இந்த நாடே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. "இந்து ராஷ்ட்ரா" உருவாக்கும் கனவுகளில் சங்கி பரிவாரங்கள் மிதந்து கொண்டு இருக்கிறார்கள்.
'ரத யாத்திரை' என்ற பெயரில் மத வெறித் தூபம் போட்டு வளர்க்கப்பட்டது. நாடு முழுவதும் ரத்த ஆறு ஓடியது. கர சேவை என்கிற பெயரில் நாடு முழுவதும் இருந்து ராமர் கோவில் கட்டுவதற்கான செங்கற்கள் கொண்டு வரச் சொன்னார்கள். அந்தக் கற்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான படிக்கற்களாக மாற்றிக் கொண்டார்கள். கோத்ராவில் ரயில் பெட்டியில் தீ வைத்தார்கள். பக்தர்கள் மடிந்தார்கள். சில ஆயிரம் மக்களைக் கொன்று குவிப்பதற்கான காரணமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். குஜராத் மாநில அரசும் போலீஸ் நிர்வாகமும் வேடிக்கை பார்த்தது. அல்லது ஆதரவு அளித்தது. கொன்று குவிக்கப்பதற்கென திட்டமிட்டு வளர்க்கப்பட்ட மதவெறி எனும் தீயையும், கார்ப்பரேட் மூலதன நலன் எனும் ஆற்றலையும் பயன்படுத்தினார்கள். ஊதுகுழல் ஊடகங்கள் கோயபல்ஸ் பரப்புரை அரண்களாக நின்றன. ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்திய நாட்டின் பன்முகத் தன்மை, மதச் சார்பற்ற மாண்பு கிழித் தெறியப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டம் கிடப்பில் போடப்பட்டு பஞ்சாயத்து செய்யப் பட்டது. பாபர் மசூதியை ராமர் கோவிலாக்க நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டி முடித்து, ஜனவரி 22ல் அதைத் திறப்பதன் மூலம் 2024ல் நாடாளுமன்ற அரியணையின் வாசற் கதவுகளை பிஜேபிக்குத் திறந்து விடலாம் என சங்கிகள் கனவுக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 100 நாட்களுக்கு ஆயிரம் ரயில்கள் நாடு முழுவதுமிருந்து அயோத்தியாவுக்கு விடப்படும் என்கிறார்கள். 'ராமர் கோவிலுக்கு தர்ம தரிசனம்' என மத்தியப்பிரதேச,சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல்களில் தேர்தல் வாக்குறுதியாகவும் அள்ளி வழங்கப்பட்டது. தர்ம தரிசன சவடால்களின் பின்னால் மக்களின் சொல்லொணா வறுமையும் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டமும் மறைக்கப் படுகின்றன. ராமர் கோவில் பெயரில் வெறுப்பு அரசியலை தூபம் போட்டு வளர்க்கிறார்கள். 500 ஆண்டுகள் காத்துக் கிடந்ததன் அடையாளமாக நாடு முழுவதும் வீடுவீடாக 5 தீபங்கள் ஏற்ற அழைப்பு விடுப்பது சாமியார்கள் அல்ல, இந்த நாட்டின் பிரதமர். மதச் சார்பற்ற நம் தாய்நாட்டை ஒரு மதச் சார்பு நாடாக மாற்றும் முயற்சி இது. அறைகூவல் விடுக்கப்படுவது தீபங்கள் ஏற்றுவதற்காக அல்ல, வெறுப்பு அரசியலைப் பற்ற வைப்பதற்காக. ராமர் பெயரால் மத உணர்வைத் தூண்டி நாட்டு மக்கள் அனைவரையும் பிஜேபிக்கு வாக்களிக்கச் செய்வ தற்காக. மதம் என்பது அரசியலோடு, அரசு செயல் பாட்டோடு தொடர்புடையதாக இருக்கக் கூடாது. அதுதான் மதச் சார்பின்மை. ஆனால், மோடியின் தலைமையிலான பிஜேபி அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகிறது.
சட்டத்தின் ஆட்சி என்பதற்குப் பதிலாக சட்ட மீறல்களின் ஆட்சி என்பதாக மோடியின் பிஜேபி ஆட்சி அவதாரம் எடுத்திருக்கிறது. கிரிமினல் சட்ட திருத்தங்கள் முதல் தொழிலாளர் சட்டங்கள், வேளாண் சட்டங்கள் வரை தற்போதைய சட்ட மீறல்களே சட்டமாக்கப்படுகின்றன.
அரசு நிர்வாகம், கல்வி, சுகாதார நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கலாச்சார அமைப்புகள் முதல் ராணுவம், நீதித் துறை வரை அனைத்தும் மதவெறி அரசியலுக்குத் துணை செல்பவர்களால் நிரப்பப்படுகிறது. அதற்குத் தடையாக இருக்கும் சட்டங்கள், விதிகள், அரசாணைகள் திருத்தப்படுகின்றன.
பில்கிஸ் பானோ வழக்கு முதல் தீண்டாமை குறித்த வழக்குகள் வரை அனைத்திலும் குற்றவாளி கள் விடுவிக்கப்படுகிறார்கள். மதவெறி, வெறுப்பு உணர்வுகள், வெறுப்பு அரசியல் தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது. மக்களின் துன்ப துயரங்களுக்கு சிறுபான்மையினரே காரணம் என சுட்டிக்காட்டப் படுகிறது. அவர்களை ஒழித்தாலேயன்றி இந்துக் களுக்கு வாழ்வில்லை என வெறுப்பு அரசியல் ஊட்டி வளர்க்கப்படுகிறது.
மதவெறி சார் வெறுப்போடு கூடவே சாதி வெறுப்பும் அதற்கு இணையாகவே வளர்க்கப் படுகிறது. நாடு முழுக்க தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், ஆணவக் கொலை கள், கூட்டுப் பாலியல் வன்முறைகள் பெருமளவு அதிகரித்து இருக்கின்றன. முற்பட்ட சாதியினரின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அவர்களுக்கான இட ஒதுக்கீடும்தான் என காரணம் காட்டப்படுகிறது. மாதம் ரூ.65,000 அளவு வருமானமுள்ள முற்பட்ட வகுப்பினர் கூட ஏழைகளே என்று கூறி பொருளா தாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் சாதீயப் படிநிலையை யும் குலத் தொழிலைக் கட்டாயமாக்கும் இழி நிலையையும் உறுதிப்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. கேர்லாஞ்சி முதல் ஹத்ராஸ் வரை தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் எண்ணற்றவை. 2018 முதல் 2021 வரை பதியப்பட்ட வழக்குகளே 1.8 லட்சம் ஆகும். இன்னும் பதியப் படாத வெளிச்சத்துக்கு வராத தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பலப்பல லட்சங்கள் ஆகும்.
இவற்றின் மூலம், வெறுப்பு என்பதை மக்களின் பொது உணர்வாகவும், அது நியாயம்தான் என்பதை ஒரு பொதுப்புத்தியாகவும் மாற்றிடுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவற்றை எதிர்த்து கருத்து சொல்லும் கௌரி லங்கேஷ் போன்றவர்களை சுட்டுத் தள்ளுவதற்கான ஆர்எஸ்எஸ்சின் மதவெறி சாதி வெறிப் படைகள் ஏற்கனவே களத்தில் இருக்கின்றன. மற்றவர்களை பொய் வழக்கு புனைந்து, கேள்வி கேட்க முடியாமல் பல ஆண்டுகள் சிறையில் தள்ளுவதற்கான ஊபா போன்ற சட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மணிப்பூரும் காஷ்மீரும் மோடி ஆட்சி யின் விதிவிலக்குகள் அல்ல, மாறாக ஆர்எஸ்எஸ்- பிஜேபி அரசியலின் முன்மாதிரிகளாக முன் வந்திருக்கின்றன.
டாக்டர் அம்பேத்கர் முக்கிய பங்காற்றி,உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தை, நவீன இந்தியாவின் அஸ்திவாரத்தைமாற்றி அதன் இடத்தில் காட்டுமிராண்டி காலத்துக்கான ஒரு சட்டமாக, சாதீயப் படிநிலையைக்கட்டிக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட மனுஸ்மிருதியை இந்திய அரசியல் அமைப்புச் சட்டமாக்கிட வேண்டும் என துடிக்கும் ஒரே கட்சி பிஜேபிதான். மனு ஸ்மிருதி இந்திய நாட்டில் உள்ள 97 சதவீத மக்கள் அனைவரும் மேல்சாதியான மூன்று சதவீத பிராமணர்களுக்கு சேவை செய்வதற்கென்றே பிறந்தவர்கள் என்கிறது. அதை மறுப்பவர்கள், கேள்வி கேட்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதை விலாவாரியாக விளக்கி இருக்கிறது. பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறது. ஆணாதிக்கத்தை, பெண்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப் படுத்துவது மட்டுமல்ல, நிறுவனமயப்படுத்த முயற்சிக்கிறது.
அதே போல, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்து, மன்னர் கால சர்வாதி காரத்தை ஒத்த, ஹிட்லரின் பாசிசத்துக்கு ஈடான ஒரு ஆட்சியை, அதிபர் ஆட்சி போன்றதோர் ஆட்சி வடிவத்தை, இந்து ராஷ்ட்ரா என்கிற பெயரில் அமைத்திடுவதை தனது குறிக்கோளாகக் கொண்டி ருக்கிறது. அவர்கள் கனவு காணும் அந்த இந்து ராஷ்ட்ராவின் அரசியல் அமைப்புச் சட்ட முன்மாதிரி தான் மனு ஸ்மிருதி.
பிஜேபியைப் பொறுத்தளவில், இந்து ராஷ்ட்ரா அமைப்பது நோக்கமாக சொல்லப்பட்டாலும் அதில் இந்துக்கள் யாரென்று கேட்டால், அது கோடிக் கணக்கான உழைக்கும் இந்துக்கள் அல்ல, இந்து பொது மக்கள் அல்ல. அதானிகளும் அம்பானிகளும் அது போன்ற கார்ப்பரேட் முதலாளிகளும்தான் இந்துக்கள் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் முதல் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வரை, அரசு சொத்துக்களை விற்பது முதல் அக்னிவீர் திட்டம் வரை, கல்விக் கொள்கை முதல் தொழிற் கொள்கை வரை அனைத்துமே இது இந்து மக்களுக்கு எதிரான ஆட்சி, இந்து உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்சி என்பதையே உறுதிப்படுத்துகின்றன.
இந்தப் பின்னணியில், மோடியின் பிஜேபி ஆட்சி, இந்திய நாட்டின் மதச் சார்பற்ற விழுமியங் களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு, இந்திய பாரம்பரியமான நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கு எதிரானது. இந்திய மக்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு எதிரானது. அதனால்தான், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை ஆட்சியை விட்டு அகற்றுவது, ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாக முன்வந்திருக்கிறது.
முதல்முறையாக, இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சிகள் அனைத்தும், சிபிஐ எம்எல் உட்பட, கரம் கோர்த்து, 'இந்தியா' என்கிற மிகப்பெரும் கூட் டணியை உருவாக்கி இருக்கின்றன. 'இந்தியா' கூட்டணியின் உதயம், இந்தியா என்கிற நாட்டின் பெயரையே பாரத் என மாற்ற வேண்டும் என பிஜேபி கூக்குரலிடுகிற அளவுக்கு அவர்களுக்கு பெரிய கவலையாக எழுந்திருக்கிறது.
வரவிருக்கும் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகள் பெறவில்லை என்றால் வெல்ல முடியாது என தெரிந்து கொண்டு 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெறுவதை பிஜேபி தனது இலக்காக கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த 5 மாநிலகளின் தேர்தல்களிலும் கூட அதையேதான் இலக்காக கொண்டிருந்தாலும் பிஜேபி அவ்வளவு வாக்குகள் பெற முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சமீப சில ஆண்டுகளாக தமிழ் நாட்டில் காலூன்றிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக் கிறது பிஜேபி முதல் சுற்றில், விநாயகர் பூஜையை தமிழ் நாட்டில் பெரிய விழாவாக்க முயற்சித்தது. விநாயகர் ஊர்வலங்களை இஸ்லாமியர் வாழும் பகுதிகளினூடே கொண்டு சென்று மதக் கலவரங் களை உருவாக்கிட முயற்சித்தது. சிறைகளுக்குச் சென்று தனது உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தைத் துவங்கியது. அருந்ததியரைக் கவர்வதற்காக அவர்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்க முயற்சித்தது. வெற்றி வேல், வீர வேல் என்று தமிழ் மக்களின் கடவுளாக இருக்கும் முருகனைத் தனது மதவெறி ஊட்டும் நிகழ்ச்சிநிரலுக்கு, காவிஅரசியல் மயமாக்குவதற்கு முயற்சி செய்தது.
தமிழ் நாட்டில் உள்ள சாதிய முரண்பாடு களைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி வருகிறது. தமிழ் நாட்டின் வணிக சமூகங்கள் முதல் தலித் மக்கள் வரை அனைவரையும் சாதி ரீதியாக பிளவுபடுத்தி தனது வெறுப்பு அரசியலை வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதிமுகவின் மீது சவாரி செய்து மாநிலம் முழுவதுமான தனது இருத்தலைப் பதிவு செய்ய முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அதன் பங்குக்கு தனது அமைப்பை வலுப்படுத்திக் கொள்ள, நீதிமன்ற அனுமதி பெற்று, மாவட்ட வாரியாக பேரணிகளை நடத்தி வருகிறது. சட்ட விரோதமாக பள்ளிகளில் சாகாக்கள் நடத்துகிறது. பள்ளிகளில், ஆர்எஸ்எஸ் சாகாக்களில் ஆயுதப் பயிற்சி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமாக உள்ளன.
"என் மண், என் மக்கள்” என ஒரு பயணத் தைத் துவங்கினார் அண்ணாமலையார். அத்வானி யின் ரத யாத்திரை போல பெரும் வெற்றி பெறும் என நம்பியது பிஜேபி. அது தமிழ் நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால், தமிழ் நாட்டின் முற்போக்கு விழுமி யங்களைத் தகர்த்திட, பெரியாரை சிறுமைப் படுத்திட கருத்தியல் மட்டத்தில் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டு மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்திட, மத வெறியை ஊட்டிட, வரலட்சுமி விரதம், கோவில் விழாக்கள், பண்டிகை களை காவி அரசியல்மயமாக்கிட கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. கல்யாண ராமனை, கோசல ராமனை, ஜானகி ராமனை, மதவெறி அரசியல் ராமனாக மாற்றி இருக்கிறது பிஜேபி. நாம் அதை எதிர்கொண்டு முறியடித்திட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கண்ணுக்குத் தெரியும் விதத்திலும், கண் ணுக்குத் தெரியாத விதத்திலும் பல்வேறு வகை களில் பிஜேபி மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பது, நாட்டின் கூட்டமைப்புத் தன்மையைக் காப்பது என்பது மிகப்பெரும் சவாலாக இன்று உதித்தி ருக்கிறது. தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மண்ணிலிருந்து ஓடஓட விரட்டியடித்த இந்தித் திணிப்பு, இப்போது சமஸ்கிருதத் திணிப்போடும் கைகோர்த்துக் கொண்டு வலம் வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ஒன்றிய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு இருந்த முன்னுரிமை பறிக்கப்பட்டு, தமிழர்களுக்கு வேலை கிடையாது எனும் நிலை உருவாகி உள்ளது. நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. மதவெறியை பொதுவான உணர்வாக மாற்றிட பல்வேறு வடிவங்களில் முயற்சிக்கப்படுகிறது.
பெண்ணுரிமைக்கான, ஆணாதிக்கத்துக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக் கான, பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட பெரியாரின் கருத்துக்களை, ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைக்கான நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திட வலு சேர்த்த அம்பேத்கரின் கருத்துக்களை, மனித சமூக வளர்ச்சி குறித்த அறிவியல் பூர்வமான பார்வைகளைச் சிதைத்திட,மூட நம்பிக்கையை வளர்த்திட பிஜேபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அத்தகைய சவாலை சிபிஐஎம்எல் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்பவர்கள் கூட பெரியாரின் கருத்துக்களை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் என்றால், அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் பெரியார் அம்பேத்கர் கருத்துக்களின் மரபுத் தொடர்ச்சி, அதை உயர்த்திப் பிடிக்கும் இயக்கமாக சிபிஐஎம் எல் இருக்கும்.
இத்தகைய பிரச்சனைகளில், பிஜேபியை வீழ்த்திடும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, உடன் பயணிக்கும் அனைத்துவிதமான அரசியல் கட்சிகளோடும் அமைப்புகளோடும், பிஜேபியைத் தோற்கடிக்கும் ஒரே நோக்கத்துடன், சிபிஐஎம்எல் கரம் கோர்க்கிறது.
அதே நேரத்தில், அநீதிகளுக்கு எதிராக, கார்ப்பரேட் பாதையிலான வளர்ச்சிப் போக்குகளுக்கு எதிராக, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக, உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, சமரசமற்ற போராட்டத்தை நடத்துவதிலும் முன்னணியில் இருக்கிறது. அதுதான், சிபிஐஎம்எல் கட்சியின் புரட்சிகர மரபு.
சமூக நீதி என்பதை வெறும் இட ஒதுக்கீடு எனும் குறுகலான பொருளில் நாம் புரிந்து கொள்ள முடியாது. சமூக நீதி எனும் சொல்லாடல், சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார நீதி மற்றும் உரிமைகள் எனும் அனைத்தும் தழுவியதோர் பொருளைக் கொண்டது. அதன் அனைத்தும் தழுவிய பொருளிலான சமூக நீதிக்கான போராட்டத்தில் சிபிஐஎம்எல் முன்னிலையில் இருக்கிறது.
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்து வதில் தமிழ் நாட்டுக்கு, சிபிஐ எம்எல் கட்சிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. பலரும் 'பாசிசம்' என்ற சொல்லாடல் குறித்து தயங்கிக் கொண்டிருந்தபோது சிபிஐஎம்எல் கட்சி இது பாசிசம்தான் என்று அறுதியிட்டுச் சொன்னதோடு மட்டுமல்ல, அதன் இந்தியத் தன்மையையும் துல்லியமாக எடுத்துரைத்தது.
பிஜேபி அபாயம் என்பது அகில இந்தியஅளவில் எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் கூட அதன் முயற்சிகளை நாம் புறந்தள்ளி விட முடியாது.பிஜேபியின் முயற்சிகள் உடனடியாக பெரும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை என்றாலும், நீண்ட காலநோக்கில் அதன் சிதைப்பு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே, தமிழ் நாட்டிலும் பிஜேபியின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான கருத்தியல் போரின் முனையைக் கூர்மைப் படுத்திட வேண்டும்.
'வீழ்க பாசிசம்' என்பது முதலாவதாக, வரவிருக்கும் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப் போம் எனப் பொருளாகும். வரவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் பிஜேபியைத் தோற்கடிப்பது இந்திய மக்களின், தமிழ் நாட்டு மக்களின் உடனடி கடமை. அதில் வேறுபாடு இல்லை. ஆனால், அதே நேரத்தில், அது பிஜேபியைத் தேர்தலில் தோற்கடிப்ப தோடு நின்று போகும் முழக்கமல்ல. அது வீழ்க பிஜேபி, வீழ்க மனு ஸ்மிருதி, வீழ்க வெறுப்பு அரசியல், வீழ்க கார்ப்பரேட் ஆதரவு ஆட்சி, வீழ்க இந்திய மக்கள் விரோத ஆட்சி, வீழ்க கொடுங் கோன்மை ஆட்சி என்றும் பொருளாகும். வீழ்க மதவெறி, வீழ்க சாதிவெறி என பொருளாகும். அது பாசிசக் கருத்துக்களை வேரோடும் வேரடி மண் ணோடும் இந்திய நாட்டு மண்ணிலிருந்தே பிடுங்கி எறிந்திட வேண்டும் என்பதையும் குறிப்பதாகும்.
வெல்க இந்தியா என்பது பிஜேபிக்கு எதிராக நாடு முழுவதும், தமிழ் நாட்டிலும் 'இந்தியா' கூட்டணியை வெற்றி பெறச் செய்திட வேண்டும் எனப் பொருளாகும். அது நமது உடனடி கடமை. அதற்காக நம்மாலான அனைத்தையும் செய்திட வேண்டும். ஆனால், அது அத்தோடு முடிந்து போவதல்ல. இந்திய மக்களை புறந்தள்ளி விட்டால் இந்தியா என்கிற வார்த்தையே பொருளற்றதாகி விடும். எனவே, 'வெல்க இந்தியா' என்பது வெல்க 'இந்திய மக்கள்' என்று பொருளாகும். வெல்க இந்திய ஜனநாயகம் எனப் பொருளாகும். வெல்க இந்திய நாடாளுமன்ற முறை' எனப் பொருளாகும். வெல்க இந்திய மக்களின் சமத்துவத்துக்கான போர், வெல்க இந்திய மக்களின் சமூக நீதிக்கான போர், வெல்க இந்திய மக்களின் சுயமரியாதைப் போர் என்று பொருளாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டும் என பொருளாகும்.
அதனால்தான், சிபிஐஎம்எல் கட்சி, குடியரசு நாளான ஜனவரி 26 துவங்கி, இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடித்த காந்தி,மதவெறி ஆர்எஸ்எஸ்ஸைச் சார்ந்த கோட்சேவால் கொல்லப்பட்ட ஜனவரி 30 வரை நாடு தழுவியதோர் பரப்புரை இயக்கத்தை, ஜனநாயகம் காத்திட,அரசமைப்புச் சட்டத்தைக் காத்திட சூளுரைக்கும் இயக்கத்தை நடத்திட அறைகூவல் விடுத்திருக்கிறது.
அந்த நாடு தழுவிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, 'வீழ்க பாசிசம், வெல்க இந்தியா' என போர்ப்பறை முழங்கி, தஞ்சைத் தரணியிலே பிப்ரவரி 1 அன்று, ஒரு மாபெரும் பேரணி நடத்திட தமிழ் நாட்டில் அறைகூவல் விடுத்திருக்கிறது சிபிஐ எம்எல் கட்சி.
அந்தப் பேரணியில் சிபிஐஎம்எல் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்கள் பங்கேற்கிறார். 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
அயார்லா (அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம்), ஏஐசிசிடியு (அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்), ஏஐகேஎம் (அகில இந்திய விவசாயிகள் மகா சபை, அய்சா (அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்), ஏஐகேஎம் (அகில இந்திய விவசாயிகள் மகா சபை, அய்சா (அகில இந்திய மாணவர் கழகம்), ஆர்ஒய்ஏ (புரட்சிகர இளைஞர் கழகம்), அய்ப்வா (அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம்) உள்ளிட்ட வெகு மக்கள் அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்கிறார்கள்.
தமிழ் நாட்டிலுள்ள 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கும் அந்தப் பேரணிக்கு சிபிஐஎம்எல் கட்சி தோழர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்கள், ஜனநாயகம் படைக்க விழையும் நண்பர்கள், முற்போக்காளர்கள், பெரியார் உணர்வாளர்கள், அம்பேத்கர் உணர்வாளர்கள் அத்தனை பேரும் கலந்து கொள்ள வேண்டும் என விழைந்து, அவர்கள் அத்தனை பேரையும் பாசிச எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தில், பேரணியில், - பங்கேற்க சிபிஐஎம்எல் கட்சி அறைகூவி அழைக்கிறது.
பிப்ரவரி 1 பாசிச எதிர்ப்புப் பேரணி, 'வீழ்க பாசிசம், வெல்க இந்தியா' என அறைகூவல் விடுக்கும் பேரணி! ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் இந்து - ராஷ்டிர கனவுகளைத் தகர்த்தெறிந்திட அறைகூவல் - விடுக்கும் பேரணி!
இந்தியா எம் நாடு. தமிழ் நாடு எங்களுடையது. அது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமானது அல்ல, மத வெறியர்களுக்குச் சொந்தமானது அல்ல, மனுஸ்மிருதி வெறியர்களுக்குச் சொந்தமானது அல்ல, இந்திய நாட்டு மக்களுக்குச் சொந்தமானது, கோடானுகோடி உழைக்கும் மக்களுக்குச் சொந்த - மானது, ஜனநாயகத்துக்காக, சமத்துவத்துக்காக, சமூக நீதிக்காகப் போராடும் மக்களுக்குச் சொந்த மானது என அறைகூவல் விடுக்கும் பேரணி!
அனைவரும் வாருங்கள்!
தமிழ் நாட்டில் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவோம், வாருங்கள்!
தமிழ் நாட்டில் பாசிசக் கருத்துக்களுக்கு சாவு மணி அடித்திடுவோம், வாருங்கள்!
பிப்ரவரி 1 பாசிச எதிர்ப்புப் பேரணியை மகத்தான வெற்றி பெறச் செய்வோம், வாருங்கள்!
இகக(மாலெ)விடுதலை
தமிழ்நாடு மாநிலக் குழு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)