மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிர் பத்திரிகையின் 5ம் பதிப்பு 22.9.2023 அன்று நெல்லையில் துவங்கப்பட்டது. நெல்லை பதிப்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். திறப்பு விழாவில், இகக(மாலெ) மாநில நிலைக்குழு உறுப்பினரும் தீப்பொறி ஆசிரியருமான தோழர் ஜி.ரமேஷ் மற்றும் இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் எம்.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தீப்பொறி ஆசிரியர் பேசும்போது, தோழர் அப்பு என்ற அற்புதசாமியால் 1963 ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று தொடங்கப்பட்டது ‘தீக்கதிர்' பத்திரிகை. அவர்தான் இகக(மாலெ) கட்சியின் முதல் மாநிலச் செயலாளரும் ஆவார். தோழர் அப்புவால் ஆரம்பிக்கப்பட்ட தீக்கதிர் பத்திரிகையின் 5ம் பதிப்பு நிகழ்ச்சியில் அவரை முதல் மாநிலச் செயலாளராகக் கொண்ட இகக(மாலெ)யின் தீப்பொறி பத்திரிகை ஆசிரியரான நான் உரையாற்றுவதில் உள்ளபடியே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இந்த பெருமைமிகு தருணத்தை எனக்குத் தந்த தோழர்களுக்கு நன்றி. செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதம். மக்கள் நலனே கட்சியின் நலன் என்றும் மக்கள் நலனே தங்கள் நலன் என்றும் வாழ்ந்து மறைந்த தியாகிகள் பிறந்த மறைந்த மாதம். தோழர் அப்புவின் வழியில் செயல்பட்ட தோழர்கள் சந்திரகுமார்-சந்திரசேகர் இருவரும் தியாகியான நாள் செப்.2, திருநெல்வேலி புரட்சிக்கு வித்திட்ட, தொழிலாளர்களின் தலைவராக, ஆங்கியேருக்கு எதிராக கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் செப்.5, புரட்சிக் கவிஞர் பாரதி பிறந்த நாள் செப்.11, தியாகி இம்மானுவேல் சேகரனும் அதே செப்.11ல்தான் தியாகியானார். அறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்.15, தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்.17, இந்திய விடுதலைப் போரின் புரட்சி நாயகன் தூக்குக் கயிறை முத்தமிட்ட தோழர் பகத்சிங் பிறந்தநாள் செப்.28, சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் எதிராக, அடித்தால் திருப்பி அடி என்று தஞ்சை மண்ணில் உணர்வெழுச்சியை ஊட்டிய தோழர் சீனிவாசராவ் நினைவு நாள் செப்.30. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விடுதலைப் போருக்கும் சமூகநீதிக்கும் மிக முக்கியமான மாதமான செப்டம்பர் மாதத்தில் தீக்கதிரின் நெல்லை பதிப்பு துவக்கப்படுவது மிகப் பொருத்தமானதாகும். தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவிப் பாசிச கும்பல், சர்சைகளை உருவாக்கி அரசியல் செய்யப்பார்க்கிறது. அதுவும் தமிழகத்தின் சர்சைகளை வட இந்தியாவில் இருந்துதான் தொடங்குவார்கள். பெருமாள்முருகன்-அர்த்தநாரி பிரச்சினையை வடஇந்தியாவில் இருந்துதான் ஆரம்பித்தார்கள். அதைப்போல வைரமுத்து-ஆழ்வார், கருப்பர் கூட்டம்- கந்தசஷ்டிக் கவசம் என்று இப்போது உதயநிதி ஸ்டாலின்- சனாதனம் பிரச்சினையையும் வடநாட்டு போலிச் சாமிரை வைத்து ஆரம்பித்தார்கள். இந்தச் சூழ்நிலையில், சனாதம் பற்றி நமது தோழர்களுக்கு தெளிவுபடுத்த, தீக்கதிர் முக்கிய பங்காற்றுகிறது. திருநெல்வேலி திசையன்விளையில் நடைபெற்ற முத்தையாவின் சாதியாதிக்க ஆணவப்படுகொலையை வெளிச்சம் போட்டு காட்டியதில் தீக்கதிருக்கு பெரும் பங்கிருக்கிறது. தீக்கதிர் பத்திரிகையின் 5ஆம் பதிப்பு வெற்றி பெற இகக(மாலெ)-தீப்பொறி வாழ்த்துகிறது.