இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 74வது ஆண்டு விழா 25 ஜனவரி 2024 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் தேசிய வாக்காளர் நாளாக தற்போது கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்முகம் கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட ஒரு அரசிய லமைப்புச் சட்ட நிறுவனம் என்ற முறையில், அதன் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல் முறையின் மீதான மதிப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பைச் சார்ந்தது. ஆனால், இந்த விசயத்தில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றது. வாக்காளர் சரிபார்த்த வாக்குத் தாள் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டும் என்று கோரி, இந்தியா கூட்டணியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கச் சென்ற போது, தேர்தல் ஆணையம் சந்திக்க மறுத்துவிட்டது. இது தேர்தல் முறையின் நேர்மை குறித்த வாக்காளர்களின் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்து விட்டது.
உலக அளவில் பார்த்தால், மின்னணு வாக்கு எந்திரம் (இவிஎம்) மூலமாக மட்டுமே வாக்களிக்கும் தேர்தல் முறை நிலவும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாக்குப் பதிவு வேலையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வயதானவர்கள் போன்ற, வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத வர்கள் மட்டுமே தபாலில் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள். வாக்களர்கள் யாருக்கு வாக் களிக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்பதை உத்தரவாதம் செய்வது எனும் அடிப்படை உரிமை, எந்திரத்தால் மறுக்கப்படுகிறது என்னும் உண்மையை, பத்தாண்டுகளுக்கு முன்னால் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டுள்ளது. வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு மின்னணு எந்திரத்தோடும் வாக்காளர் தமது வாக்கை சரிபார்க்கத் தக்க வாக்குச் சீட்டு எந்திரங்களை இணைப்பதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. அவ்வாறு வாக்காளர்கள் தமது வாக்குகளை சரிபார்க்கும் வாய்ப்பை உண்மையில் கொடுக்கவில்லை என்றால் அந்த எந்திரத்தால் பயன் என்ன? அப்படி சரிபார்க்கப்பட்ட வாக்குகளை எண்ணவில்லை என்றால் அதனால் பயன் என்ன?
சமீபத்தில், சில குறிப்பிட்ட சின்னங்களுக்கு வாக்குகள் "மாற்றப்படுகின்றன" எனும் புகார்களும் சந்தேகங்களும் எழுந்த வண்ணமாக உள்ளன. இவ்வாறாக, தொழில்நுட்ப தகிடுதத்தத்தின் மூலம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுகின்றன. வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டு முறை அறிமுகப் படுத்தப்படுவது வரையிலும், மின்னணு வாக்கு எந்திரம் நம்பத்தக்கதல்ல என்று பிஜேபி உரக்கக் கூவி வந்தது. மோடி முதல் அத்வானி வரையிலான சீனியர் பிஜேபி தலைவர்கள் மின்னணு வாக்கு எந்திரங்களால் ஜனநாயகம் சாகடிக்கப்படுகிறது என அப்போது பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது அவர்கள் மின்னணு வாக்கு எந்திரங்களின் வலுவான ஆதரவாளர்களாக ஆகிவிட்டார்கள். வாக்காளர்களின் புகார்களையும் வலுவான சந்தேகங் களையும் தீர்த்திட, வாக்காளர்கள் சரிபார்த்த வாக்குச் சீட்டுகளை எண்ணுவது எனும் கருத்தை நிராகரிக்கிறார்கள். வாக்காளர்கள் தமது வாக்கு களைச் சரிபார்க்கும் வாய்ப்பைப் பெற வேண்டும்; பழைய வாக்குச் சீட்டுகளுக்கு பதிலீடாக சரிபார்த்த வாக்குச் சீட்டுகள் கருதப்பட வேண்டும்; வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுகளே வாக்கு எண்ணிக்கைக் கான ஆதாரமாக கொள்ளப்பட வேண்டும் என்பதைத்தான் இந்தியா கூட்டணி ஆலோசனையாக முன்வைத்தது.
அத்தகைய வாக்கு எண்ணிக்கைக்கு மிக அதிக நேரம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வரையிலும், வாக்குச் சீட்டு எண்ணப்படும் வரை காத்திருந்து பழக்கப் பட்டிருக்கிறோம். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரைசி வாதிட்டது போல, முந்தைய தேர்தல்களில் எண்ணப்பட்ட, பல வேட்பாளர் வாக்குச் சீட்டுகளை விட, வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுக்களை எண்ணுவதற்கு ஆகும் நேரம் குறைவே. இறுதியில், எந்தவொரு தேர்தல் முறைக்கும் சோதனை, வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான். வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப் பட்டதே வாக்காளர் மனங்களில் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகத்தான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற இந்தியா கூட்டணியின் பரந்த வாக்களர்களும் கட்சிகளும் வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுகளையே எண்ண வேண்டும் என கோரிக்கை விடுக்கும் போது, அத்தகைய பொது மக்கள் கோரிக்கையை மறுத்திட தேர்தல் ஆணையத்திற்கு காரணம் ஏதும் இருக்கவே முடியாது.
சர்வதேச அளவில் இந்தியா இன்னமும் ஒரு செயல்படக்கூடிய ஜனநாயக நாடாக, அதில் என்ன தான் குறைபாடுகளும் வரம்புகளும் இருந்தாலும், அங்கீகரிக்கப்படுகிறது என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவின் தேர்தல் முறை குறித்த ஒட்டுமொத்தமானதோர் மதிப்பு ஆகும். ஆனால், இப்போது, அரசியலமைப்புச் சட்ட அஸ்திவாரம் மற்றும் நிறுவனமயப்பட்ட ஜனநாயக சட்டகம் (கருதுகோள்) ஆகியவற்றோடு கூடவே தேர்தல் முறை மீதான மதிப்பும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்தும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையற்றதாக, தான்தோன்றித் தனமானதாக இருக்கின்றன. தேர்தல் நிதி பத்திரங்கள் எனும் ஒரு இருண்ட முறையின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் வழங்கும் தேர்தல் நிதி குறித்து முழுமையான ரகசியம் கடைபிடிக்கப் படுகிறது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி பத்திரங்கள் வழங்குவோரின் மூலத்தையும் அடையாளத்தையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதில் அரசு தனது முழு கட்டுப்பாட்டை இப்போது நிலைநாட்டியுள்ளது. "ஒரே தேசம், ஒரே தேர்தல்" எனும் ஒரு சந்தேகத்திற்குரிய முழக்கத்தின் மூலம் அனைத்துத் தேர்தல் களையும் ஒரே நேரத்தில் நடத்திட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தயாராகி விட்டது.
இந்தியக் குடியரசு 75வது ஆண்டை எட்டும் இந்தத் தருணத்தில், மக்களை வாக்குரிமையற்றவர் களாக்கும் அச்சுறுத்தலில் இருந்து, அதிகரித்து வரும் அனைத்தும் தழுவிய நெருக்கடியிலிருந்து இந்தியத் தேர்தல் முறையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தத் தேர்தல் முறையைப் பாது காத்திட இந்திய வழக்கறிஞர் சமூகம் ஆர்வம் காட்டுவது உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. தேர்தல் தகிடுதத்தங்கள் குறித்து அதிகரித்து வரும் சந்தேகங்களை நீக்கிட, இது வரையிலும் மின்னணு வாக்கு எந்திரங்களை வலுவாக ஆதரித்து வந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவராவது, வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் எனும் கோரிக்கையை ஆதரிப்பதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. தற்போதைய 'மின்னணு எந்திரம் வாக்காளர் சரிபார்த்த வாக்குச் சீட்டு' முறை மூலம் எப்படி ஏமாற்ற முடியும் என்பதை, உச்சநீதிமன்ற - மூத்த நீதிபதிகள் சிலர், டெல்லியில் நடைமுறையில் செய்து காட்டி அதை அம்பலப்படுத்தினார்கள். "சுதந்திரமான, நியாயமான தேர்தல்” முறை என்கிற கூற்றை அறுதியிடுகிற பொறுப்பு, தேர்தல் முறையின் நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மை குறித்து இந்திய வாக்காளர்களுக்கு மறு உத்தரவாதம் வழங்கும் பொறுப்பு, ஒட்டுமொத்த தேர்தலையும் மேற்பார்வையிடும் அரசியலமைப்புச் சட்ட நிறுவனம் என்கிற முறையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)