இப்போது நம்முடைய அரசாங்கம், 'ஒரு நாடு, ஒரு தேர்தல், ஒரு வாக்கு, ஒரு மொழி, ஒரு மதம்' ஆகியவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுகிறது. அவர்களுடைய முறைப்படி 'ஒன்றை’ உருவாக்குவதற்கு, இந்து இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மற்றவருடன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும். சங்பரிவார் சாதிய முறையின் அடித்தளத்தை நன்கு புரிந்துகொண்டு, அதை பயன்படுத்துவதோடு, அது நிலைத்திருக்கச் செய்ய முயற்சிக்கிறது. திறந்தவெளியில் தீப்பிடிக்க ஒரு தீப்பொறி போதும் என மாவோ கூறினார். ஆனால், நமது சமூகம் திறந்தவெளியல்ல, இது திக்குத் தெரியாத காடு. அதற்குள் தீப்பொறி கூட காணாமல் போகும். சாதிய அமைப்பு முறைதான் அந்த திக்குத் தெரியாத காடு. அந்த திக்குத் தெரியாத காட்டின் வரை படத்தை, சாதிய அரசியல் பண்ணும் கட்சிகளைக் காட்டிலும் சங்பரிவாரங்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். இடஒதுக்கீட்டுக் கொள்கை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார். ஆனால், இந்த சாதியப் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும். பாஜக, இந்தியா கூட்டணியை இந்துக்களுக்கு எதிரானது என்கிறது. அநேகமாக, 90% முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்டோர்கள்தான். ஏன் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்? ஏனென்றால், அவர்கள் சாதிய அமைப்பு முறையால் ஒடுக்கப்பட்டார்கள். அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார்கள். சாதிய அமைப்பு கொடுமையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இஸ்லாத்தைத் தழுவியவர்கள் இன்று சாத்தானின் குழந்தைகளாம், அவர்களை அழிக்க வேண்டுமாம். நாம் இன்று காணும் முரண்பாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் இந்த சாதிய அமைப்புமுறைதான். அதை உடைப்பதுதான் நமது இலக்கு.

இப்போது நம்மிடம் 'ஒரு நாடு, ஒரு கம்பெனி' இருக்கிறது. அதாவது மோடிஜி, கௌதம் அதானி. இதை அப்படியே இருக்கச் செய்வதற்காக, நம்மை இந்த திக்குத் தெரியாத காட்டிற்குள் கொண்டு விடுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்குமான நேரம் இது... நம்முடைய வேற்றுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும். வேறு வழி இல்லை. அது ஒன்றும் முடியாத காரியமும் அல்ல.