மக்கள் விரோத, பிரிவினைவாத பாஜகவுக் கும் சங் பரிவாரின் சூழ்ச்சிகளுக்கும் கர்நாடக மக்கள் தீர்மானகரமான தோல்வியை அளித்ததற்கு இகக(மாலெ) பாராட்டுகளைத் தெரிவிக்கிறது. 2024ல் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு இந்த வெற்றி ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

கர்நாடக மக்களுடைய தீர்ப்பு, பாஜகவின் பிரிவினை வாத பிரச்சாரத்துக்கு எதிரானது. அது பாஜக அரசாங்கத்தின், இதுவரை பார்த்திராத ஊழலுக்கு எதிரான குரல். இந்தத் தீர்ப்பு விலைவாசி உயர்வுக்கு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு எதிரானது. இது உடைந்து நொறுங்கும் நிலையிலுள்ள மாநிலத்தின் உட்கட்டுமானத்திற்கு, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு எதிரானது. அதுபோல இது ராக்கெட் வேகத்தில் செல்லும் வேலையின்மை, நொடிந்து போன மாநிலப் பொருளாதாரம், பெண்களுக்கு எதிரான, அவர்களின் சுயாட்சிக்கு எதிரான வன்முறை, பெருகிவரும் சாதிய வன்கொடுமைகள், மத நல்லிணக்கமின்மை, மத வெறுப்பு மற்றும் மதவெறிக்கு எதிரான தீர்ப்புமாகும்.

பிரதம மந்திரி நரேந்திர மோடியை களத்தில் இறக்கி விட்ட பிறகும், மாநிலம் முழுவதும் அவரை வைத்து சாலைகளில் ஊர்வலங்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்திய பிறகும் பாஜக அடைந்துள்ள படுதோல்வி, மோடி என்ற பிரம்மாண்ட பிம்பத்தை உருக்குலைக்கவே முடியாது என்பதற்கு எதிரான அறிகுறியாகும். வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த பிறகு அமைதியாக இருக்க வேண்டிய காலம் உட்பட நடத்தை விதிகளை மீறியதற் காகவும் நடவடிக்கை எடுக்கத் தவறிய பல் இல்லாத தேர்தல் ஆணையம் ஆகியவை எல்லாம் மாநிலத்தில் ஜனநாயக முறைகள் சீர்குலைந்து போயிருப்பதையே காட்டுகிறது.

ஆட்சியில் இருந்த பாஜக அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் தோல்வியுற்றதை இந்தத் தேர்தலில் பார்க்க முடிந்தது. கோவிட்19 நெருக்கடி காலத்தில் முறையற்ற நிர்வாகத்திற்காக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தோற்கடிக்கப் பட்டார். அதுபோல் ஹிஜாப் அணிய தடை விதித்த, முஸ்லிம் மாணவிகளை அவமானப் படுத்தியதோடு அவர்களுக்கு கல்வியை மறுத்த கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் தோல்வி அடைந்தார். பாஜகவின் தேசியச் செயலாளர் சி.டி.ரவியின் தோல்வி பாஜகவின் மதவாத அரசியல் நிகழ்ச்சிகளை மக்கள் நிராகரித்ததற்கான அழுத்தந் திருத்தமான செய்தியாகும்.

இகக(மாலெ) போட்டியிட்ட கே.ஆர்.புரம் தொகுதியிலும் கனககிரி தொகுதியிலும் மேற் கொண்ட கடினமான பணிகளுக்குப் பிறகும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை. தேவையான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு தவறுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவின் பாசிச தாக்குதலுக்கெதிராக இகக(மாலெ) வீதிகளில் தொடர்ந்து குரலை கொடுக்கும் அதே வேளை, வரவிருக்கிற புதிய அரசாங்கம், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதையும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் உறுதி செய்யும்.

"பாஜகவை தோற்கடிப்போம், கர்நாடகாவை பாதுகாப்போம்" என்ற நமது முழக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் வாக்களித்த கர்நாடக மக்களுக்கும் 2 தொகுதிகளில் இகக(மாலெ) வுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாஜக அரசாங்கத்தின் செயல்பாடு பற்றி, அதன் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தோலுரித்து, பல்வேறு துறைகளின் செயல்பாடு பற்றிய தரவுகளுடன் கூடிய அறிக்கைகளை வெளியிட்டு அம்பலப்படுத்தி அதன் தோல்விக்கு உதவிய 'பகுத்வ கர்நாடகா', 'எட்டெலு கர்நாடகா' போன்ற அமைப்புகளுக்கும் மற்றும் சிவில் சமூக இயக்கங்களுக்கும் அதுபோல் ஓய்வில்லாமல் களப்பணி ஆற்றிய தனி நபர்களுக்கும் இகக(மாலெ) வணக்கம் செலுத்துகிறது. 

சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிற சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான்மற்றும் தெலுங்கானா மாநில மக்கள், மக்கள் விரோத வெறுப்பு அரசியல் நடத்தும் பாஜகவை தோற்கடித்து ஜனநாயகத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.