சுதந்திரத்தின் 76 வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடும் போது, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து ஆற்றிய தனது பத்தாவது சுதந்திர தின உரையை தேர்தலுக்கான மற்றுமொரு கடும் முயற்சிக்கான உரையாக மாற்றினார். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிரான அவரது சோர்வுமிகுந்த வாய்ச்சவடால், அதிகரித்து வரும் மக்களின் கோபத்தையும், அவரது பாசிச ஆட்சிக்கு எதிராக எழுந்து வரும் அரசியல் ஒற்றுமையின் அறிகுறிகளையும் பற்றி அவருக்கு வளர்ந்து வரும் பயத்தையே வெளிப்படுத்தியது. அவர் ஏற்கனவே அடிக்கல் நாட்டிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கு அடுத்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வருவேன் என்று தற்பெருமையாகக் கூறுவது கூட, ஒவ்வொரு நாளும் அவரது வெற்றி அவரது கண்ணெதிரே நழுவிக் கொண்டிருக்கிறது என்ற அச்சத்தையே வெளிக்காட்டியது. 'இந்திய மக்களாகிய நமக்கு', இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசமைப்புச் சட்ட அடித்தளத்தின் மீதும், இந்தியாவின் பன்முக சமூகக் கட்டமைப்பின் கூட்டு கலாச்சாரத்தின் மீதும் வெட்கக்கேடான வகையில் அதிகரிக்கப் போகும் தாக்குதல்களை வரும் நாட்களில் காண வேண்டியிருக்கும் என்றே இதற்கு அர்த்தமாகும்.

இந்தத் தீவிரமாகும் போரின் அறிகுறிகள் இதைவிட வெளிப்படையாக இருக்கவே முடியாது. நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த மழைக்கால கூட்டத் தொடரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான மோடி ஆட்சியின் முழுமையான அவமதிப்பையும், இந்தியாவை சட்டப்பூர்வமாக்கப்பட்ட சர்வாதிகாரத்தில் சிறைவைக்க வளர்ந்து வரும் உந்துதலையும் கண்டது. பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'மோடிமோடி' என்ற தங்கள் உரத்த முழக்கங்களுடன் அவரைப் பாராட்டுகின்றனர்; அதேவேளையில் பிரதமரோ நாடாளுமன்றத்தை அவரது அரசவையாக (தர்பாராக) நடத்தும் ஒரு பேரரசரைப் போலவே நடந்து கொள்கிறார். நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே, அதன் அருகாமையிலேயே இருந்து கொண்டு பிரதமமந்திரி நாடாளுமன்றத்தை தவிர்த்த விதமே மிகத் தெளிவான அறிகுறியாகும். பிரதமரை அவைக்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்க வேண்டியிருந்தது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியாக பார்க்கப்பட வேண்டும்.

இந்த அறிகுறிகளையெல்லாம் விட, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் சாராம்சம் குறித்து நாம் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும். ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போன்ற இரண்டு பெரிய பிராந்திய ஆளும் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்ததால் மட்டுமே டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது; கூட்டாட்சி கட்டமைப் பிற்கு இது ஒரு மோசமான பின்னடைவாகும். இந்த மசோதாவை டெல்லிக்கான குறிப்பான சிறப்பு மசோதாவாகக் கருதி ஆதரித்த பிராந்தியக் கட்சிகள், ஆகஸ்ட் 2019 இல் ஜம்முகாஷ்மீரின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டதை 'தனித்த நிகழ்வாக' எடுத்துக் கொண்டு அதனை ஆதரித்த ஆம் ஆத்மி கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தாக்குதல் தன்மீது நடத்தப்படுவதை எதிர்கொள்ள வேண்டியிருந்த அதே தவறைச் செய்கின்றன.

இந்த கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட டெல்லி மசோதா, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் ஒரு தீர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த ஒரே நடவடிக்கை மட்டுமல்ல. தலைமைத் தேர்தல் ஆணையரையும் தேர்தல் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களையும் நியமிப்பது தொடர்பாக இந்த ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஒட்டுமொத்த தேர்தல் செயல்பாட்டின் நம்பகத் தன்மைக்கான ஒரு முன்நிபந்தனையாக, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சியையும் நடுநிலைமை யையும் உறுதிசெய்யும் வகையில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர், இந்திய தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் கட்டாய மாக்கியது. ஆனால் இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரை நியமிக்கும் மசோதாவை மோடி அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு முக்கியமான அரசமைப்புச் சட்ட நிறுவனத்திற்கான உறுப்பினர்களை நியமிப்பதில் நிர்வாகத் துறை முழுமையான அதிகாரம் கொண்டிருக்கும்.

தற்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டம் (1860), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (1974), இந்திய சாட்சியச் சட்டம் (1872) ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதீய நியாய் சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய மசோதா என்ற பெயரில் அரசாங்கம் அழைக்க விரும்புகிற மூன்று மசோதாக்களை மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் உள்துறை அமைச்சர் தாக்கல் செய்தபோது, நாட்டின் சட்டக் கட்டமைப்பின் மீது மிக மோசமான தாக்குதல் நிகழ்ந்தது. அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், இந்திய தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், பார் கவுன்சில்கள், பல்கலைக்கழகங்கள், சட்டப் பள்ளிகள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இது சம்பந்தப்பட்ட அனைவருடனும் சட்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்வதைக் கவனிக்கும் நிபுணர் குழு அதன் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு முன், பரந்த அளவிலான ஆலோசனைகளை மேற்கொள்ளும் எனவும், எனவே இந்த செயல்முறை அதிக காலம் எடுக்கும் எனவும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆயினும் கூட, வாக்குறுதியளிக்கப்பட்ட விரிவான ஆலோசனைகள் பற்றிய எவ்வித அரசாங்கப் பதிவுகளும் இல்லாமல், முழுவதுமாக தவறாக வழிநடத்தும் கூற்றுகளுடன் பரந்த, மோசமான சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் இப்போது மூன்று மசோதாக்களையும் முன்வைத்துள்ளது!

இந்தப் புதிய சட்டங்கள் காலனிய  மரபுக்கும் மனநிலைக்கும் முற்றுப்புள்ளிவைக்கு மென்றும், தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை அளிக்குமென்றும் நாம் நம்ப வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஆனால் மசோதாக்களின் விதிகளை உன்னிப் பாகப் பார்த்தால், அந்தக் கூற்றை மறுத்து, குடிமக்களின் தனிப்பட்ட, கூட்டு உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அரசுக்குப் பெரும் அதிகாரங்களை வழங்கவும், அரசாங்கத் தின் கொள்கைகளை கேள்வி கேட்கவும் எதிர்க்கவும், மாற்றத்துக்காக, நீதிக்காக, போராடுவதற்குமான மக்களின் உரிமை என்னும் ஜனநாயகத்தின் உயிர்நாடியை வலுவிழக்கச் செய்வதுமே அதன் திட்டமாகும் என்பது தெளிவாகிறது.

இரண்டு உதாரணங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒன்று, காவல்துறையினர் ஒருவரை தற்போது 15 நாட்கள் வரை சிறைக் காவலில் வைத்துக் கொள்ளும் அதிகாரத்திற்கு பதிலாக 60 முதல் 90 நாட்கள் வரை அதனை நீட்டித்துக்கொள்ளலாம். மற்றொன்று, 'தேசத் துரோகம்' என்ற வார்த்தை கைவிடப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்து விதமான கருத்து வேறுபாடுகளையும் 'பயங்கர வாத நடவடிக்கை' என்று குற்ற மயமாக்கும் வாய்ப்பு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

நிர்வாகத் துறையின் கைகளில் அனைத்து அதிகாரங்களையும் அதிகளவில் குவிப்பதன் மூலம் கூட்டாட்சி கட்டமைப்பையும், அரச மைப்புச் சட்ட நிறுவனங்களின் தன்னாட்சி யையும், நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையையும் அரசாங்கம் தினசரி கீழ்மைப்படுத்துகிறது. இப்போது முன்மொழியப் பட்டுள்ள மசோதாக்கள் மூலம், சுதந்திரம் மற்றும் உரிமைகளின் அடிப்படை உணர்வே குடிமக்களிடம் இருந்து பறிக்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சங்கிப் படைப் பிரிவின் நேசத்துக்குரிய இந்து ராஷ்டிரா முஸ்லிம்களையும் பிற சிறுபான்மையினரையும் இரண்டாம் தரக் குடிமக்களாக கீழ்நிலைப் படுத்தப் போவது மட்டுமின்றி சுதந்திர குடிமக்கள் என்ற கருத்திற்கே அது சாவு மணியை அடிக்கப்போகிறது. மேலும் காலனிய பாரம்பரியத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்ற பெயரில் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற குடியுரிமையை காலனிய கால அடிமை நிலையாக மாற்றப்போகிறது! அதனால்தான் 'அரசியலில் பக்தி" சர்வாதி காரத்திற்கு இட்டுச் செல்லும் உறுதியான பாதை என்று பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிட்டார். மேலும் இந்து ராஜ்ஜியம் ஏற்பட்டால் அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக மாறும் என்று கூறி அதற்கு எதிராக எச்சரித்தார்.

ஊழலுக்கு எதிராகவும் தனது ஆட்சியை ஊழல் இல்லாத ஆட்சி என்றும் நரேந்திர மோடி வாய்கிழியப் பேசிய போதும், அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள ஊழல்களை அம்பலப்படுத்தும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் இப்போது நம்மிடம் உள்ளன. துவாரகா விரைவுச் சாலையானது, ஒரு கிலோமீட்டருக்கு 18 கோடி ரூபாய் என்ற ஒப்புதல் வழங்கப்பட்ட மதிப்பீட்டிற்கு எதிராக, ஒரு கிலோமீட்டருக்கு 250 கோடி ரூபாய் செலவழித்து, பதினான்கு மடங்கு செலவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், 9999999999 என்ற ஒரே கைப்பேசி எண்ணில் பதிவு செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான 7,50,000 பயனாளிகள் வடிவிலும், இறந்த நோயாளிகள் மற்றும் ல்லாத மருத்துவமனைகளின் பெயரில் எடுக்கப்பட்ட பெரும் தொகை என்ற வகையிலும் ஒரு மோசடி திட்டமாக அம்பலப் படுத்தப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியத் துக்காக ஒதுக்கப்பட்ட நிதி, மோடி அரசின் விளம்பரப் பரப்புரைகளுக்காக திருப்பி விடப்பட்டதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்வதேஷ் தர்ஷன் யாத்திரைத் திட்டம் என்ற பெயரில் ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவதன் மூலம் அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் மீண்டும் முறைகேடுகள் வெளிவந்துள்ளன.

மோடி அரசாங்கத்தின் பத்தாவது ஆண்டில் நாம் இருக்கிறோம். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள், அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகள், கோடிக்கணக்கான இந்தியர்களின் விருப்பங்கள் மற்றும் உரிமைகளைக் கேலிக்கூத்தாக்கிய, இந்தியாவை அழிவுப் பாதையிலும் பின்னோக்கிய பாதையிலும் இழுத்துச் சென்ற, இந்த அரசாட்சியின் ஒவ்வொரு துறையிலும் இந்தப் பத்து ஆண்டுகள் ஏற்கனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மணிப்பூர் முதல் ஹரியானா வரையிலும் அரசு ஆதரவுடன் நடத்தப்படும் இன அழிப்பு மற்றும் குறிவைத்து இடித்துத் தள்ளும் இயக்கங்களுக்கு சட்டத்தின் ஆட்சி வழிவிட்டுச்செல்கிறது. வாழ்வின் அனைத்து முனைகளிலும் மோடி ஆட்சியால் கட்டவிழ்த்துவிடப்படும் பேரழிவு களின் சங்கிலித் தொடரை தடுத்து நிறுத்தவும், பாசிச அழிவிலிருந்து இந்தியாவை விடு விக்கவும், விடுதலைக்கான மாபெரும் காலனிய எதிர்ப்புப் போரிலிருந்து இந்தியா வலிமை யையும் உத்வேகத்தையும் பெற வேண்டிய நேரம் இது.