அகில இந்திய மாணவர் கழகத்தின் 10 வது தேசிய மாநாடு கொல்கத்தா நகரில் 2023 ஆகஸ்ட் 9 முதல் 11 வரை நடைபெற்றது. மாநாட்டு அரங்கம் சந்திரசேகர்-பிரசந்தா பால் நினைவாக வும் மாநாட்டு மேடை ரோகித் வெமுலா - பயல் தட்வி மன்ஞ் நினைவாகவும் பெயர் சூட்டப் பட்டிருந்தது. மாநாடு இளைய இந்தியா கல்வியையும் கவுரவமான வேலையையும் கோருகிறது, வெறுப்பு கும்பலை அல்ல'' என்பதையும் “பகத் சிங் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியாவை கட்டி எழுப்புவோம்” என்பதையும் முழக்கமாக கொண்டிருந்தது.

மாநாட்டின் பொது அமர்வில் இகக(மாலெ)  மேற்குவங்க மாநிலச் செயலாளர் தோழர் அபிஜித் மஜூம்தார், சந்திப் சவுரவ், சுசேதா டே மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழக பேராசிரியர் மானஸ் கோஷ் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் அனைத் திந்திய மாணவர் பெருமன்ற (AISF) தேசிய தலைவர் சுபம் பானர்ஜி உரையாற்றினார். அவர் மக்கள் விரோத, மாணவர் விரோத மோடி-ஷா ஆட்சிக்கு எதிராக போராட இடதுசாரி மாணவர் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். இந்திய மாணவர் சங்க (SFI) தேசிய துணைத் தலைவர் பிரதிகுர் ரஹ்மான் தனது உரையில் மோடி-ஷா ஆட்சி இந்தி இந்து- இந்துஸ்தான் என்பதை அமல்படுத்தி இந்தியா வின் ஒற்றுமையை, பன்மைத்துவத்தை, வேற்றுமையை அழித்து வருவதாக கூறினார்.

கல்வியாளர் குமார்ராணா மற்றும் அனைத்து வங்க மாணவர் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான நில்கந்த் ஆச்சார்யா, பிற இடதுசாரி மாணவர் அமைப்புகள்- பிஎஸ்யு பொதுச் செயலாளர் நோபவுல் சைபுல்லா மற்றும் ஜனநாயக மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மணிசங்கர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் தனது உரையில் "அய்சா தனது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கும்போது, வளாக ஜனநாயகத்துக் காகவும் சிவில் உரிமைகளுக்காகவும் போராடிய

மாணவர் செயல்பாட்டாளர்கள் உமர் காலித், குல்ஃபிஷா பாத்திமா போன்றோர் பொய்யான வழக்குகளில் சிறையில் வாடுகின்றனர். பீமா கோரேகான் போலவே குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களையும் குற்றமயமாக்கும் சதி என்பது அம்பேத்கரின் இந்தியாவை அழித்தொழிக்கும் மிகப்பெரிய திட்டத்தின் பகுதியாகும். இஸ்லாமியர்களுக்கும் இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் எதிராக வெறுப்பு அரசியலை நடத்தும் கும்பலாக இளைய இந்தியாவை எப்படி இந்த அரசாங்கம் மாற்றுகிறது என்பதை அம்பலப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு மாணவர் சமூகத்திற்கு இருக்கிறது. ஆகவே, காலத்தின் தேவைக்கு எழுந்து நின்று இளைய இந்தியா வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தப்படுவதை அய்சா தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கூடவே பாபா சாஹிப் அம்பேத்கரும் பகத்சிங்கும் கனவு கண்ட இந்தியாவை கட்டி எழுப்ப ஒரு வலுவான மாணவர் இயக்கத்தை கட்டி எழுப்ப வேண்டும்" என்றார்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் நீரஜ் குமார், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தோழர் இந்திராணி தத்தா, தெற்காசிய ஒருமைப்பாட்டு குழுவின் கல்பனா வில்சன் ஆகியோர் மாநாட்டில் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டின் இறுதி நாளில் இன்றைய சூழலும் நமது கடமையும் பற்றிய அறிக்கை யையும் சில திருத்தங்களுடன் அமைப்புச் சட்டத்தையும் மாநாடு ஏற்றுக்கொண்டது. மாநாடு பாலியல் கூருணர்வு கொள்கை அறிக்கையையும் ஏற்றுக்கொண்டது.

மாநாட்டில் 171 பேர் கொண்ட தேசிய கவுன்சிலும் 65 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 15 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. நிலாசிஸ்போஸ் அகில இந்திய தலைவராகவும் பிரசன்ஜித் குமார் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து சேலம் தோழர் சுந்தர்ராஜன் தேசிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.