ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா வாக்காளர்களைப் பார்த்து காங்கிரஸ் வெற்றி பெற்றால், மாநிலத்தில் கலவரங்கள் வெடிக்கும் என்று எச்சரித்துக் கொண்டிருந்தபோது, பாஜக ஆளும் மணிப்பூரில் மோசமான இன வன்முறை வெடித்தது. அது திட்டமிடப்பட்ட கலவரம் என்பதற்கான அனைத்து அடையாளங் களையும் கொண்டிருந்தது. ஒன்றிய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களில் 'இரட்டை இயந்திர அரசாங்கம்' உள்ளது என்றது. மணிப்பூரில் அரசிலமைப்புச் சட்டப் பிரிவு355ஐ பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய இரட்டை இயந்திர ஆட்சி, கண்டதும் சுட உத்தரவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 50ஐத் தாண்டியது. மாநிலத் தலைநகர் இம்பால் உள்பட, மலைகள் முதல் சமவெளி வரை எல்லா இடங்களிலும் வன்முறை பரவியது. உயர் பதவியில் இருந்த பழங்குடி அதிகாரிகளும் தலைவர்களும் கூட வன்முறைக் கும்பல்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். பல்வேறு தேவாலயங்கள் தீக்கிரையாகின. கடந்த காலங்களில் இருந்த கொஞ்சநஞ்ச அமைதியும் கூட மோசமாக அடித்து நொறுக்கப்பட்டது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சட்ட ஒழுங்கு மட்டும் கெட்டுப் போகவில்லை, மணிப்பூரின் மென்மையான சமூகக் கட்டுமானத்தில் ஆழமான விரிசல்களும் ஏற்பட்டுள்ளது என்பதை அங்கிருந்து வரும் செய்திகள் காட்டுகின்றன. ஒன்றிய அரசின் பழங்குடியினப்பட்டியலில் மெய்ட்டி சமுதாயத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மேல் முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் மாநில அரசாங்கத்திற்குப் பிறப்பித்த உத்தரவுதான் தற்போதைய வன்முறைக்குப் பின்னால் இருந்த உடனடிக் காரணமாகும். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு சமூகக் குழுவினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கச் சொல்லும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தற்போது கூறியுள்ளது. சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து நடந்துள்ள சம்பவங்களுக்கு இந்த ஒரு விசயம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அது முன்னமே திட்டமிட்டு கட்டமைக்கப் பட்டுள்ளது. மணிப்பூரின் அடிப்படைச் சூழலில், தற்போதைய வெளிப்பாடும் நமது கவனத்தைக் கோருகிறது. இனச் சுத்தப்படுத்துதல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவந்த பிரேந்திர சிங் அரசாங்கத்தை இதற்குக் காரணம் என்று பாஜகவின் பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்களே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

மணிப்பூரில் காலங்காலமாக ஆதிக்கத்தில் உள்ள மெய்ட்டி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரியது, மணிப்பூரில் உள்ள குர்கீஸ், நாகாஸ், மிசோஸ் மற்றும் இதர பழங்குடியின சமூகத்தினரைக் கோபமடையச் செய்தது என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதே. மெய்ட்டி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து கொடுப்பதின் மூலம் அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, பழங்குடியின மக்களுக்காகவே தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் நிலத்தில் அவர்களும் உரிமை கொண்டாட முடியும். ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட காடுகள் என்றும் காட்டு விலங்குகள் புகலிடம் என்றும் அறிவிப்பு செய்து பழங்குடி சமூகத்தினர் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அவர்களிட மிருந்து பிடுங்கி வைத்துள்ளனர். மலைப் பகுதிகளை நிர்வாகம் செய்யும் மலைப் பகுதிகள் கமிட்டியின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் போலவே மணிப்பூரிலும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டை (என்ஆர்சி) கொண்டுவருவதற்கான பாஜகவின் முயற்சியே பழங்குடி சமூகத்தினரிடையே எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பாதகமான சூழல் காரணமாக மியான்மரில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் மணிப்பூருக்கு பக்கத்தில் உள்ள மலைகளில் உள்ள பழங்குடியினர் வசிப் பிடங்களில் அகதிகளாக வசிக்கக் கோரிய வர்களை சட்டவிரோதமாக ஊடுருவிய வர்கள் என்று முத்திரை குத்தப் பட்டனர். மணிப்பூரின் குக்கீஸ் மற்றும் இதர பழங்குடியின மக்கள் எல்லை தாண்டி மியான்மர் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளார்கள். அப்படியிருக்கும் போது மியான்மரில் இருந்து அகதிகளாக வருபவர் களை, விரோதிகளாகச் சித்தரிக்கும் மணிப்பூர் பாஜக அரசாங்கத்தின் கொள்கையின் காரணமாக, மணிப்பூர் பழங்குடியினர் தங்களுடைய சொந்தச் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்களுக்கு உதவ முடியாத கையறு நிலையில் அவர்கள் வருத்தப்படுவது வெளிப்படை யானது. நாட்டில் வேறு இடங்களில் நடக்கும் சங் பரிவார்களின் கிறிஸ்தவர்களுக்கு எதிரான, மதமாற்றத்திற்கு எதிரான முரட்டுதனமான பிரச்சாரத்திற்கு இசைவாக மணிப்பூரிலும் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அது சொந்த நிலத்தில் இருந்து பழங்குடி மக்களை அந்நியப் படுத்தும் ஓரங்கட்டும் செயல் வட்டத்தை முழுமையாக்கியது.

வட கிழக்கின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதாக பாஜக சொல்லிக் கொள்கிறது. அதனுடைய மதத் துருவச் சேர்க்கை மற்றும் அடையாள அரசியலின் மோசமான சேர்மானம்தான் அஸ்ஸாம் அரசியலில் வெளிப்படையாக வேரூன்றியிருக்கிறது. அஸ்ஸாமிற்கு அடுத்து, பாஜக திரிபுராவிலும் மணிப்பூரிலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மணிப்பூரில் அதன் வளர்ச்சியானது முதன்மையாக சமவெளியிலுள்ள மெய்ட்டி சமூகத்தினரிடையேதான் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாஜகவின் 'மலைகளுக்குச் செல்வோம் 2.0' என்கிற பசப்பலான பரப்புரையின் வாயிலாக அதிகப் படியான பழங்குடியினரிடம் செல்வது என்ற ஒரு கொள்கையைப் பின்பற்றுவதாகப் பாசாங்கு செய்து கொண்டிருக்கிறது. தற்போதைய இன வன்முறையின் சலசலப்பானது சங் பரிவாரத்தின் வடகிழக்கிற்கான கேடுகெட்ட திட்டத்தின் உண்மையான சாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. கலாச்சார வேற்றுமை யையும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் பழங்குடியின சமூகத்தினரின் அபிலாஷைகளையும் பாதுகாப்பதுதான் வடகிழக்கின் அமைதி, ஜனநாயகம் மற்றும் வளர்ச்சிக்கான மையமாகும். பாஜகவின் இந்துத்துவ பெரும் பான்மைவாத நிகழ்ச்சி நிரலானது மென்மையான தன்மை கொண்ட வடகிழக்கு இந்தியாவிற்கு விரோத மானதாகும். மணிப்பூரின் தற்போதைய சூழலானது பாஜகவின் தீவிர நிகழ்ச்சி நிரலின் ஆபத்தான தாக்கங்கள் பற்றியும் வட கிழக்கு இந்தியாவில் அது வளர்ந்து கொண்டிருப்பது பற்றியும் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.