பாஜக அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானதெனக் கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை இகக(மாலெ) விடுதலை வரவேற்கிறது. தேர்தல் பத்திரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஜனநாயக விரோதமானவையும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானவையும் ஆகும். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமான இந்தத் தேர்தல் பத்திர திட்டம் மூலமாக நடைபெற்ற கார்ப்பரேட்டுகளின் நிதியளிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் கார்ப்பரேட் அதிகாரத்திற்கும், இந்த அரசியல் சாசன சட்ட விரோத திட்டத்தின் மிகப்பெரிய பலனாளியுமான, பாஜகவிற்கும் இடையே இருந்த பிணைப்பை மறைத்துக் கொண்டிருந்த திரையும் இதன் விளைவாக விலக்கப்பட்டுவிடும்.

தேர்தல் பத்திரங்கள் யார், எந்த கட்சிக்கு, எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பது குறித்து வாக்களிக்கும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்கு மாறாக, தனிநபர்கள், (இந்திய, வெளிநாட்டு) நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு அளவற்ற பணத்தை யாருக்கும் தெரியாமல் நன்கொடையாக வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளரின் அடையாளத்தையும் நன்கொடையின் விவரங்களையும் அறிந்து கொள்வதிலிருந்து இந்தியக் குடிமக்களைத் தடுக்கும். ஆக, இது சலுகைகள் வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் வாய்ப்புகளை வாரி வழங்கும்.

2017 லிலிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட அனைத்து அரசியல் நன்கொடைகளில் பெரும்பகுதியை பாஜக தான் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை பலனாளியாகவும் அது மாறியுள்ளது. இதனை உறுதி செய்ய இந்தத் தேர்தல் பத்திரங்கள் கருப்பு பணத்தையும் தேர்தலில் ஊழல் முறைகேடுகளையும் தூண்டிவிடும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைகளையும் கூட மோடி அரசாங்கம் ஒதுக்கித் தள்ளியது.

தேர்தலில் பெருமளவிலான ஊழல் முறைகேடுகளுக்கும் அரசியல் சாசன சட்டம் அதிகாரமற்று போவதற்கும் ஜனநாயகம் அரிக்கப்படுவதற்கும் இந்த தேர்தல் பத்திரங்கள் ஒரு அப்பட்டமான கருவியாகும். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமான இந்தத் திட்டத்தை நாட்டின் மீது திணித்த இந்த அரசாங்கம் நிச்சயமாக மக்களால் தண்டிக்கப்பட வேண்டும். 

வர இருக்கிற 2024 தேர்தல்களில் சந்தேகத்திற்கிடமான கார்ப்பரேட் ஆதரவு தேர்தல் பத்திரங்களால் நிதி அளிக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை, இந்தியா நிச்சயமாக தனது வாக்குகளால் தோற்கடிக்க வேண்டும்.