மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்பட்ட பின்னர், பாஜகவின் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், 2019 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மோடி சொன்னார். வெற்றி பெற்றோம், இப்போது 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என மோடி கூறியிருக்கிறார். அது நடக்கும். ஆகவே, இது முடிவு அறிவிக்கப்பட்டபின் நடக்கும் தேர்தல் என்கிறார். பாசிச சங்கிகள் எதையும் செய்வார்கள் என்பதை இப்போது நடக்கின்ற சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. 

பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அடுத்து, வரி பாக்கி என ரூ.1823 கோடி அபராதமாகக் கட்ட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, ஏற்கனவே காங்கிரஸின் வங்கிக் கணக்கை முடக்கி ரூ.135 கோடியைப் பறிமுதல் செய்துள்ள, வருமான வரித்துறை. வருமான வரித்துறை விதி மீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின்படி ரூ.4600 கோடி பாஜகதான் கட்ட வேண்டும் என்கிறது காங்கிரஸ். 

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் உறுதிமொழிப் படிவம் முறையாகத் தாக்கல் செய்யப்படாததால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர். ஆனால், அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. இந்தியா கூட்டணி, எதிர்க்கட்சிகளின் சின்னங்களை முடக்கும் வேலையும் நடந்தது. வாக்கு எந்திரத்தின் நம்பகத் தன்மை பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன.  தேர்தல் சமயத்தில் மத்திய தேர்தல் ஆணையர் ஒருவர் பதவி விலகுகிறார்.  மறுநாளே, பிரதமர் மோடி புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்க, தொடர்ந்து தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம் யாருக்காகச் செயல்படும்? 

மோடி அரசு, நீதி நெறிமுறைகள், ஜனநாயகம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாது என்பதற்கு சமீபத்திய அதிர்ச்சி செய்தி. குடியுரிமைச் சட்டத்தின் படி இந்தியாவில் குடியுரிமை கோருபவர்களுக்கு உள்ளூர் கோவில் பூசாரி அல்லது அர்ச்சகரிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்கிறது. இது சட்ட அதிகார அமுலாக்கக் கட்டமைப்புக்குள் பூசாரிகளைக் கொண்டுவருவதாகும். அத்தகைய ஏற்பாடு சட்டத்தையே இந்துத்துவமயமாக்குவது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானதாகும். இந்துக் கோவில்களை, பூசாரிகளை அதிகார மையங்களாக மாற்றும் முயற்சி. இது இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதச்சார்பின்மையின் மீதான தாக்குதலாகும். நாளை கடவுள் மறுப்பாளர்களும் பகுத்தறிவாளர்களும் இந்தப் பூசாரிகளிடம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் நிலமை என்னவாகும்? 

"நாட்டு மக்களுக்கும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் இடையே மோதலாகவே தேர்தல் பத்திர ஊழல் உருவெடுத்திருக்கிறது. இதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மக்கள் மிக கடுமையான தண்டனையைத்தான் தரப் போகின்றனர்." என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகத்திலேயே மிகப் பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழலை மறைக்க, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க எதையும் செய்யத் துணிந்துவிட்டது மோடி அரசு. 

இந்தக் காவிப் பாசிச மோ(ச)டி அரசு இனியும் தொடரக் கூடாது. அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அங்கம் வகிக்கும் “இந்தியா“ கூட்டணிக்கு வாக்களிப்போம். இந்தியாவைக் காப்போம்.