெபியை வாயளவில் எதிர்ப்பது, செயலளவில் ஆதரிப்பது என்பது போலவே தெரிகிறது.

உண்மையில் திமுக அரசு, தொழிலாளர் ஆதரவு அரசாக இருக்குமானால், பிஜேபிக்கு எதிரான அரசாக இருக்குமானால், மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிட வேண்டும். தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதவை - திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மோடி அரசின் தொழிலாளர்  விரோதச் சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு போராடுமானால், தொழிலாளர் வர்க்கம் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறது. அப்படி யல்லாமல், மோடியின் அடிச்சுவட்டையே திமுக அரசும் தொடரும் என்றால் அதற்கு எதிராகப் போராட தொழிலாளர் வர்க்கம் ஆயத்தமாகி வருகிறது.

*தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி, கார்ப்பரேட் முதலாளிகளின் காவலன் பிஜேபி அரசை, மோடி அரசை, வரவிருக்கும் 2024 தேர்தலில் தோற்கடிப்பதுதான், தூக்கி எறிவதுதான், இந்திய தொழிலாளர் வர்க்கத்தின், தமிழக தொழிலாளர் வர்க்கத்தின் 2023 மே நாள் சூளுரையாகும்!

நியாயமான கூலி, சிறந்த பணி நிலைமைகள், வேலை, ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்காகவும் தனியார் மயமாக்கத்திற்கு எதிராகவும் மக்கள் விரோத கருப்புச் சட்டங்கள், ஒடுக்குமுறை சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் போராடுவோம் என இந்த மே நாளில் சூளுரைப்போம்!

இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாக, தமிழகத்தில் முதல் மே நாள் கொடியை ஏற்றிய தோழர் சிங்காரவேலர் வழிநடப்போம்!

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதவை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெறச் செய்யப் போராடுவோம்!"