மேடையில் இருக்கும் தலைவர்களே! தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜெய் பீம்! லால் சலாம்!!
சில நாட்களுக்கு முன்பு ஜனவரி 26, அன்று திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநாட்டில் பாசிச சக்திகளை தோற்கடிப்பதற்கான தமிழக மக்களின் மிகப்பெரிய உறுதியைக் கண்டேன். அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலுள்ள இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் தலைவர்களது நம்பிக்கையூட்டும் ஒற்றுமையை கண்டேன். இன்று பிப்ரவரி 1ல், அதே போன்றதொரு ஒற்றுமையை உறுதிப்பாட்டை தஞ்சாவூரில் காண்கி றேன். பாசிச சக்திகளுக்கு எதிரான அகில இந்திய அளவிலான எதிர்ப்பில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக விளங்குகிறது. உங்களது ஒற்றுமைக்கு, உறுதிப்பாட்டுக்கு, உங்களது போராட்டங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அந்த பட்ஜெட்டில் திரும்பத் திரும்ப இரண்டு வார்த்தைகள் வருகின்றன. அவை ஒன்று பிரதம மந்திரி, இன்னொன்று வரி. இந்த இரண்டு வார்த்தை களை அவர் 42 முறை உச்சரித்திருக்கிறார். அதே சமயம் வேறு இரண்டு முக்கியமான வார்த்தைகள் பட்ஜெட்டில் காணாமல் போய்விட்டன. காணாமல் போன அந்த இரண்டு வார்த்தைகள், வேலை மற்றும் வேலை வாய்ப்பு. பாஜகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட் வரிகள் கடுமையாக குறைக்கப்பட்டிருக் கின்றன. மிகப் பெரும் செல்வந்தர்களுக்கு பெரும் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. சாமானிய மக்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் வரி வசூலிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவரப் பட்டு எல்லா பொருட்களின் மீதும் வரி விதிக்கப்பட்டி ருக்கிறது. பணக்காரர்கள் மீது வரி விதித்து ஏழைகளுக்கு சலுகைகள் வழங்குவது தான் ஒரு ஏழைகள் ஆதரவு அரசின், மக்கள் ஆதரவு அரசின் திட்டமாக இருக்க முடியும். ஆனால், இவர்கள் மக்கள் மீது பெரும் வரிச் சுமையை சுமத்தி இருக்கிறார்கள். மிகப்பெரும் செல்வந்தர்கள் பெற்ற பெருமளவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. பட்ஜெட்டை பொருத்தவரை அது அதானி, அம்பானி போன்றவர்களுக்கான பட்ஜெட். கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். இவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கும் பட்ஜெட்டாக இருக்கிறது. இந்தியாவின் கடன் 2014 க்கும் 2024 க்கும் இடைப்பட்ட காலங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் கடன், கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) இணையானதாக இருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி வந்ததை நாம் பார்த்தோம். இந்தியாவின் நிலையும் கிட்டத்தட்ட அது போன்றதொரு நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய நிலையில் இருக்கிறது.
2004 வரை இருந்த வாஜ்பாய் அத்வானி அரசாங்கம் 'இந்தியா ஒளிர்கிறது' என்று சொன்னார்கள். இப்போது மோடி-அமித்ஷா-சீதாராமன் அதிகாரத்தில் இருக்கக்கூடிய இந்த அரசாங்கம், மக்களுக்கு 'நல்ல நாள்' மகிழ்ச்சியான காலம் வந்துவிட்டதாக கூறிவருகிறார் கள். பட்ஜட் கூட்டத்தொடருக்கு முன், இந்திய ரிசர்வ் வங்கி மக்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார நிலமை பற்றி பல தரப்பட்ட பிரிவு மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். மாதத்திற்கு ரூ 50,000 ஊதியம் பெறுபவர்களில் 46% பேரும் மாதத்திற்கு ஒரு லட்சம் ஊதியம் பெறுபவர்களில் 55% பேரும் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். மாதம் ரூபாய் 5000 ஊதியம் பெறும் வறிய மக்களில் 62% பேரும் மாதம் ரூபாய் 10,000 ஊதியம் பெறுபவர்களில் 50% பேரும் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
இந்தியாவில் எத்தனை பேர் ஏழைகள்? ஏற்கனவே ஏழைகள் ஏராளமாக இருந்தனர்; அவர்களெல்லாம் இப்போது ஏழைகள் இல்லையென்று மோடி அரசாங்கம் கூறுகிறது. நிதி ஆயோக் சில கற்பனையான, பொய்யான, விவரங்களை கூறுகிறது. பீகாரில் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்தபோது அங்கு சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவல்படி 34 சதவீத குடும்பங்கள் மாதம் 6000க்கு குறைவாக ஊதியம் பெறும் குடும்பங்களாக உள்ளன. 30 சத குடும்பங்கள் மாதம் 10,000க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்களாக உள்ளன. இதன்படி, பீகாரில் கிட்டத்தட்ட 65 சதவீத குடும்பங்கள் வறுமையில் வாழும் குடும்பங்களாக உள்ளன. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் மூன்றில் இரண்டு குடும்பங்கள் வறுமையில் உள்ளன. தமிழ்நாட்டு நிலைமை இதைவிட கொஞ்சம் முன்னேறியதாக, இருக்கலாம். இந்தியாவின் பொருளாதாரம் மோசமானதொரு நெருக்கடியில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து பிரிவினரும் விவசாயிகள், தொழிலாளர், இளைஞர், மாணவர், பெண்கள், சிறு தொழில் முனைவோர், கடை வைத்து வியாபாரம் நடத்துவோர் எல்லோருமே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர்.
நம்முடைய ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் எந்த அளவுக்கு தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி திருச்சி விசிக மாநாட்டில் பேசினோம். கடந்த ஒரு வார கால நிகழ்வுகள் அதை உறுதி செய்வதாக உள்ளன. பாஜக எப்பாடுபட்டாவது அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. கடந்த ஜனவரி 28 அன்று, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.பின்னர் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) முதலமைச்சராக ஒன்பதாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். நிதிஷ்குமார் சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பது உண்மைதான். அவர் அடிக்கடி அணி மாறி வருகிறார் என்பதும் உண்மைதான். ஆனால், அவரை விட படுமோசமான சந்தர்ப்பவாதியாக அமித்ஷா இருக்கிறார். எப்பாடுபட்டாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே இலட்சியம். இந்தியாவில் பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை அவர்கள் விரும்புவதில்லை. தமிழ்நாட்டின் திமுக அரசாங்கத்தை அவர்கள் விரும்ப வில்லை. இப்படித்தான் மகாராஷ்டிராவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி சிவசேனாவின் ஒரு பிரிவினருடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்தார்கள். இன்று, பிஹாரிலும் அதுதான் நடந்திருக்கிறது. நேற்றைய ஜார்கண்ட் நிகழ்வைப் பார்த்தாலும் தெரியும். அங்கு அமலாக்கத் துறையால் அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுக்கு முன்னதாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்சா சட்டப்பேரவை தலைவராக சம்பை சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில், சிபிஐ (எம்எல்) கட்சியின் ஒரே உறுப்பினர் தோழர் வினோத் சிங், ஜே எம் எம் க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இந்தியா கூட்டணியினர் எல்லோரும் இணைந்து அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் அங்கு மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரியிருக்கிறார்கள். ஆனால் அங்கு ஆளுநராக உள்ள தமிழ்நாட்டின் கோயம் புத்தூரைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், இதுவரை எந்தப்பதிலும் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். பீகாரில், பாஜக பக்கம் (என்டிஏ) தாவிய நிதிஷ்குமார், சில மணி நேரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக பதவி ஏற்க முடிகிறது. ஆனால், ஜார்கண்டில் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும், பதவி ஏற்புக்கு கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடவில்லை. ஏன் இந்த காலதாமதம்? அவர்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கிறார்களா? அல்லது குதிரை பேரம் செய்ய காலம் கடத்துகிறார்களா? அல்லது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் எண்ணம் உள்ளதா? என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை.
கடந்து போகிற ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் தொடுக்கும் நாட்களாக உள்ளன. அவர்கள் எதிர்க்கட்சிகள் மீது, ஜனநாயகத்தின் மீது, இந்திய கூட்டாட்சி மீது போர் தொடுத்துள்ளார்கள்.
அதற்கு மற்றுமொரு உதாரணம், சண்டிகர் மாநகர மேயர் தேர்தல். சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்குமாக சேர்த்து 20 மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளனர். பாஜகவுக்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர். அங்கு மேயர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாஜக தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர், வாக்கெடுப்பு முடிந்தவுடன் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எட்டு மாநகராட்சி கவுன்சில் உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கிறார். பாஜக வேட்பாளரை மேயராக வெற்றி பெற்றவராகவும் அறிவித்து விட்டார். அவர்கள் தேர்தலையே களவாடுகிறார்கள். வாக்கு இயந்திரம், விவிஐபேட் போன்றவை எல்லாம் இல்லாமல் கூட அவர்களால் தேர்தலையே களவாடமுடிகிறது.
2024 இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், இந்த முறை தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படாவிட்டால் எதிர்காலத் தில் இந்தியாவில் தேர்தல் நடக்குமா என்பதே சந்தேகம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அப்படிப்பட்ட தொரு அச்சுறுத்தல் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் அனைத்தும் தழுவியதாக, ஒவ்வொரு முனையிலும் உள்ளதாக இருக்கிறது. ஒரு காலனி ஆட்சி என்ற நிலைமைக்கு நம்மை தள்ள முயற்சிக்கிறார்கள். எனவே தான், ஒரு புதிய சுதந்திரப் போராட்ட இயக்கம் இன்றைய தேவையாக உள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆட்சியா ளருக்கு எதிராகப் போராடி பெற்ற சுதந்திரத்தின் பலன்களை குறிப்பாக ஜனநாயகத்தை, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. முதல் சுதந்திரப் போராட்டம் பல்வேறு உரிமைகளை நமக்கு பெற்றுத்தந்தது. அந்த உரிமைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தொழிலாளர்களால் கோரிக்கைகள் வைத்துப் போராட முடிகிறது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடி உடன்பாடு எட்ட முடிகிறது. அதேபோல் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவு மக்களும் உரிமைகளுக்கான போராட்டங்களை நடத்த முடிகிறது.
காலனிய ஆட்சியாளர்கள் எப்படி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டார்களோ, அதே போல பாசிசவாதிகளான இவர்களும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார்கள். சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் நுழைந்தசம்பவம் நடைபெற்றது. மொத்தத்தில் 6 பேர் இப்போது ஊஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்கள் சொன்ன விசயங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. சிறை கொட்டடியில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மின்சாரம் மூலம் அதிர்ச்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. வெற்று காகிதத்தில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களின் தூண்டுதலால்தான் இந்த சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதாக பொய்யான வாக்குமூலம் பெற்று ஒடுக்குமுறையை ஏவி விட திட்டங்கள் உள்ளதாக தெரிகிறது.
அவர்கள் இந்தியாவில் இந்து, முஸ்லீம் என்றும் வட இந்தியா, தென்னிந்தியா என்றும் சொல்லி பிளவை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை சீர்குலைத்து விட பாசிசசக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய சூழலில் நமது மேம்பட்ட ஒற்றுமையும்,தீவிர போராட்டங்களும் மிக அவசியமானதாக உள்ளது. தமிழ்நாடு கம்யூனிச இயக்கத்தின் செல்வாக்கு பெற்ற மாநிலமாக இருந்து வந்திருக்கிறது. இங்கு சாதி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்திருக் கின்றன. தமிழ்நாடு பெரியாரின் மண்ணாக இருக்கிறது. மூடநம்பிக்கைக்கு எதிரானது அவர் குரல். இங்கே நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் வலுவாக நடந்திருக்கின்றன. சாதிய வன்முறைகளுக்கு எதிராக வலுவான குரல் தமிழகத்தில் ஒலித்திருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டங்களை இன்னும் வளர்த் தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாடு தழுவிய போராட்டங்களாக நாம் அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும்.
இந்தச் சூழலில் தான் வரும் பிப்ரவரி 16, அன்று தொழிற்சாலை மற்றும் அரங்கவாரி வேலை நிறுத்தத் திற்கும் கிராமப்புற பந்த் நடத்தவும் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் அமைப்புகள், விவசாய தொழிலாளர் அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்திருக்கின்றன. தொழிற்சாலைகளில் அரங்கங்களில் வேலை நிறுத்தம் நடக்கிற அதே வேளை, விவசாய தொழிலாளர்களும் விவசாயிகளும் கிராமப்புற பந்த் நடத்தத் திட்ட மிட்டுள்ளனர். தொழிலாளர்களுடைய வேலை நிறுத்தத் தையும் கிராமப்புற பந்த் போராட்டத்தையும் நாம் வெற்றிகரமாக்கிட வேண்டும்.
தமிழ்நாட்டில் செங்கொடி போராட்ட மரபை உயர்த்திப் பிடித்து முன்னேறுவோம். தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான போராட்ட மரபை உயர்த்திப்பிடித்து முன்னேறுவோம். ஒற்றுமையை வலுப்படுத்துவோம். உறுதிப்படுத்துவோம். சமூக நீதி, மனித கவுரவம், சாதி ஒழிப்புக்காக, மதவாத வன்முறைக்கு எதிராக ஒன்று பட்ட போராட்டங்களை கட்டமைத்து முன்னேறுவது ஒன்று தான் நம்முன் இருக்கும் ஒரே வழியாகும்.
பாசிச சக்திகளை தோற்கடித்து முன்னேறுவோம்!
லால் சலாம்!
ஜெய் பீம்!
இன்குலாப் ஜிந்தாபாத்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)