குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இன அழிப்பு தொடர்பாக. பல்வேறு தடயங்களைச் சேகரித்து, அந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்ளிட்டோருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வத்தை, தற்போது சிறைக்குச் செல்ல உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து, அவரின் 3 வயதுக் குழந்தையைக் கொன்று. ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 75வது சுதந்திர தினத்தின்போது குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டார்கள். குஜராத் இள அழிப்பு தொடர்பாக தொடர்ந்து போராடிய, டீஸ்டா செதல்வத் மோடி-அமித்ஷாவுக்கு எதிராக சமர்ப்பித்த ஆவணங்கள் ஆதாரமற்றவை, பொய்யானவை என்றும் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான இன அழிப்பில் மோடி குற்றவாளி இல்லை என்றும் கூறியது உச்சநீதிமன்றம். அதன் விளைவாக டீஸ்டா மீது, பொய் சாட்சிகளை உருவாக் கினார் என்று பொய் வழக்குப் போடப்பட்டு கைது செய்யப் பட்டார். அவருக்கு கடந்த செப்டம்பரில் இடைக்கால பிணை வழங்கப்பட்டது. நிரந்தர பிணை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் டீஸ்டா. அதைத் தள்ளுபடி செய்து அவரை உடனடியாக சரண்டர் ஆகச் சொன்னார் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிசார் தேசாய். சரண்டர் ஆவதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில், அதையும் தள்ளுபடி செய்து உடனே சரண்டர் ஆகச் சொன்னார் நீதிபதி. அதனைத் தொடர்ந்து உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகினார் டீஸ்டா. உச்ச நீதிமன்றம் அவர் ஏற்கனவே கடந்த 10 மாதங்களாகப் பிணையில் இருக்கும் போது, ஒரு வார கால அவகாசம் கூடக் கொடுக்காமல் எதற்காக, இவ்வளவு அவசரம் காட்டியது குஜராத் உயர்நீதிமன்றம் என்று கேள்வி எழுப்பி, குஜராத் உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றத் தின் அரசியலமைப்பு அமர்வு டீஸ்டா குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவறாகப் பயன்படுத்தி மோடி அரசின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் அகமது பட்டேலிடம் பொய்யான ஆவணங்கள் தயாரிக்க ரூ.30 லட்சம் வாங்கினார் என்றெல்லாம் பிணை மனு மீதான விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். ஒருவர் மீது காவல்துறை போடும் வழக்கு உண்மையா? பொய்யா? என்பது அவ்வழக்கின் விசாரணைக்குப் பின்னர்தான் தெரியும். அதுவரை எவராக இருந்தாலும் பிணை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஆங்கிலத்தில் Bail, not Jail என்று சொல்வார்கள். அப்படியிருக்க, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இடைக்காலப் பிணைக் காலம் முடிந்துவிட்டதால் நிரந்தரப் பிணை கோரிய டீஸ்டாவுக்கு பிணையை மறுத்தது மட்டுமின்றி இயற்கை நீதிக்குப் புறம்பாக தன்னுடைய 100 பக்க உத்தரவின் (பிணைக்கு 100 பக்க உத்தரவு!) மூலம் உடனடியாக சரண்டர் அடையச் சொன்னார் நீதிபதி என்றால், யாருடைய உத்தரவின் பேரில் நீதிமன்ற உத்தரவுகள் எழுதப்படுகின்றன. என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது. பாசிசத்தின் பிணந்தின்னும் சாத்திரங்கள்... எல்லாராலும் உச்ச நீதிமன்றம் போக முடியுமா? டீஸ்டாவும் கூட எத்தனை முறைதான் உச்ச நீதிமன்றத்திற்குப் போக முடியும்?