"நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மோடிக்கும் யோகிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மூன்று முஸ்லீம்களையும் ஒரு காவல் அதிகாரியையும் ஓடும் ரயிலுக்குள் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இப்படிக் கூறியிருக்கிறார் ஒரு ரயில்வே போலீஸ்காரர். தெளிவாக, மோடி-யோகிக்கு ஆதரவாகப் பேசி நான்கு பேரைக் கொலை செய்துள்ள அந்த போலீஸ்காரர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று மடைமாற்றப் பார்க்கிறது அரசும் ரயில்வே போலீசும். அந்தக் குற்றவாளி சேத்தன் சிங், 'தான் கொன்றவர்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள், ஊடகங்களும் இதையேதான் சொல்லும்' என்றும் கூறுகிறார். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள். மணிப்பூர் மாநிலம் கடந்த மூன்று மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் வீடுகள், பழங்குடியினர் வீடுகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப் படுகின்றனர். மணிப்பூரின் பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. அங்குள்ள காவல் துறையினர் பழங்குடியினரை, பெண்களை குற்றவாளிகள் கையில் பிடித்துக் கொடுக்கிறார்கள். மணிப்பூரைத் தொடர்ந்து இப்போது ஹரியானாவில் தன்னுடைய வெறுப்பு நெருப்பை பற்ற வைத்துள்ளனர் ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கிகள். மணிப்பூர் பற்றி பேசுவதற்கு பயந்து, தான் செங்கோல் ஏந்தி திறந்து வைத்த நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் இல்லாத நேரம் பார்த்து, பழங்குடியினர் உரிமைகளைப் பறிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களை சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருகிறது மோடி அரசு. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்களைப் பார்த்து, சத்தம் போடாதீர்கள், உங்கள் வீட்டிற்கு அமலாக்கத் துறை வரும் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார் அமைச்சர் மீனாட்சி லேகி. எல்லா துறைகளும், காவல்துறையும் முழுக்க முழுக்க காவிமயமாகிவிட்டது என்பதையே ரயில் துப்பாக்கிச் சூடு நிகழ்வும், மணிப்பூர், ஹரியானா நிகழ்வுகளும் காட்டுகின்றன. கலவரக்காரர்களை, பசுக் குண்டர்களை கைது செய்து அமைதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், "நுஹ் மாவட்டத்தில் பசுப் பாதுகாப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இஸ்லாமிய இளைஞர்கள் பசுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட முன்வர வேண்டும். அப்போது சமூக நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பாக அமையும். அரசால் அனைவரையும் பாதுகாக்க முடியாது. போலீஸாலும் ராணுவத்தாலும் கூட முழு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறுகிறார். இதிலிருந்தே இது திட்டமிட்டு பாஜக அரசால் பற்ற வைக்கப்பட்ட நெருப்பு என்பது தெளிவாகத் தெரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்கிற பயத்தாலும் எதையாவது செய்து வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வெறியோடும் சங்கிகள் கூட்டத்தால் சதி வலை பின்னப்பட்டு கலவரங்கள், இனப்படுகொலைகள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தச் சதி வலைக்குள் இந்திய மக்கள் விழுந்துவிடாமல், இந்தியாவையும் மக்களையும் காப்பாற்ற, மோடி - அமித்ஷா - யோகி ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான பிரச்சாரத்தில் இப்போதே இறங்கிட வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவின் வெறுப்பு நெருப்பில் வெந்து போய்விடாமல் நாம் தடுத்திட வேண்டும்.