நவம்பரில் நடைபெற்ற அய்ந்து சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் கள அறிக்கைகளும் தவறென நிரூபித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று கணித்த வாக்குப்பதிவிற்குப் பிந்தைய சில கணிப்புகளும் கூட, அருகிலுள்ள சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு எளிதான பெரும்பான்மை கிடைக்கும் என்றன. அதனால் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் 18 ஆண்டுகால ஆட்சிக்குப் பின் மாற்றம் வேண்டிய பரந்த மக்களின் ஏக்கத்திற்கான அறிகுறிகளும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடமிருந்து அத்தகைய அறிகுறிகள் எதுவும் வெளிப்படாத பின்னணியிலும், ஹிமாச்சல் பிரதேசம்,கர்நாடகாவில் பாஜகவின் சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகும்,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜகவின் மாபெரும் வெற்றி மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்துள்ளது. ஹிமாச்சல், கர்நாடகா வெற்றிக்குப் பின் ஏறுமுகத்தில் இருப்பது போல தோற்றமளித்த காங்கிரசுக்கு தெலுங்கானாவில் மட்டும் ஒரேயொரு வெற்றி கிடைத்தது.புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாநிலத்திற்கும் தென்னிந்திய அரசியல் சமநிலை என்ற பரந்த பின்னணிக்கும் தெலுங்கானாவின் இந்தவளர்ச்சிப் போக்குகள் உண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக்குறிக்கின்றன. மத்திய, மேற்கு இந்தியாவின் மூன்று பெரியமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியால், அதன் தெலுங்கானா வெற்றியை மறைக்க முடியாது.

இந்த ஆச்சரியமான முடிவுகளுக்கு வழிவகுத்த காரணிகளை காண்பதற்கு முன்பு, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வாக்குகளின் பங்கில் நிகழ்ந்த மாற்றம் குறித்து நெருக்கமாக சென்று பார்ப்போம். வாக்குகளின் பங்கு என்ற அடிப்படையில் காங்கிரஸ் எந்தவொரு பெரிய இழப்பையும் சந்திக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதனுடைய வாக்குகளின் பங்கு மத்திய பிரதேசத்தில் (41 லிருந்து 40.4 ஆக) 0.6%மும், சத்தீஸ்கரில் (43.1 லிருந்து 42.2 ஆக) 0.9%மும் மட்டுமே குறைந்துள்ளது. ராஜஸ்தானில் மிகக் குறைந்தளவாக (39.3 லிருந்து 39.5 ஆக) 0.2% அதிகரிப்பையும் கூட அது பதிவு செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் (41.1 லிருந்து 48.55 ஆக) 7.45%மும், சத்தீஸ்கரில் (33 லிருந்து 46.27 ஆக) 13.27%மும், ராஜஸ்தானில் (38.8 லிருந்து 41.7ஆக) 2.9%மும் பாஜக வாக்குகளின் பங்கு பெருமளவு அதிகரித்ததால் தான் இந்த முடிவுகளில் வியத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கும் போது, பாஜக வாக்குகளின் பங்கில்ஏற்பட்ட அதிகரிப்பு என்பது பெருமளவுக்கு மற்ற பாஜக அல்லாத கட்சிகள் போல காங்கிரசின் வாக்கு இழப்பினால் நிகழவில்லை. ஆனால் இந்த எண்களைத் தாண்டி களத்தில் சமூக ரீதியாக, தேர்தல் ரீதியாக நிகழ்ந்த உண்மையான மாற்றங்களை நாம் தெளிவாக காண வேண்டிய தேவையுள்ளது. காங்கிரசுக்கு பழங்குடியினரின் ஆதரவில் ஏற்பட்ட அரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் மொத்தமுள்ள 76 இல் 44 எஸ்டி இடங்களை (2018 இல் 19 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 இடங்கள் அதிகரிப்பு) பாஜக கைப்பற்றியது. ராஜஸ்தானில் மேலும் 4 எஸ்டி இடங்களை தனது பையில் போட்டு கொண்டது. மேலும் புதிதாக அமைக்கப்பட்ட பாரதிய பழங்குடியினர் கட்சி பத்து லட்சம் வாக்குகளுக்கு நெருக்கமாக பெற்று மூன்று இடங்களில் வெற்றிகளை பெற்றும் நான்கு இடங்களில் இரண்டாவதாகவும் வந்துள்ளது.

ஹிமாச்சலிலும் கர்நாடகாவிலும் தோல்வியை சந்தித்த பிறகு, மத்திய பிரதேசத்தை தக்கவைக்கவும் காங்கிரசிடமிருந்து ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் கைப்பற்றவும் பாஜக தீவிர முனைப்புடன் செயல் பட்டது. தேர்தல் காலம் முழுவதும் அமலாக்கத் துறையை அப்பட்டமாக பயன்படுத்தியதற்கு இந்தத் தேர்தல்கள் சாட்சியமானது. மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டதை கையாள்வதில் இரட்டை அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேர்தல் செயல்முறையின் மாறுபட்ட மட்டங்களிலும் நிலைகளிலும் நிர்வாக சூழ்ச்சி இருந்ததெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இன்றைய இந்தியாவில் நியாயமான தேர்தல்களை நாம் உண்மையில் எதிர்பார்க்க முடியாதுதான். பாஜக அல்லாத சக்திகள் தேர்தல் களில் வெற்றிபெற வேண்டுமானால் முழுவதும் ஆற்றல்வாய்ந்த, வெகுமக்கள் பங்கெடுப்பு, துல்லியமான பூத் மட்ட அணிதிரட்டல் என தேர்தல் இயக்கம் மெய்யான மக்களின் இயக்கமாக கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். கர்நாடகா விலும் தெலுங்கானாவிலும் காங்கிரசின் வெற்றிகர மான தேர்தல் இயக்கங்கள் கருத்தில் கொள்ளத்தக்க வெகுமக்கள் இயங்காற்றலையும் வீரியத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மூன்றில் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ் தானிலும், இந்த இயங்காற்றலும் வீரியமும் காணாமல் போய்விட்டது.

கர்நாடகாவில் பொம்மையால் தலைமை தாங்கப்பட்ட ஆட்சியிலிருந்த பாஜக அரசாங்கத்தின் ஊழல், அனைத்து மட்ட தோல்வியை அம்பலப்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் கர்நாடகாவிலிருந்து கற்றுக் கொண்ட பாஜக மத்திய பிரதேசத்தில் தனது ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வை தணிக்க முயற்சித்தது. பல அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் களையும் சட்டமன்ற வேட்பாளர்களாக நிறுத்தியது. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவருடைய அரசாங்கத்தின் முக்கியத்துவமிக்க திட்டங்களை குவிமையப்படுத்தி தனிப்பட்ட முறையில் மும் முரமான பரப்புரை இயக்கத்தை நடத்தினார். காங்கிர சால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை எதிர்கொள்ள பாஜகவும் அதேபோன்ற வாக்குறுதிகளை அளித்தது. அவற்றை 'மோடியின் உத்தரவாதம்' எனவும் கூறியது.

மோடி வழிபாடும், இலக்கு வைக்கப்பட்ட நேரடி பரிமாற்றத்தின் அடிப்படையில் 'பயனாளி களை' கொத்தடிமை வாக்காளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட'நல பொருளாதார' மாதிரியும், மதவெறி துருவச்சேர்க்கை மற்றும் தாக்குதல் தன்மை கொண்ட இந்துத்வாவின் நிறைபொருளாக மீண்டும் ஒருமுறை செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச தேர்தலிலும் தற்போது மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானிலும் இந்த சூத்திரத்தை பாஜக வெற்றிகரமாக அமல்படுத்தியது.

கர்நாடகாவில் அதன் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் மய்யமாக, அதானிமோடி கூட்டு, சாதிவாரி கணக்கெடுப்பு என்ற இரண்டு பிரச்சினைகளில் கவனம் குவித்தது. காங்கிரசை பொறுத்தவரையில் அது ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்புக்கும் விரிவாக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கும் ஆதரவாக இருந்ததில்லை. எனவே, ஓபிசியினருக்கான பிரதிநிதித்துவம், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை மீதான கவனம் குவிப்பு வரவேற்கத்தக்க புதிய திசைவழியாகும். ஆனாலும் எந்தளவுக்கு இந்த செய்தி ஒட்டுமொத்த அமைப்புக்குள்ளும் ஊடுருவிச் சென்று அதன் அரசியல் வெளிப்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது என தெரியவில்லை? காங்கிரசின் மத்தியத் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளை எழுப்பும்போது, மத்திய பிரதேசத்தில் கமல்நாத் பாகேஸ்வர் பாபா (திரேந்திரசாஸ்திரி) என்ற இந்து ராஷ்டிராவின் தீவிர ஆதரவாளரின் ஆசீர்வாதத்தை பெறுவதில் மும்முரமாக இருந்தார். அதேபோல அதானிமோடி கூட்டு என்னும் பிரச்சினை நிறுவனமயமாக்கப்பட்ட வெறும் ஊழலை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்த வில்லை; கார்ப்பரேட் தாக்குதலின் மிகவும் வெட்கக்கேடான வெளிப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. இந்த ஆணவமிக்க கார்ப்பரேட் அதிகாரத்திற்கு விவசாயிகள் இயக்கம் வெற்றி கரமாக சவால் விட்டது. மோடிஅதானி கூட்டுக்கு எதிரான எந்தவொரு திறன்மிக்க அரசியல் செயல்பாடும், மக்கள் நலன் மற்றும் இந்தியாவின் உண்மையான உற்பத்தியாளர்களின் உரிமைகள் நோக்கி இந்திய பொருளாதார கொள்கைகளை மறு திசைவழிபடுத்துதலுக்காக வளர்ந்து வரும் விவசாயி கள், தொழிலாளர்களின் ஒற்றுமையுடன் உயிரோட்ட மான பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் செயல்பாட்டில் இருந்த மற்றொரு பெரும் பலவீனம் என்பது இந்தியா கூட்டணியின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வ தற்கான விருப்பமோ திட்டமோ அதனிடம் முற்றிலும் இல்லாததாகும். இதற்கு மாறாக, மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முற்றிலும் தேவையற்ற சொற்போரை நாம் கண்டோம். தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் நீடித்த எதிர்ப்புணர்வை திறன்மிக்க வகையில் ஒருங்கிணைத்த காங்கிரஸ் அதனை குறிப்பிடத்தக்க வெற்றியாக்கியது. ஆனாலும் பாஜகவும் கூட, அதனுடைய வாக்குகளின் பங்கினை 7% திலிருந்து 13.9% என இரண்டு மடங்காக்கி, கடந்த சட்ட மன்றத்தில் தனக்கிருந்த ஒரேயொரு இடத்தை எட்டு இடங்களாக அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இடதுகள், சமாஜ்வாதி கட்சி, புதிதாக உருவாக்கப்பட்ட பாரதிய பழங்குடியினர் கட்சி மற்றும் இந்தியா கூட்டணியின் ஆற்றலையும் காங்கிரஸ் தனது தேர்தல் இயக்கத்தில் ஒருங்கிணைத்திருந்தால் அனைத்து மாநிலங் களிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நிகழ்த்தி யிருக்கலாம். மேலும் தெலுங்கானாவில் இன்னும் கூடுதலாக அதன் எண்ணிக்கையை அதிகரித்திருக்கலாம்.

பல நேரங்களில் இந்தியத் தேர்தல் முடிவுகளில் வடக்கு தெற்கு பிரிவினை உள்ளது. மிகவும் குறிப்பாக, தென் மாநிலங்களில் ஓரளவு சிறப்பான நிலையை காங்கிரஸ் பெற்றபோதும் வட இந்தியாவிலிருந்து அது துடைத்தெறியப்பட்ட அவசர நிலைக்கு பிந்தைய தேர்தலில் இந்தக் கூர்மையான மாறுபாட்டினை நாம் கண்டோம். இந்தியாவைப் பல பத்தாண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்த கனவு காணும் பாஜகவிற்கு தெற்கின் - கதவுகள் மூடப்படுவது நிச்சயமாக ஒரு பெருத்த அடியாகும். ஆனால் 2024 இல் அந்தக் கட்சியை தீர்மானகரமாக தோற்கடிக்க வேண்டுமானால், விந்திய மலைகளுக்கு வடக்கில் அதற்கு உருவம் - கொடுத்தாக வேண்டும். மிசோராம் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிசோ தேசிய முன்னணியை (எம்என்எஃப்) ஆட்சியிலிருந்து அகற்றி, சோராம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்) பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இங்கேயும் கூட, காங்கிரசின் எண்ணிக்கை 5 திலிருந்து 1 ஆக குறைந்து விட்டபோது பாஜக அதன் எண்ணிக் கையை 1 லிருந்து 2 ஆக அதிகரித்திருக்கிறது.

2023 இன் இறுதிச்சுற்றுத் தேர்தல்கள் நிச்சயமாக பாஜகவிற்கு பெரும் மனவலிமை தருவதற்கான உத்வேகமாகும். மேலும் மோடி அரசாட்சி 2024 இல் 'ஹாட் ட்ரிக்' (மூன்று தொடர் வெற்றிகள்) வெற்றிகள் பெறுவது குறித்து ஏற்கனவே பேச ஆரம்பித்து விட்டது. இது உளவியல் சார்ந்த போர்முறையன்றி -வேறல்ல. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மக்களவை அடிப்படையில் பார்த்தோமானால் காங்கிரஸ் அதன் எண்ணிக்கையை 2019இன் 6லிருந்து 28ஆக உண்மையில் அதிகரித் - துள்ளது. பாஜகவின் எண்ணிக்கை உண்மை யில் 65 லிருந்து 46 ஆக குறைந்துள்ளது. இந்தச் சட்டமன்ற தேர்தல்கள் 2024இன் முடிவுகளை நிச்சயமாக பாஜகவிற்கு சாதகமாகத் தீர்மானிக்க வில்லை. நாம் பொருத்தமான பாடங்களைப் பெற்றுக் கொண்டால் 2024இல் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது முற்றிலும் சாத்தியமே. நிச்சயமாக இந்தப் பொறுப்பு இந்தியா கூட்டணி மீதே உள்ளது. மேலும் எந்தவொரு தாமதமும் இல்லாமல் தனது செயல்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, 2024இல் ஒரு தீர்மானகரமான வெற்றியை நோக்கி மக்களிடம் தூண்டுதலை ஏற்படுத்த, அன்றன்றைக்குள்ள பற்றியெரியும் பிரச்சினைகள் மீது ஆற்றல்மிகு வெகுமக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.