தற்போது 'இந்தியா' என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டத்தில் கலந்து கொள்ள அதன் பிரதிநிதிகள் மும்பையில் கூடியிருந்த சமயத்தில், மோடி அரசாங்கம் செப்டம்பர் 18 முதல் வரை 22 நாடாளுமன்றத்தின் வழக்கத்திற்கு மாறான ஒரு கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. சமீபத்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த உடனேயே, அதையொட்டி இந்த சிறப்புக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்ட விதம், அதுவும் எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமலும் முற்றிலும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டிருப்பதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விதிமுறைகளை வெட்கக்கேடான முறையில் மீறியிருப்பதும், அரசாங்கத்திற்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த அய்ந்து நாள் அமர்வில் தினசரி கேள்வி நேரமோ அல்லது வழக்கமான பூஜ்ஜிய நேரமோ (zero hour) இருக்காது. மேலும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத ஒரு நிகழ்ச்சி நிரலை தனித்துவமாக நடத்துவதற்கு மட்டுமே இந்தக் கூட்டத் தொடர் பயன்படுத்தப்படும். ஒரு ஜனநாயகக் குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை பேரரசரின் அரசவையாக மோடி அரசாங்கம் நாளுக்கு நாள் மாற்றி வருகிறது.

மற்றொரு திடீர் நடவடிக்கையாக, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைப்பதாக மோடி அரசு அறிவித்துள்ளது. அரசமைப்புச் சட்ட ரீதியாக சந்தேகத்திற்குரிய, அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் குறித்துப் பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வையும் கட்டமைப்பையும் அப்பட்டமாக மீறும் வகையில் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை திணிக்க முற்படுவது, மோடி அரசாங்கத்தின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் குழுவில் எதிர்க்கட்சியில் இருந்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என்ற ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே இருந்தார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்புதல் அளிக்க வடிவமைக்கப்பட்ட அதன் சந்தேகத்திற்குரிய உத்தரவையும், மாநிலங்களவையில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரைத் தவிர்த்து விட்டு, மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரை (அவரும் இப்போது பாஜகவுடன் நெருக்கமாக இருப்பவர்) இக்குழுவில் இணைத்திருப்பதன் மூலம் அதன் பொறுக்கியெடுத்த கலவையையும் கருத்தில் கொண்டு அவர் இக்குழுவில் சேர மறுத்துவிட்டார்.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, சிலகாலமாகவே மோடி அரசாங்கத்திற்கு மிகப் பிடித்தமான நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. சட்ட ஆணையம் முதல் நிதி ஆயோக் வரை, பல அமைப்புகள் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆய்வு செய்துள்ளன. மேலும், இது தொடர் அரசமைப்புச் சட்டத் திருத்தங்களும், எதிர்க்கட்சிகள், மாநில அரசாங்கங்களை உள்ளடக்கிய பரந்த அளவில் கருத்தொற்றுமையும் தேவைப்படுகிற சூட்சுமமான, சர்ச்சைக்குரிய முன்வைப்பு எனவும் கண்டறிந்தன. எந்தவொரு கருத்தொற்றுமையையும் உருவாக்காமல் இக்கருத்தைத் திணிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய தற்போதைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவேத் தெரிகிறது. பாஜக தலைவர்கள், அரசு சார்பு உறுப்பினர்கள், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கருத்தின் அறியப்பட்ட ஆதரவாளர்களால் இந்தக் குழு முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளது. அதனால், இந்தக் குழுவின் கருத்து, முடிவு செய்யப்பட்ட ஒன்றாகவே இருக்கப்போகிறது. தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் ஏற்கனவே தேர்தல் நிதியை முற்றிலும் திரைமறைவானதாகவும், கணக்கில் வராதவை யாகவும் ஆக்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தை தேர்வு செய்வது தொடர்பாக முன்மொழியப்பட்ட மசோதா, தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி, நடுநிலைமை அனைத்தையும் பறித்து, அதை நிர்வாகத் துறைக்கு (அரசாங்கத்துக்கு) அடி பணியவேச் செய்யும். இப்போது ஒரே நேரத்தில் தேர்தல்கள் என்பதைத் திணிப்பதன் மூலம் மோடி அரசாங்கம் தேர்தல் நடை முறையை மேலும் கேலிக்கூத்தாக்க விரும்புகிறது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கருத்துக்கு ஆதரவாக சொல்லப்படும் அரசாங்கத்தின் அடிப்படையான வாதம் என்னவென்றால், இது செலவைக் குறைத்து, தேர்தல் நடத்தை விதிகளால் விதிக்கப்படும் நிறுத்தி வைப்புகளைத் தவிர்த்து, 'வளர்ச்சி'யின் வேகத்தை விரைவு படுத்தும் என்பதாகும். இந்த இரண்டு வாதங் களுமே போலியானவை. தேர்தல் செலவுகளில் பெரும்பகுதியை அரசியல் கட்சிகளே ஏற்கின்றன; மேலும், சந்தேகத்திற்குரிய நிதி ஆதாரங்களில் இருந்து தேர்தல் நிதியை வாரி இறைக்கும் பாஜக தான் தேர்தலில் பணபலத்தின் பங்கு அதிகமான தாகிப் போனதற்கு முக்கியக் குற்றவாளியாகும். தேர்தல் நடத்தை விதிகள் (புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அறிவிப்பை இது தடுக்கிறது) தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களை மட்டுமே பாதிக்கிறது. அவை நாடு முழுவதும் வளர்ச்சியை 'நிறுத்தி வைப்பது' இல்லை. பணமதிப்பிழப்பு, நீடித்த முடக்கம் போன்ற தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்ட நீண்ட கால பேரழிவுடன் ஒப்பிடுகையில், தேர்தல் களால் ஏற்படுவதாகக் கூறப்படும் தற்காலிக இடையூறு என்பது ஒன்றுமே இல்லாததாகும்.

1967 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டசபை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப் பட்டு வந்ததாகவும் நம்மிடம் கூறப்பட்டது. விஷயம் என்னவென்றால், அத்தகைய நடை முறைக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான தேவை எதுவும் இல்லாமலேயே, தற்செயலாக ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடந்தன. 1967 க்குப் பிறகு பல்வேறு காரணங்களால் இடைக்காலத் தேர்தல்கள் தேவைப்பட்டதால் இந்த சுழற்சி முறை மாறியது. பல அரசாங்கங்கள் தங்கள் பதவிக்காலம் முடிவதற்குள் அதிகாரத்தை இழந்தன; புதிய மாநிலங்கள் உருவாக்கம், பிராந்திய கட்சிகளின் எழுச்சி, கூட்டணி காலகட்டத்தின் வருகை (இது ஒற்றைக் கட்சி ஆதிக்கம் என்ற முந்தைய நிகழ்முறையை மாற்றியது); பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் மூன்றாம் அடுக்காக உள்ளாட்சி அமைப்பு களுக்குத் தேர்தல்களை நிறுவனமயமாக்கியது; ஆகிய மேற்கூறிய இந்த மூன்று முக்கிய காரணிகளைக் குறிப்பிடலாம். காலத்தை மீண்டும் ஒருமுறை செயற்கையாகப் பின்னுக்குத் தள்ளி அமைத்தாலும் கூட, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கான மக்களின் உரிமையை மறுத்து, மாநிலங்களை குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு அல்லது ஆளுநர்கள் அல்லது துணை நிலை ஆளுனர்களின் ஆட்சிக்கு உட்படுத்துவதன் மூலம் இடைக்காலத் தேர்தல்களுக்கு தடை விதித்தாலன்றி, இந்த சுழற்சி நிகழ்முறையை தொடர்ந்து நீடித்திருக்கச் செய்ய இயலாது. மிகச் சரியாக, இதுவே 2019 ஆகஸ்ட் 5 முதல் ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது திணிக்கப்பட்டது. ஆக, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சூத்திரம் என்பது, அதிகாரத்தை அதீத மையப்படுத்துதலையும், ஜம்மு காஷ்மீர் மாதிரியை இந்தியா முழுமைக் கும் செயல்படுத்துவதையும் நிறுவனமயமாக்கு வதற்கான ஒரு தந்திரமாகவேப்படுகிறது.

மோடி அரசாங்கம் நிரந்தரமாக தேர்தல் செயல்முறையிலேயே உள்ளது என்பதும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பேரணி களில் உரையாற்றுவதுதான் நரேந்திர மோடிக்கு எப்போதும் முதன்மையானது என்பதும் அனைவரும் அறிந்ததே. மணிப்பூருக்குச் செல்ல மோடிக்கு நேரமில்லாத போதும் கூட, தேர்தல் பேரணிகள், சாலைவழி சுற்றுப்பயண நிகழ்ச்சி கள், வாக்குச்சாவடி மட்டத்திலான ஊழியர் மாநாடுகளில் உரையாற்றுவதற்காக, அவர் கர்நாடகாவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திலிருந்து ராஜஸ்தானுக்கும் தாவித்தாவி பயணம் செய்தார். அப்படியிருக்கும் போது, சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த ஏனிந்த திடீர் அதி அவசரம்? மேலும் மேலும் பல மாநிலங்கள் இந்த (பாஜக) ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவி வருவதால், அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற பயத்திற்கும் இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பது தெளிவாகிறது. தனித்தனியாக நடக்கும் தேர்தல்களைக் காட்டிலும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தால் மத்தியில் ஆளும் கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அனுபவப்பூர்வமான சான்றுகள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. சட்ட மன்றத் தேர்தலை விட, மக்களவை தேர்தலில், 'மோடி காரணி' சிறப்பாக செயல்படுகிறது என்பதும் தெளிவாகிறது. எனவே அமைப்பு முறையை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் பலனை அறுவடை செய்யவே இந்த விரக்தி பொங்கும் அவசரம்.

நிச்சயமாக, அதிகாரத்தை அதீதமாக மையப் படுத்துகிற, இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம், பன்மை அரசியல், கூட்டாட்சி கட்டமைப்பு ஆகியவற்றை திட்டமிட்ட ரீதியில் பலவீனப் படுத்துகிற சங்கி-பாஜக வின் திட்டம் தான் இந்த செயல்திட்டத்தை இயக்குகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் அதற்குரிய சூழல் ஒன்று உள்ளது. சங்கி தயாரிப்பான 'தேசிய யதார்த்தம்' என்று அழைக்கப்படுவதன் கூக்குரல் வலுமிக்கதாக மாறினாலன்றி அதன் தாக்கத்திற்கு ஆளாகாமல், பஞ்சாயத்து மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் உடனடி உள்ளூர் நிலைமைகளைத்தான் பிரதிபலிக்கும். மோடி அரசாங்கம் அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், தேர்தல்களின் தனித்துவமான சூழல்களை கொள்ளையடித்து, மக்களின் அரசியல் தேர்வுகளை மட்டுப்படுத்த முயல்கிறது. கூட்டாட்சி இந்தியா மோடி அரசாங்கத்தின் இந்தி, இந்து, இந்துஸ்தான் கருத்தாக்கத்திற்கு மிகவும் துடிப்பான எதிர்ப்பையும் உறுதியான தடுப்பையும் வழங்குகிறது. இந்தி இதயப் பகுதிக்கு அப்பாற்பட்ட மாநிலங்களில் வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் அரசியல் கொந்தளிப்பு களில் கடைசல்களில் (அதே போல் வட இந்தியாவிற்குள்ளும் அதிகரித்து வருகிறது) இருந்து இதனைக் காணலாம். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது அந்தக் கொந்தளிப்புகளை மட்டுப்படுத்தவும், ஜனநாயக இந்தியாவை ஏகாதிபத்திய வடிவமைப்பான ஒரு பாசிச ஆட்சிக்கு உட்படுத்துவதற்குமான ஒரு சூத்திர மாகும். இந்த வடிவமைப்பு, அதிகாரம் பெற்ற குடிமக்களை கைகட்டி நிற்கும் குடிகளாக மாற்றி, பாசிசத்தின் பிடிக்குள் இந்தியாவை அடிமைப்படுத்த, சட்டம், அரசாட்சி, அரசமைப்பின் கட்டமைப்பு ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் தனித்தனியான முயற்சிகள் முழுவதையும் உள்ளடக்கியதாகும். இந்த சதித்திட்டத்தை இந்தியா அனைத்து வழிகளிலும் தோற்கடித்தேயாக வேண்டும்.