ஒரு 12 வயதுடைய சிறுமியை சிலர் நடுரோட்டில் அடித்து உதைத்து சித்தரவதை செய்து கடைசியில் அவர் கண்ணைக் கட்டி, பின்னால் இருந்து சுட்டுக் கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் காணப்படுகிறது. அது காண்போரை குலைநடுங்கச் செய்கிறது. அந்த வீடியோ மணிப்பூரில் எடுக்கப்பட்ட தாகவும் அந்த சிறுமி மணிப்பூரில் நடக்கும் அராஜகச் செயல்களை, வன்முறையை பிரதமர் மோடி அவர்கள் அமைதி காக்காமல் உடனடியாகத் தலையிட்டு மணிப்பூரில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் அற வழியில் கைப்பட எழுதப்பட்ட பதாகையைப் பிடித்துக் கொண்டி ருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக, அவர் சங்கிகளால் அவ்வாறு அடித்துக் கொடூரமாகக் கொல்லப்படுகிறார் என்று அந்த வீடியோ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையானால் இந்தியா மிகப் பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது. அந்த வீடியோ விற்குள் காட்டப்படும் உள் படத்தில் சிறுமி பிடித்துக் கொண்டிருக்கும் தாளில், அன்பான திரு.மோடி அவர்களே, மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது, இதுவரை 100ற்கும் மேற்பட்ட வர்கள் இறந்து விட்டனர், 10,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து தரைமட்டம் ஆக்கப் பட்டு விட்டன. 75,000த்திற்கும் மேற்பட்டவர்கள் வீடற்றவர் களாகிவிட்டனர். 40 நாட்களுக்கும் மேலாக இன்டர்நெட் இணைப்பு இல்லை, நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமியைக் கொல்வது அவர் நாட்டின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார் என்பதற்காகக் கூட இல்லாமல் இருக்கலாம். அல்லது மணிப்பூரில் அல்லாமல் வேறு எங்காவது கூட இருக்கலாம். வேறு எதற்காகவும் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஒரு சிறுமியை அடித்து சித்தரவதை செய்து இப்படிக் கொல்வது கொடூரமானது, நாடும் நாமும் இந்த உலகமும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்கா விற்கு சுற்றுப் பயணம் சென்று வந்தார். 2002ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்கள் இன அழிப்பிற் குள்ளாக்கப்பட்டனர். கர்ப்பிணியான பில்கிஸ் பானு சித்தரவதை செய்யப்பட்டு பாலியல் வன்புணர்வுக்குள் ளாக்கப்பட்டார். அவருடைய அவர் கண் முன்னேயே அவரது மூன்று வயதுக் குழந்தையை பாறையின் மீது மோதி அடித்துக் கொன்றார்கள். அவரின் உறவினர்கள் அடித்துக் கொல்லப் பட்டார்கள்: அந்த இன அழிப்பின் போது, அப்போது பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வேன் என்று வருத்தப்பட்டார். மோடி அமெரிக்காவிற்குள் வர தடைகூட போட்டார்கள்.

இப்போது மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வீடிலிழந்து வீதியில் திக்கற்றுத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். குஜராத்தில் இஸ்லாமி யர்கள் கொல்லப்பட்டது போலவே மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக் காவிற்கு செல்லும் மோடி அவர்களுக்கு இந்தியாவிற்குள் உள்ள மணிப்பூருச் செல்ல நேரம் இல்லை. மனம் இல்லை. மணிப்பூரில் நடப்பவற்றை உலகமே பார்த்துக் கொண்டி ய ருக்கிறது. பல நாடுகளும் மணிப்பூரின் நிலைக் காக இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மோடியின் பெயர் உலக அரங்கில் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் தன்னுடைய அவப்புகழைத் தடுத்து நிறுத்தவும், 2024ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டும் மோடி தன்னுடைய ஆட்சி காலத்தில் ஆறாவது முறையாக அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்காவிற்குள் வர வேண்டாம் என்று அன்று சொல்லப்பட்ட மோடி, இன்று சிவப்புக் கம்பளம் விரித்து அமெரிக்க அதிபர் பைடனால் வரவேற்கப்படுகிறார். இதை பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பாஜக-சங்கிகளும் மோடியின் ஊடகங்களும். அமெரிக்காவின் பைடன் அரசாங்கம் ஒரு பக்கம் மோடிக்கு வரவேற்பு கொடுத்து கொண்டிருந்த அதேவேளை அதற்கு நிகராக அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள், இந்தியர்கள், இந்திய வம்சாவழியினர், மோடிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மோடியின் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள், ஊடகச் சுதந்திரம் கிடையவே கிடையாது என்று சொல்லி பலர் மோடியின் கூட்டத்தைப் புறக்கணித் தார்கள். அமெரிக்காவின் தெருக்களில் மோடிக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புக் கூட்டங்கள் நடந்தன. அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் 75 பேர் மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிராக தங்கள் கவலையைத் தெரிவித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கு கடிதம் எழுதினார்கள். மோடிக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்பட்ட அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, சிஎன்என் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இந்தியாவில், சிறுபான்மை மக்கள், இஸ்லாமி யர்கள் பாதுகாப்பு பற்றி, பைடன் மோடியிடம் பேச வேண்டும் என்று கூறினார். மேலும், 'பிரதமர் மோடியைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், நீங்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லையெனில், இந்தியா குறிப்பிட்ட கட்டத்தில் பிரிந்து போவதற்கான சூழல் உள்ளது, அது இந்தியாவின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக மாறும் என்று கூறியிருப்பேன் என்றும் குறிப்பிட்டார். பாஜக-சங் பரிவார் கும்பல்களுக்கு கோபம் வந்து பாரக் ஒபாமாவை 'ஹூசைன் ஒபாமா' என்றும் முஸ்லிம் என்றும் இந்தியாவிற்கு எதிரானவர் என்றும் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

மோடி அரசு பற்றிய ஒபாமாவின் இந்த விமர்சனத்திற்கு, மோடியாலும் அவரது கூட்டாளி களாலும் சரியான பதிலைச் சொல்ல முடிய வில்லை. நிர்மலா சீதாராமன், ஒபாமாவும் சிரியா, ஏமன் என முஸ்லீம் நாடுகள் மீது போர் தொடுத்தவர்தானே என்று கூறி, தங்கள் அரசு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்துகிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அமைச்சர் ராஜ்நாத் சிங் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒபாமாவைக் குறை கூறினார். இதில் கொடுமை என்னவென்றால், ஒபாமா காலத்தில் இருந்து ஜோ பைடன் காலம் வரை, இஸ்லாமிய நாடுக ளுக்கு எதிராகப் போர் நடத்தி வரும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையைத்தான் மோடி அரசு தொடர்ந்து ஆதரித்துக் கொண்டு வருகிறது என்பதைக்கூட அமைச்சர்கள் இருவரும் அடியோடு மறந்து விட்டார்கள்.

தன்னுடைய ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், இதுவரை இந்தியாவில் ஒரு முறை கூட பத்திரிகையாளர்களைச் சந்திக்காத மோடிக்கு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் சேர்ந்து பத்திரிகையாளர் களைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் - ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுவது பற்றி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேள்வி எழுப்பினார். - இந்தியாவில் இஸ்லாமியர்கள், சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க உங்கள் அரசு எடுத்துவரும் நடவடிக்கை என்ன என்று கேட்டார். அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்  முன் பலமுறை தண்ணீர் குடித்த மோடி அவர்கள், எமது நாடி நரம்புகளில் எப்போதும் ஜனநாயகம் ஓடிக் கொண்டிருக்கிறது, எங்கள் நாட்டில் எந்தவித பாகுபாட்டிற்கும் துளிகூட இடமில்லை என்று பதிலளித்து முழுப் பூசனிக்காயை சோத்தில் மறைக்க முயற்சித்தார். 

உடனே ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு கோவம் வந்து வால்ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக், மோடியிடம் எப்படி இவ்வாறு கேள்வி கேட்கலாம் அவர் ஒரு பாகிஸ்தான் கைக்கூலி என்று வழக்கம்போல் ஆபாசமாக பிரச்சாரம் செய்து விஷமத்தை கக்கினார்கள். சங்கிகளின் இந்த அராஜகச் செயல் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கே பொறுக்கவில்லை. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஆர்எஸ்எஸ் சங்கிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் நாளேடு, மோடியின் வருகைக்குக் கண்டனம் தெரிவித்து தலையங் கமே எழுதியிருந்தது. 'மோடி அரசும் வலதுசாரி பாஜகவும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை, சுதந்திரத்தை, ஜனநாயகத்தை அரித்துப் போகச் செய்து கொண்டிருக்கின்றன. மோடியும் அவரது கூட்டாளிகளும் மதச் சிறுபான்மை மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தங்களின் அரசியல் எதிரிகளைத் தண்டிக்கவும் விமர்சனக் குரல்களை நசுக்கவும் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்களின் எதிர்ப்புக் குரல்களைத் தடுக்க கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தினால் ஜனநாயகம் என்பது புதைகுழிக்குள் தள்ளப்படும்' என எச்சரித்துள்ளது.

இக்கடும் எதிர்ப்புகளுக்கிடையே மோடி, அமெரிக்காவிற்குச் சென்றார் என்றால், அதற்குப் பின்னே, மோடியின் தேர்தல் நலனும் அமெரிக்கா வின் ஆக்கிரமிப்பு நலனும் அடங்கியிருக்கின்றன. ஜோ பைடனும் மோடியும் சேர்ந்து 58 பக்க கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அது பிரபஞ்சத் தின் எந்தப் பிரச்சனையையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் அமெரிக் காவின் கை ஓங்குவதற்கும் இரண்டு நாடுகளுக் கிடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆழப் படுத்தி அமெரிக்காவின் ராணுவத் தளவாட வியாபாரத்தைப் பெருக்குவதும் அதன் மூலம் அதானி-அம்பானிகளை வளமாக்குவதும்தான் மோடி பயணத்தின் பிரதான நோக்கமாகும். 

அமெரிக்காவிடமிருந்து 31 வேவு பார்க்கும் டிரோன்களை 3.1 பில்லியன் டாலர் கொடுத்து அதிக விலைக்கு வாங்குகிறது மோடி அரசு. ரபேல் ஊழல்போல் அடுத்து டிரோன் ஊழல். உற்பத்தித் துறையில் இந்துஸ்தான் ஏரோனாட் டிக்கல் நிறுவனமும் அமெரிக்க ஜெனரல் எலக்ரிக்கல் நிறுவனமும் எப்414 என்ஜின்கள் உற்பத்தி செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. அதேபோல் குஜராத்தில், மின் கடத்தி சாதனங்கள் தயாரிப்பு மற்றும் பரிசோதனை நிறுவனம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவற்றுக்கான பெரும்பான்மை முதலீடு இந்தியாவால் செய்யப்பட உள்ளது. அமெரிக்க தொழில் நுட்பத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளப் போகிறதாம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பானுடன் இந்தியாவும் ஏற்கனவே, குவாட் ராணுவக் கூட்டணியில் சேர்ந்துவிட்டது. அமெரிக்கா, ஆசியாவில் தனக்குப் போட்டியாக எல்லா விதத்திலும் முன்னேறியுள்ள சீனாவைச் சுற்றி வளைத்துக் கட்டுபடுத்திட இஸ்ரேல்-அமெரிக்க கூட்டணியில் இந்தியாவையும் அரபு எமிரேட் யும் சேர்த்துக் கொண்டுள்ளது. ஐ2யு2 (இந்தியா, இஸ்ரேல், யுஎஸ்ஏ, யுஏஇ-India, Israel, USA, UAE). இந்தியாவில் அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சி, கடற்படை பயிற்சி போன் றவை நடத்தப்பட்டு வருகின்றன. மோடி அரசு சீனாவை எதிர்க்க அமெரிக்காவுடன் கூட்டு சேர்கிறது. தன்னுடைய 'அகண்ட பாரத ஆர்எஸ்எஸ் கனவுக்காக, பக்கத்து நாடுகளுடன் பகையை வளர்க்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நேபாளையும் உள்ளடக்கிய அகண்ட பாரத வரைபடத்தை வரைந்து வைத்துள்ளது.

அமெரிக்காவை மய்யப்படுத்திய இந்திய வெளியுறவுக் கொள்கை, தொழில்நுட்பம், ராணுவப் பயிற்சி எல்லாம் இந்தியாவுக்குச் சாதகமா? அமெரிக்காவுக்குச் சாதகமா? என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் நலனைக் காட்டிலும் கார்ப்பரேட்டுகள் நலனே பைடனுக்கும் மோடிக்கும் முதன்மையானது. குஜராத்தில் இஸ்லாமியர்கள் இனவழிப்புக்குள்ள ளாக்கப்பட்டபோது, மோடிக்கு தடை விதித்த, அமெரிக்கா இப்போது மணிப்பூரில் கிறிஸ்த வர்கள் இனவழிப்புக்குள்ளாகும் போது, மோடிக்கு இதுவரை இல்லாத வரவேற்பு கொடுக்கிறது என்றால், இருவரின் நோக்கமும் மக்கள் நலன் அல்ல என்பதுதானே!