கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக இந்தத் தேர்தலில் தனி அணியாக போட்டியிடுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக  கூட்டணியிலிருந்து விலகியதற்கு அதிமுக சொல்லும் காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இழிவுபடுத்தி பேசிவிட்டார் என்பதுதான். இது உண்மை என்றால், பல்லடம் பொதுக்கூட்டத்தில் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்போ, உண்மைக் காரணம் வேறுதானே.

2014 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர மோடி எவ்வளவோ முயன்றும் லேடி ஜெயலலிதா அதை ஏற்கவில்லை. தனித்து நின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கடிவாளம் மோடி கைகளில் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள, பாஜக ஆட்டியபடியெல்லாம் பழனிச்சாமி அடிபணிந்தார்; ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தார். ஜெயலலிதா ஏற்க மறுத்த மோடி அரசின் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் அதிமுக ஆதரவளித்தது. விளைவாக, கோபம் கொண்ட தமிழ்நாட்டு மக்கள், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுகவுக்கு தொடர் தோல்வியை பரிசளித்தனர்.

அதிமுகவின் எதிர்காலம், தனது அரசியல் வருங்காலம் (2026 சட்டப்பேரவைத் தேர்தல்) இவற்றை கணக்கில் கொண்டு எடப்பாடி பாஜகவிடமிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். அதிமுகவுக்குள் இருந்த ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை வெளியேற்றிவிட்டு தனது ‘ஒற்றைத் தலைமை’யின் கீழ் அதிமுகவை கைவசப்படுத்திக் கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை அரசியல் சக்தியாக நிறுத்திட, “வாக்குகள் பெற பாஜகவுடன் கூட்டணி உதவாது. கட்சி கரைந்து போகலாம்” என்பதை உணர்ந்து தனி அணி முடிவை எடுத்துள்ளார். மெகா கூட்டணி பற்றி பேசிவந்தவர், தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஅய் கட்சிகளுடன் பயணத்தை நடத்த வேண்டியதாகிவிட்டது.

54 பக்கங்களில் 133 வாக்குறுதிகளையும் அதற்குள் ஏராளமான துணை வாக்குறுதிகளையும் அதிமுக தேர்தல் அறிக்கை அள்ளி அள்ளி வீசுகிறது. பல வாக்குறுதிகள் திமுகவின் வாக்குறுதிகளை ஒத்திருக்கிறது. ஆளுநர் நியமனம், நீட் தேர்வு, வழக்காடு மொழியாக தமிழ், குடியுரிமை திருத்தச் சட்டம், மாநிலப் பட்டியலில் கல்வி, புதிய கல்விக்கொள்கை தொடர்பான பல வாக்குறுதிகளும் உள்ளன. இதன் மூலம், மாநில மக்கள் நலன் பேணும், திமுகவுக்கு ஒரு மாற்று ’திராவிடக் கட்சி’ அதிமுக எனும் தோற்றத்தை ஏற்படுத்த, மக்களை நம்பவைக்க, அதிமுக படாத பாடுபடுகிறது! வாக்குறுதி எண்கள் 62, 63ல், தமிழ்நாட்டில் ரயில்வே தொடர்பான 46 திட்டங்களைப் பட்டியலிடுகிறது. ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 3000 உதவித்தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் மாதம் ரூ.5000 போன்ற பல நலத்திட்ட வாக்குறுதிகளையும் வாரி வாரி வழங்குகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை. இந்த கோரிக்கைகளுக்காக குரல்கொடுக்க, மத்திய அரசை வலியுறுத்த, நிறைவேற்றச்செய்யப் பாடுபடும் என தேர்தல் அறிக்கை வாக்குறுதி தருகிறது.

 

மேற்கண்ட வாக்குறுதிகளை பாஜக ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி செய்துதர அய்ந்தாண்டு காலம் வாய்ப்பிருந்தது. இந்த 133 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட வலியுறுத்தி ஏன் நிறைவேற்றவில்லை என்பதே தமிழ்நாட்டு வாக்காளர்களின் கேள்வி. மாறாக பாஜக சொன்னதையெல்லாம் கேட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனை! விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரித்தது. ஓராண்டுக்கு மேலாகப் போராடி 600 பேர்களுக்கு மேலாக உயிரிழந்த விவசாயப் போராட்டத்தை அதிமுக ஆதரிக்கவில்லை. பாஜக அரசின் துணையுடன் சேலம் எட்டுவழிச்சாலை மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்க, கொடூரமான அடக்குமுறையை ஏவியது. வேதாந்தா முதலாளிக்காக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியது அதிமுக ஆட்சி. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதிசெய்துள்ளதை திமுக வரவேற்றுள்ளது. ஆனால் அதிமுக கருத்து எதுவும் கூறவில்லை. தேர்தல் அறிக்கையும் அதுபற்றி பேசவில்லை. காஷ்மீருக்கு தனியுரிமை வழங்கும் அரசமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி நவநீதகிருக்ஷ்ணன் எம்.ஜி.ஆர். பட பாடலைப் பாடி கொண்டாடினார். 

மோடி ஆட்சி கொண்டுவந்துள்ள குற்றவியல் சட்டங்கள் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுவதையே தேர்தல் அறிக்கை விமர்சிக்கிறது. கொடூரமான போலீஸ் சர்வாதிகாரத்தைக் கொண்டுவருகிற அந்த சட்டத்தை முழுவதுமாக எதிர்க்கவில்லை. போலீஸ் ஆட்சிக்கு பெயர்பெற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் பழனிச்சாமி இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை என்று தெரிகிறது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி அதிமுக என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 


குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக, ஒன்றிய அரசு அறிவித்துள்ள பின்னணியில், தேர்தல் அறிக்கையின் 133 வது வாக்குறுதி இந்தச் சட்டம், மத, மொழி பாகுபாடு பார்ப்பதாகச் சொல்கிறது. பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை பற்றியெல்லாம் கூட பேசுகிறது. இஸ்லாமியர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் நட்பு முகம் காட்ட நினைக்கும் அதிமுக, இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் இதில் இணைக்க வேண்டுமென்று கூறுகிறது. ஆனால், பழனிச்சாமி உத்தரவின்படிதான், இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தில் அதிமுக வாக்களித்தது. எதிர்த்து வாக்களித்திருந்தால், இதுவரை தலைமேல் தொங்கிக் கொண்டிருந்த இந்தச் சட்டம் தேர்தல் சமயத்தில் தலையில் விழுந்திருக்காது. மதச்சார்பின்மைக்கும் கூட்டாட்சிக்கும் பன்முகத்தன்மைக்கும் அதிமுக பெரும் துரோகம் செய்துள்ளது. தேர்தலில் தனி அணியாக நின்று மக்கள் வாக்குகளைப் பெற்று தனது துரோகங்களைத் துடைத்தெறிந்து எழுந்து விடலாம் என்று எண்ணினால் அது நடக்காது. தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவை மன்னிக்கமாட்டார்கள்.

ஏற்கனவே அதிமுக போலவே பாஜகவுடன் கூட்டணி கண்டிருந்த தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதனிடமிருந்து விலகி வந்துள்ளன. தனது வாக்கு அடித்தளத்தையும் செல்வாக்கையும் கூட்டணிக்கு விலையாக கொடுத்த இக்கட்சிகள், பாஜகவின் உக்கிரமான இழுப்புகளை ஒதுக்கிவிட்டு வந்திருப்பதின் உண்மையான நோக்கம் என்ன?  அதிமுக கூட்டணி, தமிழக மக்களுக்கும் முற்போக்கான தமிழ்நாட்டின் போராட்ட மரபுகளுக்கும் உண்மையிலேயே நேர்மையாக இருக்குமா?அதிமுக,  பாஜக- பாமக கூட்டணியை தாக்காமல் திமுகவை குறிவைத்து பேசுவதனாலேயே இந்த கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில். பாஜக கூட்டணியை எதிர்ப்பதே பிரதானமாக இருக்க  வேண்டும். அந்த பாதையைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தேசத்துக்கும் அரசமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் பேரழிவுமிக்க அச்சுறுத்தலான பாஜக - பாமக கூட்டணியைத் தோற்கடிக்க முடிவுசெய்துள்ள வாக்காளர்கள், சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணியையும் நிராகரிப்பார்கள்; நிச்சயம் தோற்கடிப்பார்கள். “தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்” என்று அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது. யாரிடமிருந்து என்ற கேள்விக்கு அமைதி காக்கிறது. இது அமைதி அல்ல, சந்தர்ப்பவாதம்.