இந்தியா கூட்டணியிடமிருந்து மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். மேதா பட்கர் போன்றவர்கள் இக் கூட்டணி முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சி மாதிரிக்காக கடப்பாடு கொண்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்ற சிலரோ பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் போதுமானது என நினைக்கிறார்கள். கூட்டணியில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?

நாம் சில காரணிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. முதலாவதாக ஒரு பெரும் பகுதி மக்கள் இரண்டு பருவ கால இந்த ஆட்சியானது சீரழிவைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை என்று உணரத் துவங்கி உள்ளார்கள். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் அதன் விளைவுகளை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது.

இரண்டாவதாக, நாம் பல கட்சி ஆட்சி முறையை கொண்டி ருந்தோம்.ஆனால், இப்போது இரு துருவ முறை கூட இல்லாமல் போய்விட்டது. மத்தியில் ஒரு கட்சி ஆட்சி முறை என்பது இருக்கிறது. அவர்கள் 2047 வரை ஆட்சி செய்யப் போவதாகவும் பேசி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நிதிஷ்குமார் வெளியேறி ஆர்ஜேடி உடன் கரம் கோர்த்துக் கொண்டார். அதற்கு 10 நாட்கள் முன்னதாக, பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் எந்த ஒரு கட்சியும் போட்டி யிட முடியாது என்றும் மற்ற எல்லா கட்சிகளும் அழித்தொழிக்கப் படும் என்றும் பாட்னாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்திருந்தார்.

எனவே காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதிலிருந்து, எதிர்க்கட்சிகளே இல்லாத பாரதம் என்ற நிலைக்கு பாஜக வந்துள்ளது. எனவே தான் நாங்கள் இதை பாசிசம் என்கிறோம். அதை அகற்ற வேண்டியது அவசரமானது என நினைக்கிறோம். இங்கு பாசிசம் ஜெர்மானிய மாதிரியை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. அங்கு ஒரே ஒரு ஹிட்லர்தான் இருந்தார். இங்கு மோடி போனால் அடுத்து யோகி காத்துக்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து ஆட்களை அனுப்பும் ஒரு அணி வரிசை இங்குள்ளது.  

இந்த இடத்திற்கு நாம் எப்படி வந்து சேர்ந்தோம்?

இது ஒரு நீண்ட இயக்கப் போக்கு. 1992ல் பாபர் மசூதி தகர்க்க நடைபெற்ற ஆயத்தப் பணிகளானது 2002 குஜராத்துக்கு இட்டுச் சென்றது. அதிலிருந்து இப்போது இஸ்லாமியர்களை குறி வைப்பது நடந்து வருகிறது. 1991 புதிய பொருளாதாரக் கொள்கையானது 2003இல் துடிப்புமிக்க குஜராத் மாநாட்டுக்கும் அதிலிருந்து இப்போது அரசு சலுகை சார் முதலாளித்துவமாகவும் வந்து சேர்ந்துள்ளது. ஹிமாச்சலிலும் உத்தரகாண்டிலும் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட நீர் மின் நிலையத் திட்டங்கள் இப்போது அங்கு நடைபெறும் பேரழிவுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி இருந்தன. கூடவே பாஜக, சுற்றுலாத் துறைக்கும் சாலைகளுக்கும் கொடுக்கும் அதி முக்கியத்து வமும் சேர்ந்து கொண்டது. ஏற்கனவே உபா (UAPA)சட்டம் உள்ளது. பாஜக அதன் மீது கட்டி எழுப்ப மட்டுமே செய்கிறது.

2014 அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அதிலிருந்து சூழல் மிகவும் வேகமாக மாற்றமடைந்து இப்போது அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது பற்றி பேசுகிறார்கள். தங்களது நோக்கங்களை மறைக்க இப்போது எந்தக் காரணமும் சொல்ல வேண்டிய தேவை இல்லை என நினைக்கிறார்கள். அம்பேத் காரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை "ஆங்கிலேய அரசியலமைப்புச் சட்டம்' என்று விவரிக்கிறார்கள்.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற பிபேக் தேப் ராய் கட்டுரையில் இந்து ராஷ்ட்ரா பற்றி எவ்வித குறிப்பும் இல்லை என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆட்சியை அரசியல்படுத்த வேண்டும் என்பதும் அரசாங்கத் தின் மூன்று நிறுவனங்களுக்கு இடையில் பிரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதும்தான் அவர்களுடைய நோக்கமாகும்.

பாஜக ஒருவேளை இது எங்களது அதிகாரபூர்வ நிலைப்பாடு இல்லை என்று சொல்லக் கூடும். ஆனால், பிபேக் தேப் ராய் பிரதமரின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருக்கும்போது அவர் சொல்வது முக்கியத்துவம் பெறுகிறது. 

இன்றைய சூழலைப் புரிந்து கொள்ள அம்பேத்கர் என்ன சொன்னார் என்பதை நினைவு கூறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

முதலாவதாக, அவர் இந்தியாவில் தனிநபர் துதி பாடலின் ஆபத்துகளைப் பற்றி பேசினார். அவர், "இந்தியாவில் ஜனநாயகம் என்பது அடிப்படையில் ஜனநாயகத் தன்மையற்ற இந்திய மண்ணின் மீதான மேல் பூச்சு" என்று சொல்லி இருந்தார்.

இரண்டாவதாக "பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிக்கும் போது, தேர்தல் சமத்துவம் என்பதில் பெரிய பொருள் இல்லை" என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆக்ஸ்பாம் அறிக்கை வெளிப்படுத்தி இருப்பதை போல பொருளாதார சமத்துவமின்மை இப்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இறுதியாக அவர் "இந்து ராஜ்ஜியம் என்பது நாட்டுக்கு மிகப்பெரும் பேரழிவாக அமையும்" என்று விவரித்திருந்தார்.

அவர் சுட்டிக்காட்டிய மூன்று சூழ்நிலை களும் இப்போது நிலவுகின்றன. இப்போது நாம் பேரழிவு காலத்தில் இருக்கிறோம்.

பேரழிவை எதிர்கொள்ள, பேரழிவு கால நிர்வாக அணுகுமுறையை நாம் மேற்கொண்டே ஆக வேண்டும் என பொது புத்தி சொல்கிறது. அப்படியானால், நாம் முதலில் செய்ய வேண்டியது மீட்பு நடவடிக்கை. நாம் ஜனநாயகத்தை மீட்க வேண்டும். மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளின் மூலம் எவ்வளவு தூரம் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்பதை என்னால் சொல்ல இயலாது.

மீட்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நிவாரண நடவடிக்கை வரும். பேரழிவால் குறி வைக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினராக அல்லது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களாக (MSME), தலித்துகளாக, ஆதிவாசிகளாக இருக்க லாம். அவர்களுக்கு நிவாரணம் தேவை. மூன்றா வது நடவடிக்கை என்பது மறு கட்டுமானம். பாசிசத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமை யுள்ள மிகப்பெரிய ஜனநாயகத்தை நாம் கட்டி எழுப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலை அங்கீகரிக்கிற வகையில்தான் 'இந்தியா' கூட்டணி என்பது உருவாக்கப் பட்டுள்ளது. இது பரந்த அடித்தளம் கொண்ட கூட்டணி மட்டுமல்ல. முகிழ்ந்து வரக்கூடிய கூட்டணியுமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் சிவசேனாவும் இடதுசாரிகளும் ஆர்ஜேடியும் இகக(மாலெ)யும் ஒரே அணியில் இது இருப்பார்கள் என்பதை யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. ஆனால் இப்போதுள்ள சூழலின் தேவையாக உள்ளது. 

இகக(மாலெ)யின் பாதையானது மீட்பிலிருந்து வலுவான சோசலிச அமைப்பு முறையை நோக்கியதாகும். கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கு கொஞ்சம் சமநிலையைத் திரும்பக் கொண்டு வந்தால் போதும் என்பதாக கூட இருக்கலாம்.

பல வகையான கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதைப் பார்த்து வியக்கும் சில செயல்வீரர்கள், இடதுசாரிகள் கூட்டணியில் சேருவதற்கு பதிலாக வெளியில் இருந்து ஆதரவளித்தால் போதாதா? என்கின்றனரே.

2024ல் அரசாங்கம் அமையுமானால் அப்போது அதைப் பற்றிப் பேசலாம்.

பீகாரில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நாம் அரசாங்கத்தில் பங்கேற்கவில்லை. அமைச்சகங்களை நாங்கள் விரும்பவில்லை. மக்கள் இயக்கங்கள் மூலம் அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த விரும்பினோம். மக்கள் விரோத அரசாங்கம் என நாங்கள் உணரும்போது அந்த அரசாங்கத்தை எதிர்ப்போம்.

சமீபத்தில் இரண்டு நீண்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். மாநில அரசின் புதிய ஆளெடுப்பு விதிகளுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாயத்துகள் மூலம் ஆளெடுப்பு நடத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், மாநில அளவிலான தேர்வைப் புதிதாக எழுத வேண்டும் என புதிய விதி கொண்டுவரப்பட்டது. இந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ற அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில் இந்த விதி கொண்டு வரப்பட்டது. கடைசியாக முதலமைச்சர் வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களை சந்தித்து தீர்வு கிடைக்கும் என உறுதி அளித்திருக்கிறார்.

இரண்டாவது மதிப்பூதியம் கூட வழங்கப் படாத பீகாரின் ஆஷா தொழிலாளர்கள் போராட்டம். அவர்களுக்கு 'வெகுமதி' என்றொரு பெயரில் சொற்பத் தொகை வழங்கப்பட்டு வந்தது. அவர்களது 31 நாட்கள் போராட்டம், ரூபாய் 1500 ஊதிய உயர்விலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 'மதிப்பூதியம்' என பெயர் மாற்றம் செய்யப்படுவதிலும் முடிந்திருக்கிறது.

இரண்டு போராட்டங்களிலும் எங்கள் தோழர்கள் முன்னணியில் நின்று வழி நடத்தினார்கள். இதன் மூலம் நாங்கள் அரசாங்கத் துக்கும் மக்கள் இயக்கங்களுக்குமிடையிலான பாலமாக இருந்து உரிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறோம்.

பாஜக அதிகாரத்தில் இல்லாததால் பீகார் நிலைமைகளில் இப்போது மாற்றம் நிகழ்ந்து உள்ளதா?

உண்மையிலேயே அப்படி நிகழவில்லை பீகாரிலும் கூட புல்டோசர்கள் பயன்படுத்தப் படுகின்றன. நிர்வாகமும் காவல்துறையும் இன்னமும் கூட ஆர்எஸ்எஸ் சார்பு நிலையி லிருந்து செயல்படுகின்றன.

மே மாதத்தில், இந்து ராஷ்ட்ராவை முன் மொழிந்த பாபா பாகேஸ்வர் தம்மின் உரையை கேட்டு விட்டு வெளியில் வந்தவர்கள், தங்கள் கண்ணில் பட்ட அருகில் இருந்த அம்பேத்கார் சிலையைச் சேதப்படுத்தினார்கள். பின்னர் இன்னொரு சிலை அமைப்பதற்காக எழுப்பப் பட்ட மேடையை நிர்வாகமே இடித்துத் தள்ளியது. இரண்டு நிகழ்வுகளிலுமே மீண்டும் அவற்றை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி வலுவான பிரச்சார இயக்கத்தை நாங்கள் தலைமை தாங்கி நடத்தினோம். 

அம்பேத்கர் பற்றி பேசும்போது, இன்றைய தலித் அரசியலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீங்கள் கருத்தியலையும் அரசியலையும் பிரித்தீர்களென்றால், அடையாள அரசியல் என்பது ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்திகளால் பயன்படுத்தப்பட்டுவிடும். இன்றைய தலித் அரசியல் அப்படித்தான் நடந்து கொண்டி ருக்கிறது. அடையாளத்தை கருத்தியலுடன் நாம் இணைக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக, அம்பேத்கரிய கருத்தியல் வளர்ந்த விதமானது, அம்பேத்கரை ஒரு தலித் திருவுருவாகச் சுருக்கி விட்டது. அவர் அரசியல மைப்புச் சட்டத்தை உருவாக்கியவர் என்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் கர்த்தா என்றும் புகழப்படுகிறார். இப்போது பாஜக அவரை முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று சித்தரித்து, அவரின் எழுத்துக்களை பொருத்தப்பாடற்ற விதத்தில் பயன்படுத்தி அவரை தன்வயப்படுத்தியிருக்கிறது.

அம்பேத்கரும் பகத்சிங்கும் மிகவும் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட கருத்தியல் திருஉருக்கள். விடுதலைக்காக தன்னுயிரைத் தந்த புரட்சியாளராக மட்டுமே பகத்சிங் முன்னிறுத்தப் படுகிறார். ஆனால், இன்றைய சூழலில் அவரின் கருத்துக்கள் உங்களிடம் பேசுகின்றன.

அதேபோல்தான் அம்பேத்கரும். அவரை நாம் காத்திரமாக எடுத்துக் கொண்டிருந்தால், அவருடைய தாக்கம் என்பது வேறு விதமாக இருந்திருக்கும். உண்மையிலேயே, தலித்துகள் மாத்திரமல்ல, இந்த நாடே அம்பேத்கரை மீள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அவருடைய கருத்துக்களை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். விடுதலைக்குப் பின்பு, விடுதலைப் போராட்ட இயக்கத்தின் மூலம் நாம் பெற்ற அதிமுக்கியத்துவமான பயன் அரசியலமைப்புச் சட்டம் என்பதை நாம் விளக்கத் துவங்க வேண்டியதிருக்கிறது.

நமது முதன்மையான விடுதலைப் போராட்டத் தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் பார்க்கப்பட வேண்டும். சுதந்திர இந்தியாவுக்காக போராடியவர்கள் இருந்தார்கள். சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணியவர்களும் இருந்தார்கள். அம்பேத்கர் அதைத்தான் செய்தார்.

தலித் இயக்கத்துக்கும் இடதுசாரி இயக்கத் துக்கும் இடையே வரலாற்று ரீதியாகவே தவறான புரிதலும் இடைவெளியும் இருந்து வருகின்றது. அவை நீக்கப்பட்டுவிட்டால் பாசிசத்தை இன்னும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். நல்ல வேளையாக, பீகாரின் களத்திலிருந்து ஒரு புதிய முழக்கம் எழுந்து வருகிறது: “ஜெய் பீம்! லால் சலாம்!"