இந்து மேலாதிக்கவாத முகாமின் நீண்டகாலத் திட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான உரத்த கூச்சல் இப்போது வெளிப்படையாக கேட்கிறது. இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான வாதம் மிகவும் துணிச்சலாக பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய் ஒரு செய்தித்தாளில் எழுதிய கட்டுரையின் வடிவத்தில் வெளிவந்துள்ளது. விவேக் தேப்ராய் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக இருக்கும் வேளையில், அந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிப்புகளாகவும் நடவடிக்கைகளாகவும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தக் கட்டுரையை தொடர்பற்ற ஒரு தனிநபரின் கருத்துக்களாகக் கருதுவது முட்டாள்தனமாகவே இருக்கும். மாறாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கிய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவையில் சிலநாள் முன்னர் வெளியிட்ட அறிக்கையின் தொடர்ச்சியாகவே, விவேக் தேப்ராய் எழுதிய இந்தக் கட்டுரை பார்க்கப்பட வேண்டும்.

வாஜ்பாய் கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் கூட, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறுபரிசீலிக்கும் தேசிய ஆணையத்தை அமைத்ததன் மூலம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு அல்லது அதன் அடிப்படை அம்சங்களில் தலையிடாமல், மாற்றங்களை பரிந்துரைக்க வேண்டும் என்றே அதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 2004 தேர்தலில் வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்வியால் இந்த செயல்திட்டத்தை தொடர முடியவில்லை. மேலும் இந்த ஆணையின் அறிக்கையை கண்டுகொள்பவர் எவரும் இல்லை. ஆனால் மோடி கால சட்டத் திருத்தங்களும் மசோதாக்களும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையும் அதன் உணர்வையும் கீழ்நிலைப்படுத்தத் தொடங்கியுள்ளன. குடியுரிமையின் மதச்சார்பற்ற அடித்தளத்தைக் குடியுரிமை திருத்த சட்டம் சிதைத்துவிட்டது; பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு, சமூக அநீதிக்கும் சமத்துவமின்மைக்கும் எதிரான உறுதியான நடவடிக்கை என்பதாக இருந்த இடஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கைக்கு சவால் விட்டுள்ளது; ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டதன் வழியாக, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பு பெரும் பின்னடைவைக் கண்டுள்ளது; மேலும் அரசு நிறுவனங்களின் தன்னாட்சியும், குடிமக்களின் உரிமைகளும் சாத்தியமான அனைத்துவழிகளிலும் அரிக்கப்படுகின்றன.

இந்தப் போக்குகளை அவற்றின் தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு சென்று, தொடர் திருத்தங்களுக்குப் பதிலாக முற்றிலும் புதிய அரசமைப்புச் சட்டத்திற்கு தேப்ராயின் கட்டுரை அழைப்பு விடுக்கிறது. தெளிவாகவே, அரச மைப்புச் சட்ட அடிப்படை கட்டமைப்பின் கோட்பாடுகள், சட்டத் திருத்தங்களுக்கான வரம்புகளை நிர்ணயிக்கிறது; மேலும் கூட்டாட்சி சமநிலைக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் கட்டுப்பட அரசாங்கங்களுக்கு நெருக்கடி தருகிறது; மேலும் அரசமைப்புச் சட்ட முன்னுரையில் சொல்லப் பட்டுள்ள குடியரசின் தன்மையும் அதன் அடிப்படை திசைவழியுமே, அதிகாரம் மற்றும் செல்வத்தின் தங்கு தடையற்ற குவிப்புக்கான மோடி அரசாங்கத்தின் உந்துதலுக்கு தொடர்ந்து சில தடைகளை ஏற்படுத்துகிறது. ஆக, இந்தத் தடையை கடக்க, முற்றிலும் புதிய அரசமைப்புச் சட்டம் என்பதன் வடிவில் ஒரு முழுமையான தீர்வு என்னும் கருத்தினை தேப்ராய் முன்வைத் துள்ளார்.

இந்துராஷ்டிராவின் பழைமைவாத இந்துத்துவ இலக்குகளை நிறைவேற்றவும் மனுஸ்மிருதியை நிறுவனமயமாக்கவும் இது தேவைப்படுகிறது என புதிய அரசமைப்புச் சட்டத்திற்கு தேப்ராய் பரிந்து பேசவில்லை என்பது இங்கே சுவாரஸ்யமானது. அந்தக் குறிப்புகள் அவரது கட்டுரையில் வெளிப்படையாக இல்லை. இப்போதைய அரசமைப்புச் சட்டம் காலனிய மரபுக்கு சொந்தமானதாக இருப்பதால் அது தேவையற்றது; எனவே, ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் காலனிமயமகற்றல் திட்டத்திற்கானது என தேப்ராய் சொல்கிறார். குற்றவியல் நீதிக்கான சட்டங்களை மாற்ற முற்படும் போது அமித்ஷாவும் கூட இதே வாதத்தை முன்வைத் துள்ளார். தண்டனை குறித்த காலனிய கால கருத்திற்கு மாற்றாக குடிமக்கள் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கான உரிமை குறித்து கவனம் செலுத்துவது என்ற உரத்த வாதத்துடன் இந்திய தண்டனைச் சட்டம், பாரதீய நியாய சன்ஹிதா என மாற்றப்படுவதற்கான முயற்சி நடந்துள்ளது. ஆனால் இந்த திசைதிருப்பல் பெயர் மாற்றத்திற்குப் பின்னாலுள்ள இந்தப் 'புதிய' சட்டம் காலனிய காலச் சட்டங்களை அடக்கு முறை மிகுந்தவையாகவும், விரிவானவையாகவும் ஆக்குகிறது.

அரசாளுகையின் 'செயல்திறனையும் வேகத்தையும்' அதிகரித்தல் என்பது புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான மற்றொரு அடிப்படைக் கூற்றாக முன்வைக்கப்படுகிறது. 'முடிவெடுப்பதற்கும்' 'விரைவாக செயல்படுத்துவதற்கும்' ஜனநாயகம் ஒரு தடையாக உள்ளது என சர்வாதிகாரம் எப்போதுமே முன்னிறுத்துகிறது. கோவிட் 19 பெருந்தொற்றின்போது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்ட, நாடாளுமன்றத்தையும் மக்களை யும் முடக்குதல், நாட்டின் வளங்கள் மீது கார்ப்பரேட் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான கொள்கை மாற்றங்களை செய்யவும், புதிய சட்டங்களை இயற்றவும் தேவையான அதிரடி நடவடிக் கைகளை அரசாங்கம் கட்ட விழ்த்துவிட்டபோது, நாடாளுமன்ற செயல் முறையின் திட்டமிடப் பட்ட சீர்குலைவை நாம் ஏற்கனவே கண்டோம். இந்த முறைமையை சட்டப்பூர்வமாக்கப்பட்ட அரசமைப்புச் சட்ட சர்வாதிகாரமாக நிறுவன மயப்படுத்த தேப்ராய் விரும்புகிறார்.

அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப் பட்டுள்ள முன்னுரையின் பிரகடனங்களும், அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளும் மட்டுமல்ல, ஒற்றையாட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்த போதும் கூட, அரசமைப்புச் சட்டத்தின்படி ஆணையாக்கப் பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பிலும், நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பகிர்விலும் கூட, மோடி ஆட்சிக்கு மிகுந்த சிக்கல் உள்ளது என தெளிவாகவே தெரிகிறது. அரசமைப்புச் சட்டம் இந்தியாவை, அதாவது பாரதத்தை மாநிலங்களின் ஒன்றியமாக அறிவிக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதிலும், அவர்களின் அதிகார வரம்புக்குள் அத்துமீறல் செய்வதிலும் மோடி அரசாங்கம் மும்முரமாக செயல்படுகிறது. பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசாங்கங்களுக்கு தடைகளை ஏற்படுத்தவும், அவற்றை சீர்குலைக் கவும், கவிழ்க்கவும், ஆளுநர்களையும், பல்வேறு மத்திய நிறுவனங்களையும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது நிர்வாகத்துறையின் மூலம் நீதித்துறையை அதன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எவ்வகை யிலேனும் மட்டம் தட்டுவதையும் தவிர்ப் பதையும் செய்து வருகிறது. தலைமை நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற ஒரு கெடுநோக்கான பரப்புரையும், நிர்வாகத்துறையின் உக்கிரமான பயணத்தைத் தடுக்க, சரிசெய்ய முயற்சிக்கும் உச்ச நீதிமன்றத்தின் ஒவ்வொரு தீர்ப்பையும் இதுபோன்று திட்டவட்டமாக கீழ்நிலைப் படுத்துவதும் இதற்கு முன்பு எப்போதும் செய்யப்பட்டதில்லை.

அதன் தொடக்க காலத்திலிருந்தே முசோலினி மற்றும் ஹிட்லரின் பாசிச மாதிரி களில் இருந்து உத்வேகம் பெறும் ஆர்எஸ்எஸ், இஸ்ரேலின் சியோனிச மாதிரியை அதிகரித்த அளவில் பின்பற்றி வருகிறது. தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்துடன் மோடி அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் போர், இஸ்ரேலில் பொது மக்களின் மாபெரும் எதிர்ப்புகளைத் தூண்டி விட்ட நெதன்யாகு ஆட்சியின் நீதித்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டமே நவீன இந்தியாவின் அடித்தளம் ஆகும். கடந்துபோன ஆயிரம் ஆ ண்டுகால' அடிமைத்தளை'யிலிருந்து, வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகால 'பொற்காலம்' நோக்கி நகருவதைக் குறிக்கிற ஒரு நவீன கால இந்துப் பேரரசராக இன்று மோடி தன்னை காட்டிக் கொள்ள முற்படுகிறார். அவரது பக்தர்களோ அவரை இந்து இதயங்களின் பேரரசர் என்று அழைக்கிறார்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தால் கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியரசு, அதன் அடித்தளங்களின் நெருக்கடியையும் சவாலையும் எதிர்கொள்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவின் 'மறக்கப்பட்ட பாரம்பரியத்தின்' மறுமலர்ச்சி என்று தேப்ராயால் போற்றப்படும், முடியாட்சியின் சின்னமான செங்கோல் நிறுவப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம், சங்கிப் படைப்பிரிவின் பார்வையில், அதன் நேசத்துக்குரிய 'புதிய இந்திய' கட்டிடக்கலையின் வருகையை ஏற்கனவே அறிவித்து விட்டது. சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்ட அடித்தளத்தை சிதைக்கும் இந்த செயல் முறையை, புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான தேப்ராயின் வாதம் முழுமைப்படுத்த முயல்கிறது. எனவே இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கெடுநோக்குடைய இந்தப் பரப்புரை அதன் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான சுதந்திர இந்தியாவை, அச்சம், மதவெறி, அடிமைத்தளையின் புதிய குடியரசாக ஒரு போதும் பரிமாற்றம் செய்யவே முடியாது.