2023 செப்.15, மாலையில் நாகர்கோவில் சிவகாமி அம்மாள் கல்யாண மண்டபத்தில் இகக (மாலெ) சார்பில் “மணிப்பூர் கொடூரங்களை மன்னிக்க மாட்டோம்! மோடி ஆட்சியை விரட்டும் வரை ஓயமாட்டோம்!!" என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இகக(மாலெ) குமரி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.அந்தோணிமுத்து தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம், மாநில நிலைக்குழு உறுப்பினர் க.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இகக(மாலெ) மாநில நிலைக்குழு உறுப்பினர் சுசீலா வரவேற்புரையாற்றினார்.
இகக(மாலெ) அரசியல் மாநாட்டில் இகக(மாலெ) தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் மதுகூர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நா.பெரியசாமி, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் காளியப்பன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் பழனி பாரூக், இகக(மாலெ) மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். முன்னதாக, மக்கள் கலை இலக்கிய கழக தோழர் கோவன் தலைமை யிலான கலைக் குழுவினரின் புரட்சிகர பாடல் களுடன் மாநாடு துவங்கியது. இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கார்மல் நன்றி கூறினார். மாநாடு நடைபெற்ற வளாகத்திலும் மேடையிலும் மார்க்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள், தியாகிகளின் படங்களும் மணிப்பூரின் கொடூரத்தை வெளிப் படுத்தும் படங்களும் மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டப் படங்களும் வைக்கப்பட்டு இருந்தன.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கடந்த 5 மாதங்களாக,மணிப் பூரில் பழங்குடி மக்களுக்கு இடையிலான பிளவு, கொடூர வன்முறைகளை நிறுத்தி, அமைதி நிலை நாட்டப்பட ஏதுவாக உடனடியாக மணிப்பூர், பாஜக முதலமைச்சர் பைரன்சிங் பதவி விலக வேண்டும்!
ஹரியானா மாநிலத்தில், பாஜக அரசால் திட்டமிடப்பட்டு இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் மற்றும்புல்டோசர் அடக்குமுறைகளில் ஈடுபட்டகுற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.உயிர், உடமைகள் இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மாநாடு கோருகிறது.
பிறப்பால் மேலோர் கீழோர், புனிதம் தீட்டு, தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறைகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றை வலியு றுத்தும் "சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்!" என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாக்கைப் பிடுங்க வேண்டும் என வன்மத்துடன் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை கைது செய்ய வேண்டும், பதவிநீக்கம் செய்ய வேண்டுமென மாநாடு கோருகிறது.
மோடி அரசாங்கம் கொண்டு வரத் துடிக்கும் "ஒரேநாடு ஒரேதேர்தல்" என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு, மாநிலங்களின் தன்னாட்சி, கூட்டாட்சிமுறை மீதான தாக்குதல் ஆகும். அது இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மையை அழித்துவிடும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமே! இந்திய சமூகத்தின் பன்முகத் தன்மை மீதான தாக்குதலை எதிர்த்துப் போராடுவோம்! பாராளுமன்ற ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை, சுதந்திரமான நியாயமான தேர்தல் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்க மாநாடு உறுதி ஏற்கிறது!
பல இனங்கள், பல மொழிகள், வேறுபட்ட இறைநம்பிக்கைகள் கொண்ட பன்மைத்துவ இந்தியாவின் மீது, ஒருபொதுசிவில் சட்டத்தை திணிக்க காவிப்பாசிச மோடி அரசு முயற்சிப்பதை மாநாடு வன்மையாக எதிர்க்கிறது, கண்டிக்கிறது.
இந்தியா எனும் பாரத் என்று அரசமைப்புச் சட்டம் குறிப்பிட்டுள்ள போதிலும் "பாரத் என மாற்ற வேண்டும்" என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் ஆலோசனைப்படி, மோடி அரசாங்கம் தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும், 'பாரத்' என்ற பெயரை மட்டும் பயன்படுத்தத் துவங்கியுள்ளது. புராண இதிகாசங்களைக் காட்டி பாரத் என இந்திய நாட்டின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்ற விவாதங்களுக்குப் பின்னால், வெறும் பெயர் மாற்றம் மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு மோடி அரசாங்கம் தயாராகி வரும் சதித்திட்டமும் வெளிப்படுகிறது. இதற்காக பாராளுமன்ற வழிமுறைகளை மீறும் பாசிச நடவடிக்கைகளில் மோடி அரசாங்கம் இறங்கியுள்ளதை முறியடிக்க மாநாடு உறுதி ஏற்கிறது!
ஜனநாயகம் காக்க, இந்தியாவைக் காக்க, எதிர்வரும் மக்களவை தேர்தலில், கார்ப்பரேட் காவிப்பாசிச மோடி ஆட்சியை வெளியேற்ற' இந்தியா கூட்டணியை எல்லாவகையிலும் வலுப்படுத்திட முன்வருமாறு முன்வருமாறு தமிழக மக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)ன் சிறப்பு மாநாடு அழைப்பு விடுக்கிறது. தொழிலாளர், கிராமப்புர தொழிலாளர், பெண்கள்,மாணவர், இளைஞர், முற்போக்கு, ஜனநாயக சக்திகளை மோடி ஆட்சிக்கு எதிராக அணிதிரட்ட மாநாடு உறுதி ஏற்கிறது.
இந்தியா ஒன்றுபடும், இந்தியா வெல்லும்l
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)