அயோத்தியாவில் ராமர் கோவில் திறக்கப்படும் ஒரு மத நிகழ்வை, "நாகரீகத்தின் வெற்றி; தேசத்தின் வெற்றி” என்றெல்லாம் தம்பட்டம் அடித்து, பிஜேபி-ஆர்எஸ்எஸ் பரப்புரையை மேலும் வெற்றியடையச் செய்திட, தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளும் ஊதுகுழல் ஊடகங்களும் அரசு எந்திரமும் கரம் கோர்த்து மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கின்றன. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை 24 மணி நேரம் தொலைக்காட்சியில் காட்டுவது முதல் ராமர் கோவில் திறப்பையே மையப் பொருளாகக் கொண்ட பத்திரிக்கைகள், ஸ்டுடியோக்கள் வரை பெரும்பான்மை ஊடகங்கள் அனைத்தும் மோடி அரசின் பேசு பொருளை ஒரு பொதுப்புத்தியாக, ஒரு பொது உணர்வாக மாற்றிட, மக்கள் மண்டைக்குள் ஓட்டை போட்டு அதனைத் திணித்திட அனைத்து விதமான முயற்சிகளையும் செய்தன. ஆனால், சில ஊடகங்கள், வரலாற்றைத் துடைத்தெறியும் அந்த வேலையை, "கடவுளே நாடு; ராமரே தேசம்" என மாற்றத் துடிக்கும் மோடியின் வேலையைச் செய்ய மறுத்து விட்டன. ஜனவரி 22 நாட்டின் மீது ஏற்படுத்தியிருக்கும் பேரழிவுமிக்க தாக்கம், இந்திய மக்கள், இந்திய ஜனநாயகம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீது 2024ன் தாக்கம் பற்றி எச்சரிக்கும் ஆங்கில பத்திரிக்கைகள் சிலவற்றின் தலையங்கங்கள் மற்றும் கருத்துக்களை 'மாலெ தீப்பொறி' இங்கு உங்களோடு பகிர்கிறது.
ஜனவரி 22ஐ சாத்தியமாக்கிய துடைத்தெறிவுகள் மற்றும் 1992 டிசம்பர் 6 பற்றிய கூட்டு மறதிகள்
சுஹாஸ் பல்ஷிகர், இந்தியன் எக்ஸ்பிரஸ் 23 ஜனவரி 2024
அயோத்தியாவில் ஒரு புதிய கோவில் திறக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுத் தவறுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு புதிய கோவில் திறக்கப்பட்டதன் மூலம் ஒரு புதிய ராமர் உருவாக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஊரில் பேசப்படுவது ஆழ்ந்த பக்தி பற்றியோ அல்லது கடவுள் நம்பிக்கை பற்றியோ அல்ல, மாறாக, அது அந்தக் குறிப்பிட்ட தருணத்தின் மகத்துவமான தன்மை பற்றியதாக இருக்கிறது.
உண்மையில் பன்மைத்துவ உணர்வு மறுக்கப் படவில்லை. இன்னும் சொல்லப்போனால், சில நேரங்களில் அது, மேலோட்டமாகத்தான் என்றாலும் மிக சத்தமாக தம்பட்டமடிக்கப்படுகிறது. ஆனாலும் அது பேயை அடிப்பது போல அடித்து விரட்டப் படுகிறது. அதன் மூலம் அத்தகைய பன்மைத்துவ உணர்வு அழிக்கப்பட்டவுடன், ஒருமைத்தன்மையை தானாகவே உயர்த்திப் பிடிக்கும் ஒரு கூட்டு மனோபாவத்தை உருவாக்குவது எளிதாகிறது. அது மாற்றுக் கருத்துக்கள் அக்கம்பக்கமாக நிலவ முடியுமா என்கிற சந்தேகங்களைக் கிளப்புகிறது. ஒத்திசைவு சாத்தியமா என கேள்வி கேட்கிறது. அம்பேத்கரின் "இந்துயிசத்தின் புதிர்கள்” போன்ற விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதை இன்று கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடிய வில்லை. காந்தி சொன்ன ராமரிலிருந்து வெகு தொலைவு சென்று விட்டோம்.
1992 டிசம்பர் 6 பற்றிய கூட்டு மறதி
அன்றைய தினம் யாரும் எந்த மசூதியையும் இடிக்கவில்லை. அந்த விதத்தில், புதிய கோவில் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அது இந்த சமூகத்தை அல்லது ஒரு குழுவை அல்லது அந்த கிரிமினல்தனமான மசூதி இடிப்பில் ஈடுபட்ட ஒரு கட்சியை அந்த குற்றத்திலிருந்து வெறுமனே விடுவிப்பது மட்டுமல்ல, அத்தகைய ஒரு நிகழ்வு குறித்த உண்மை விபரங்களையே வரலாற்றிலிருந்து துடைத்தெறிகிறது. அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் வேண்டும் என விரும்பினாலும் கூட, தவறு நடந்துவிட்டது என்பது போன்றதொரு உணர்வு, குற்ற உணர்வு இந்துக்கள் மத்தியில் 1992க்குப் பிறகு 1996 வரையிலும் கூட இருந்தது என பொதுக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. ஆனால், காலப்போக்கில் அந்தக் குற்ற உணர்வு மென்மையாகின்ற விதத்தில், குற்றம் மன்னிக்கப் படும் விதத்தில் நமது 'அரசியல்' அதை கவனித்துக் கொண்டது. ஆனால், அந்த குற்ற உணர்வைப் போக்குவதில் பாத்திரம் வகித்த திறன்மிக்கதோர் கருவி என்றால் அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான். கோவில் கட்ட அனுமதி வழங்கியதன் மூலம் அது வரையில் அரசியல்ரீதியாக சமாளிக்கப்பட்டு வந்த ஒரு பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் ஒரு அதிகாரபூர்வ அங்கீகார முத்திரை குத்திவிட்டது. கோவிலை இன்று ஆதரிப்பவர்களைப் பொறுத்த அளவில், கோவில் கட்டுவதில் சட்டப்படி தவறேதும் இல்லை. உயர்மட்ட நீதிமன்றம் கோவில் கட்ட அனுமதித்தது மட்டுமல்ல, அதைச் செய்து முடிப்பதற்கான வழிமுறையையும் அதாவது ஒரு தனி அறக்கட்டளை அமைப்பது எனும் வழிமுறையையும் ஆலோசனை யாக வழங்கியது.
புதிய சகாப்தம்:
நாட்டின் மீது ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் தாக்கம் குறித்த தலையங்கம் (தி டெலிகிராப், 23 ஜனவரி 2024)
...அதன் விளைவாக கொடுக்கப்பட வேண்டிய சமூக விலை குறித்து, அதாவது நாட்டு அரசியலில் அது பெருமளவு மதவெறி நோயைக் கலப்பது குறித்து, பிஜேபிக்கோ மதவெறி எனும் பேய்க்கோ எந்தக் கவலையும் கிடையாது. ஒரு அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகத்தில் அவசியமற்றது என கருதப்படும் விதத்திலான தலையீடுகளிலிருந்தும் கூட குடிமை வாழ்விற்கு இனி எந்தப் பாதுகாப்பும் கிடையாது. ஒரு தனியார் அறக்கட்டளை நடத்திய ஒரு கும்பாபிஷேக விழாவுக்காக பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு இறையாட்சி (தியோக்ரசி) கண்ணுக்குத் தெரிகிறது என்றால், அல்லது குறைந்தபட்சம், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்னராட்சி கண்ணுக்குத் தெரிகிறது என்றால் அது வெறும் மாயை என புறந்தள்ளிவிட முடியாது. ஒரு ஜனநாயகத்தின் மீது, பன்மைத்துவத்தின் மீது, 2014 முதல் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் மீது இதன் தாக்கம் என்ன என்பதன் கீற்றுகள் காணக் கிடைக்கின்றன. பெருத்த அவதூறுக்கு உள்ளான மதச்சார்பின்மை மீதான அதன் தாக்கம் என்ன? மதச்சார்பின்மை எனும் அரசிய லமைப்புச் சட்ட கோட்பாடு, பன்மைத்துவத்தோடு சேர்ந்து உயிரற்றுக் கிடக்கிறது. காலம் இருண்ட காலமாக இருக்கலாம்.ஆனாலும், இந்திய நாட்டுடனான மதச்சார்பின்மையின் நெருக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான தருணமாகவும் அது இருக்கலாம்.
ராமர் கோவில் திறப்பு இந்திய சிறுபான்மையினருக்கு எதிரான அபாயகரமானதோர்முன்னுதாரணம்
[வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்புகள் கையெழுத்திட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் சில பகுதிகள்]
பிரதமர் மோடியும், பிஜேபி தலைவர்களும், ஆர் எஸ் எஸ் ஜாம்பவான்களும் திட்டமிட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம், இந்தியாவில், ஆர் எஸ் எஸ் நோக்கமான, இந்து ராஷ்ட்ராவை அமைப்பதற்கு நெருக்கமாக சென்றுவிட்டதைக் குறிப்பதாக இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு, அதனிடத்தில், தலித்துகளுக்கு எதிரான, ஆணாதிக்கத்தனமான, வன்முறைமிக்க பிராமணீயத்தின் புராதன இந்து விதிகளான மனு ஸ்மிருதியைக் கொண்டுவரும் அவர்களின் நோக்கத் தைக் குறிப்பதாக இருக்கிறது. அது மட்டுமல்ல, பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக இந்துத்துவாவே இருக்கும் என்பதையும் குறிப்பதாக இருக்கிறது.
பாபர் மசூதியை ஆக்கிரமித்தது போல, இந்து தேசியவாத ஆயுதக் கிடங்கின் ஒரு ஆயுதம்தான் முஸ்லீம் மத வழிபாட்டுத் தலங்களை தமதாக்கிக் கொள்வது ஆகும். பாபர் மசூதி குறித்த 2019 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, அது போன்ற, இந்தியாவிலுள்ள வேறு பல முஸ்லீம் வழிபாட்டுத் தலங்கள் மீது அவர்கள் உரிமை கொண்டாடுவதற்கும், அதற்காக நன்கு திட்டமிடப்பட்ட பரப்புரையை இந்து மேலாதிக்கவாதிகள் நடத்திடுவதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது. உத்தரபிரதேச மதுரா நகரில் ஷாகி இத்கா மசூதி இருக்கும் இடம், இந்துக் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமா என்பது குறித்த ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதே போல, உத்தர பிரதேச வாரனாசியிலும் (காசியிலும்), ஆளும் பிஜேபி கட்சியோடு சம்பந்தப்பட்ட இந்துக் குழுக்களால் க்யான்வாப்பி மசூதி உரிமை கொண் டாடப்படுகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த மசூதிகள் குறித்த சட்ட ரீதியான உரிமை கொண்டாடல்களை, உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள், அனுமதிப் பதன் மூலம் அத்தகைய மசூதிகளைக் கையகப் படுத்தும் முயற்சிகளுக்குத் துணை போகின்றன . பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களின் மதத் தன்மையைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட, 1992 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை சட்டரீதியாக கேள்விக்குள்ளாக்கு வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)