4ஆவது அகில இந்திய மாநாடு

2023 ஜூலை 8-9

தோழர் என். கே. நடராஜன் நகர்

தோழர் ஹரி சிங் ஜாபர் நினைவரங்கம் தோழர் ஓம் பிரகாஷ் சர்மா தோழர் பொன்ராஜ் நினைவு மேடை -

(புனித பீட்டர் மையம் - சர்ச்)

சி.எஸ்.ஐ சர்ச் ரோடு

கன்னியாகுமரி

கௌரவமான ஊதியம், தொடர்ச்சியான வேலை, சமூக பாதுகாப்பு மற்றும் கௌரவமான வாழ்க்கைக்காக போராடுவோம்!

நலவாரியம் நம்முடையது! அது அரசாங்கம் கொள்ளையடிப்பதற்கான கருவி அல்ல!

நமது கடினப்பட்ட போராட்டத்தின் விளைவாக பெற்ற நல வாரிய உரிமையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்! 

தொழிலாளர் ஈட்டுறுதி, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், விலையில்லா குடியிருப்பு உள்ளிட்ட அனைத்தும் தழுவிய பயன்கள் கொண்ட நலவாரியத்திற்காக போராடுவோம்! 

சமூகப் பாதுகாப்புச் சட்டத் தொகுப்புக்கு எதிராக, தொழிலாளர்களை அடிமையாக்கும் இதர சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக போராடுவோம்!

வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்!

மதவாத வெறுப்பு, கார்ப்பரேட் மேலாதிக்கத்திற்கு எதிராக செந்தொழிலாளர் இயக்கத்தை, அலையலையான போராட்டங்களை கட்டமைப்போம்!

நமது ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்துவோம்!

2023 ஆம் ஆண்டை தொழிலாளர்களின் அலையலையான போராட்டங்களின் ஆண்டாக மாற்றுவோம்! 

2024 தேர்தலில் மோடி ஆட்சியை தோற்கடிக்க உறுதியேற்போம்!

அன்பிற்கினிய நண்பர்களே!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழிலாளர் சக்தியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% பங்களிப்பு செலுத்துவதாகவும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பின் மீது இன்று மோசமான தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. மோடியின் "நல்ல காலம்" என்ற வாக்குறுதி கொடிய நகைச்சுவையாக மாறிவிட்டிருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்களின் நீடித்தப் போராட்டம் காரணமாக 1996இல் மத்திய சட்டம் கொண்டுவரப்பட்டு அதன் கீழ் மாநிலங்களில் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், மோடி அரசாங்கம் இந்த மத்திய சட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது. இதற்கு பதிலாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பை கொண்டு வருகிறது. இருக்கின்ற நல வாரியங்கள் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் ஒரு கௌரவமான சமூகப் பாதுகாப்பை பெற முடிந்தது. அது இப்போது சமூக பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு மூலம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 

சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு தொழிலாளர் களின் உரிமையை பறிப்பதற்கான கருவி.

கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதற்கான வழியாக சமூக பாதுகாப்புச் சட்டத் தொகுப்பு உள்ளது. அதே நேரம் அது வேலை அளிப்பவரின் கடமைகளை நீர்த்துப்போக செய்து, தொழிலாளர்களை முதலாளிகள் மனம் போன போக்கில் எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ள அனுமதிக்கிறது.

சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பில் சில சரத்துகளை பார்ப்பது நல்லது.

50 லட்சம் ரூபாய்க்குக் குறைவான மதிப்பு கொண்ட குடியிருப்பு கட்டுமானங்களுக்கு கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகள் என்ற வரையறையிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. இதன் மூலம் பெரும் எண்ணிக்கை யிலான தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலா ளர்கள் என்ற பிரிவிலிருந்து வெளியே தூக்கி எறியப்படுவார்கள். அதனால், அவர்களின் சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் பறிபோகும். அதுபோல, மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நலவாரிய திட்டங்களோ அல்லது நடவடிக்கை களோ இருக்கக் கூடாது என்கிற படியாக நலவாரிய செயல்பாடு மாற்றி அமைக்கப்படுகிறது.

மேலும், நலவாரியத்தில் உள்ள தொழிலாளர் களின் நலனுக்காக திரட்டப்பட்ட பணத்தை எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்ய வாரியத்துக்கு அதிகாரம் அளிக்கப் படுகிறது. இது ஊக வணிகத்துக்கு இடம் கொடுக்கும் செயலாகும். செஸ் வரி பிடித்தம் சம்பந்தமாக வேலை அளிப்பவரே சுய மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகம் செய்தும் செஸ்வரி மற்றும் வட்டி வீதத்தை குறைத்தும் செஸ் வரிக்கான சரத்துக்கள் மிகவும் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளன.

பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ தேவைகள் சம்பந்தமாகவும் அது போல் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகள் குறித்தான வேலை அளிப்பவர் பின்பற்ற வேண்டிய கடமைகளும் கூட நீர்த்துப் போக செய்யப்பட்டுள்ளன. கட்டுமான தொழிலாளிக்கு பணியிடத்தில் ஏற்படும் காயங்களுக்கான இழப்பீட்டு உரிமம் மறு வரையறை செய்யப்பட்டுள்ளதால் பெரும் எண்ணிக்கை யிலான தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் ஏற்படும் காயங்களுக்கான இழப்பீடு கிடைக் காது. மிகை நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் என்பதும் நீர்த்துப்போக செய்யப்பட்டுள்ளது.

நிறுவன மயப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டம் என்பதற்கு பதிலாக விபத்து மரணத்திற்கு ரூ 2 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு ரூ 1 லட்சம் மட்டுமே வழங்கும், வேறு எந்தப் பயனும் இல்லாத இ-ஸ்ரம் என்ற மாயை சமூகப் பாதுகாப்பு திட்டத்தை பதிலீடாக முன்வைக் கிறது. மற்ற சமூக பாதுகாப்புக்கு தொழிலாளர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கும்படி செய்யப்படுகிறார்கள். உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டங்களை இலவசங்கள் என்று தூற்றுகிற மோடி அரசாங்கம், பல லட்சம் கோடிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்குகிறது.

இன்னொரு பக்கம், நல வாரியங்களில் குவிந்துள்ள பணத்தில் ஒரு சிறு தொகை மட்டுமே தொழிலாளர்களின் நலப் பயன் களுக்காக செலவிடப்படுகிறது. மற்றபடி தொழி லாளர் நலனுக்காக சேமிக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் கொள்ளையடிப்பதற்கான கருவி யாகவே நலவாரியம் உள்ளது

2019 வரை நாடு முழுவதும் உள்ள நல வாரியங்களில் வசூலித்த செஸ் தொகை ரூ.49,688.07 கோடி. அதில் செலவழித்த தொகை ரூ.19,379.922 கோடி மட்டுமே. இதுவல்லாமல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய எண்ணிலடங்காத தடைகள் உருவாக்கப்பட்டி ருக்கின்றன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்யாததால் பலனை அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறும்போது நடை முறையில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எவ்வித உயர்வும் இல்லை. மாறாக, ஊதியம் குறைவதால் நிராதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கட்டுமான தொழிலாளர்களின் பெரும் பிரிவு புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவிதமான பாகுபாட்டுக்கும் ஆளாவதோடு கடுமையான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆட்படுகிறார்கள். மார்ச் 2020இல் மோடி திட்டமிடப் படாத, கொடிய முழு முடக்கத்தைத் திணித்த போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதி இல்லாமல் பல நூறு கிலோமீட்டர் தூரம் அவர்கள் பயணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டதால் பலர் வழியிலேயே இறந்து போக நேரிட்டது. முழு முடக்க காலத்தில் மொத்த தொழிலாளர் களில் கால்வாசி தொழிலாளர்கள் அதாவது 1.23 கோடி பேர் மட்டுமே வாரியத்தில் இருந்து உதவி பெற்றார்கள்.

கட்டுமானத் தொழிலாளர்களின் பெரிய பகுதி பெண் தொழிலாளர்களைக் கொண்டது. ஆனால், அவர்கள் பாலியல் துன்புறுத்தலுடன் கூடவே ஊதியத்தில் பாலியல் ரீதியான பாகுபாட்டையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பெரிய அரசாங்க கட்டுமான திட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் வெளி உலகத்தி லிருந்து துண்டிக்கப்பட்டு சிறைக் கைதிகளை போல வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர். இதற்கு மிக பளிச்சென தெரியும் உதாரணம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணி ஆகும்.

போராட்டங்களை தீவிரப்படுத்தி உரிமைகளை மீட்டெடுப்பது தான் முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி!

கட்டுமானத் தொழிலாளர்களின் நீண்ட போராட்டத்தின் விளைவாக மத்திய சட்டமும் நல வாரியமும் கொண்டுவரப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர்கள் கௌரவமான /மேலான ஊதியத்துக்காகவும் (குடியிருப்பு, சுத்தமான தண்ணீர், சுகாதாரம், குழந்தைகளின் கல்வி இன்ன பிற உள்ளிட்ட) கௌரவமான வாழ்நிலைக்காகவும் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக மோடி அரசாங்கம் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் இதர உரிமைகளை மீட்டெடுக்க இப்போது போராட்டத்தை தீவிரப்படுத்தியாக வேண்டும். இன்று ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் கடும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மூலம் தொழிலாளர்கள் அடிமை நிலைக்கு தள்ளப் படுகின்றனர். அவர்களின் சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராடும் உரிமை பறிக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் முதலாளிகளின், கார்ப்பரேட் டுகளின் பிடி நெருக்குகிறது. உரிமைகள் பறிக்கப் படும் போது ஏழ்மை,நிராதரவான நிலை, வேலையின்மை, சமத்துவமின்மை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. மோடி ஆட்சி அடிப்படை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவும் போராடும் ஒற்றுமையை குலைக் கவும் மதவாத துருவச் சேர்க்கை என்ற ஆயுதத்தை பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தை பிரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

ஆனால், கர்நாடக மக்கள் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மதவாத திட்டத்தை நிராகரித்து அதை ஆட்சியிலிருந்து அகற்றி வழிகாட்டியிருக்கிறார்கள். 

சாமானிய மக்களின் அனைத்துப் பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதால் ஒன்றுபட்ட போராட்டம் காலத்தின் தேவையாக உள்ளது. தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக கட்டுமான தொழிலா ளர்கள் உள்ள போது, இயக்கத்தை பலப்படுத்த கட்டுமான தொழிலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தாலும் பரந்த மக்களின் ஒற்றுமை யாலும் மட்டுமே இந்தத் தாக்குதலை பின்னுக்குத் தள்ள முடியும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டத்தில் இதை நாம் கண்டுணர்ந்தோம்.

உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசாங் கத்தின் தாக்குதலை, பிரித்தாளும், ஏமாற்றும் சூழ்ச்சியை நாம் முறியடிப்போம்!

அதற்கு தக்க பதிலடி கொடுத்து தொழிலா ளர்கள் விரோத, மக்கள் விரோத மோடி அரசாங்கத்தை 2024 பொதுத்தேர்தலில் ஆட்சியிலிருந்து அகற்றுவோம்!

ஏஐசிசிடியுவுடன் இணைக்கப்பட்ட அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் (AICWF) அகில இந்திய மாநாடு இந்தத் திசைவழியில் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கட்டுமான தொழிலாளர்களின் உரிமை களை மீட்டெடுக்க உறுதியேற்கிறது.

நமது மிகச் சிறந்த சக்தியையும் பங்களிப் பையும் செலுத்தி இந்த மாநாட்டை பெரும் வெற்றியடைய செய்வோம்! 

கோரிக்கைகள்:

* கட்டுமான தொழிலாளர்களின் கூலி இரண்டு மடங்காக உயர்த்தப்பட வேண்டும்! பஞ்சப்படியுடன் கூடிய ஓய்வூதியம் ரூ.10,000 வேண்டும்.

*தொழிலாளர் ஈட்டுறுதி, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், விலையில்லா குடியிருப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் தழுவிய சமூக பாதுகாப்புத் திட்டம் வேண்டும்!

*நலவாரியத்தில் தொழிலாளர் நலப் பயன்கள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்! நல வாரியத்தை பலவீனமாக்க, சீர்குலைக்கக் கூடாது!

*தொழிலாளர்களின் நலன்களுக்கு முதன்மை வேலையளிப்பவரையே பொறுப்பாக்கு!

செஸ் வரியை 3% ஆக உயர்த்தி நல வாரியத்தை பலப்படுத்துவதோடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% பட்ஜெட் ஒதுக்கீடாக செய்யப்படவும் வேண்டும் !

*தொழிலாளர் நல வாரியங்களில் நேரடியாக தொழிலாளர்களை உறுப்பினராக்குவதோடு கூடவே இணையவழியிலும் உறுப்பினராக சேர்க்க ஏற்பாடு வேண்டும்!

நலவாரிய உறுப்பினர் சேர்க்கையில் தொழிற்சங்கத்திற்கு இருக்கின்ற உரிமையை பறிக்காதே!

*சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பையும் இதர தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளையும் திரும்பபெறு!

*எட்டு மணி நேர வேலை நாளை உறுதி செய்! கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கு! மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான போனஸ், விடுமுறை, பணிக் கொடை உள்ளிட்ட பயன்களை கொண்டு வா!

பெண் கட்டுமானத் தொழிலாளர்களின் பாலியல் துன்புறுத்தலை நிறுத்த சட்ட விதிகளின் கடுமையான அமலாக்கத்தை உத்தரவாதம் செய்!

மகப்பேறு விடுமுறை உட்பட பெண் கட்டுமானத் தொழிலாளர்களின் சட்டப்படியான பலன்களை உத்தரவாதம் செய்!

நலவாரிய குழுக்களில் அனைத்து மைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதம் செய்!

நலவாரியத்தை தன்னார்வ தொண்டு நிறுவனமாக மாற்றுவதை நிறுத்து!

நலவாரிய நிதியைக் கையாள தனியார் நிறுவனங்களை அனுமதிக்காதே!