ஏழு கட்டங்களாக, நீண்ட காலம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முதல் கட்டம் ஏப்ரல் 19 ல் தொடங்கும் நிலையில், அய்ந்து நாட்களுக்கு முன்பு, ஏப்ரல் 14 அன்று, பாஜக தனது 76 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அது மோடி ஆட்சியின் தவறுகள், தோல்விகள் பற்றியோ, 2014 முதல் அள்ளி வீசிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் இழைத்த துரோகங்கள் பற்றியோ பேசவில்லை. சாதாரண பொதுமக்களின் தலையாய பிரச்சனைகளில் முக்கியமானவை எதைப் பற்றியும் பேசவில்லை. மாறாக, 2047ல் இந்தியா எனும் ஒரு கனவுச் சித்திரத்தை வரைகிறது. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மோடி சொன்னதை வெறும் ‘ஜூம்லா’ (வாய்ச்சவடால்) என அமித் ஷா சித்தரித்த போதுதான் இந்திய அரசியலில் ‘ஜும்லா’ எனும் வார்த்தையை பாஜக அறிமுகம் செய்தது. அந்த வார்த்தை போலி வாக்குறுதிகளுக்கான உருவகப் பெயராக மாறிபோய்விட்டது. இப்போது, அந்த வாய்ச்சவடால்களுக்கு பாஜக மற்றுமொரு புதிய வார்த்தையைக் கண்டுபிடித்திருக்கிறது. அதுதான் “மோடியின் கேரண்டி” (மோடியின் உத்தரவாதம்). என்னதான் பெயர் மாற்றி மாற்றி வழங்கப்பட்டாலும் வாய்ச்சவடால் வாய்ச்சவடால்தான்.

2014 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை, ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம், கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம் போன்ற வாக்குறுதிகளைக் கைவிட்டுவிட்ட பாஜக, 2022ல் இந்தியாவிற்கான புதிய வாக்குறுதிகளின் பட்டியலைத் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தது. பல எண்னற்ற சாதனைகளுக்கான இலக்காக இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் விளம்பரம் செய்யப்பட்டது. கழிப்பிடம், குழாய்த் தண்ணீர் வசதிகளுடன் அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, நூறு பொலிவுறு நகரங்கள், உலகத் தரம் வாய்ந்த 10 பல்கலைக் கழகங்கள் எல்லாம் அந்த 75வது சுதந்திர தினத்திற்குள் அடையப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மீண்டும் புதிய வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. மோடி ஆட்சி தனது 2022 வாக்குறுதிகள் என்னாயிற்று என மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மீண்டும் இலக்கு இடம் மாறிவிட்டது. இம்முறை 2036ல் ஒலிம்பிக் என்றும் 2047ல் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவோம் என்றும் சொல்கிறார்கள்! 

வளர்ந்து வரும் சமூகங்கள் குறித்த படிப்பு மையம் (சிஎஸ்டிஎஸ்) மற்றும் லோக்நிதி அமைப்புகள் இணைந்து 19 மாநிலங்களில், 10,019 நபர்களிடமிருந்து ஒரு ஆய்வை கடந்த மார்ச் கடைசி மற்றும் ஏப்ரல் முதல் வாரங்களில் மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு மக்கள் பிரச்சினை பற்றிய ஒரு துல்லியமான சித்திரத்தைக் காட்டுகிறது. முக்கிய பிரச்சனைகளாக வேலையில்லாத் திண்டாட்டம் (27 சதவீதம்) விலைவாசி உயர்வு (23 சதவீதம்) என்று கூறியுள்ளார்கள். ஆனால், அயோத்தியில் கோவில் கட்டியது மோடி அரசின் சாதனை என்று 8 சதவீதம் பேரும் மோடி ஆட்சியில் உலகளவில் இந்தியாவின் தோற்றம் பற்றி வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளார்கள். பாஜக தன்னுடைய சாதனைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், புதிய கிரிமினல் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஆகியவற்றிற்கு பொது மக்களிடமிருந்து எவ்வித வரவேற்பும் இல்லை என்கிறது அந்த ஆய்வு. உத்தரகண்ட் பொது சிவில் சட்ட முன்மாதிரி ”நாகரீகமற்ற” தன்மையடையது எனும் கடும் விமர்சனத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது. தனி நபர் சுதந்திரத்தையும், குடிமக்களின் விருப்பத் தேர்வுகளையும் கொடுங்கோல் ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது, பழைமைவாத தன்மையிலான சமூகத் தலையீட்டுக்கு உள்ளாக்குகிறது என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. 

இந்தியாவில் இப்பொழுது இருக்கும் பொருளாதார சமத்துவமின்மை, வேலை வாய்ப்பின்மை பற்றி பல்வேறு திகைப்பூட்டும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன. சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024 மற்றும் மனிதவள நிறுவனம் இரண்டும், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் என்றும் அதில் 65 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் பட்டப் படிப்பும் அதற்கும் மேலும் படித்தவர்கள் என்றும் கூறுகிறது. படித்து விட்டு வேலையின்றி இருக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உள்ளன. மோடியின் கோடீஸ்வரர் ஆட்சியில், பிரிட்டிஷ் காலனீய ஆட்சிக் காலத்தைவிட சமத்துவமின்மை பலமடங்கு மோசமடைந்து இருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் இருக்கும் பணக்காரர்களிடம் நாட்டின் 40 சதவீத செல்வம் குவிந்து கிடக்கிறது. நாட்டின் ஆண்டு வருமானத்தில் 22 சதவீதத்தை அவர்கள் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வருமானம் தேங்கிக் கிடக்கிறது. கடன் சுமை அபாயகரமான அளவை எட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய அதிமோசமான பொருளாதார நிலைமை பற்றி பாஜக தேர்தல் அறிக்கை மவுனம் சாதிக்கிறது. 

140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுதான் தன்னுடைய ஒரே குறிக்கோள் என்கிறார் நரேந்திர மோடி. கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டு விட்டோம் என்று ஒரு புறம் சொல்கிறார். இன்னொரு புறம், 80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாகக் கொடுக்கிறோம் என்று பெருமை பேசுகிறார். இதிலிருந்தே மோடி அரசு வறுமையில் இருந்து மக்களை மீட்டதாக சொல்வதும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக கூறுவதும் மிகப்பெரும் பொய் என தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. உண்மையில் பொருளாதார சமத்துவமின்மைதான் மோடி அரசாங்கத்தால் அதன் கொள்கை வகுப்பவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது. செல்வத்தைத் தமக்கென குவித்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்திட “செல்வத்தை உருவாக்குபவர்கள்” என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறது மோடி அரசு. மாறாக, 80 சதவீத இந்திய மக்கள் மாதம் 5 கிலோ அரிசி இலவசமாகப் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்பது போல அவர்களை நடத்துகிறது. 

மோடி ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை திணிக்கப்பட்டதைப் போலவே, பாஜக தேர்தல் அறிக்கையின் உண்மையான நோக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆனந்த் குமார் ஹெக்டே, ஜோதி மிர்தா, லல்லு சிங், அருண்கோவில் போன்ற பாஜக தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் எனும் தமது பேராவலை வெளிப்படுத்துவதன் மூலம் அதை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகவே மோடி 400க்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்ற வேண்டுமென இலக்கு வைத்திருக்கிறார் என அவர்கள் கூறுகிறார்கள். பாபாசாகேப் அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தை மையமாகக் கொண்டு ஜனநாயக இந்தியா அணிதிரளும் வாய்ப்பைக் கண்டு அச்சமுற்ற மோடி, அம்பேத்கர் கூட அரசமைப்புச் சட்டத்தை அழித்துவிட முடியாது என்கிற கூச்சநாச்சமற்ற ‘கேரன்டியை’ (உத்தரவாதத்தை) இப்போது வழங்குகிறார். மோடி உண்மையிலேயே அரசமைப்புச் சட்டம் மாற்றப்படாது என இந்திய மக்களுக்கு மறுஉறுதி வழங்க விரும்பி இருந்தால், அவர் கோல்வால்கரின் பெயரைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ( கோல் வால்கரே நினைத்தால் கூட என்று) அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது அதை அங்கீகரிக்க மறுத்தவர்கள், அதனிடத்தில் மனுஸ்மிருதியைக் கொண்டுவர வேண்டுமென கூக்குரலிட்டவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள்தான். 

அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது என சுயதிருப்தி அடைந்துவிடக் கூடாது என உண்மையில் இந்திய மக்களுக்கு பாபாசாகேப் எச்சரிக்கை விடுத்தார். மாறாக, அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பேற்றிருக்கும் நபர்களின் தரத்தையும் நோக்கத்தையும் பற்றி கவனம் செலுத்திட வேண்டும் என மக்களை எச்சரித்தார். ஒரு நல்ல அரசமைப்புச் சட்டம் தவறானவர்கள் கையில் இருக்குமானல் அது பேரழிவைத்தான் ஏற்படுத்தும். வெள்ளை ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்று இந்தியா பழுப்பு நிறக் கொள்ளையர்களிடம் சென்று விடக் கூடாது என்று பகத்சிங் எச்சரித்ததைப் போன்றதோர் எச்சரிக்கை அது. பொருளாதார சமத்துவமின்மையும் சமூக சமத்துவமின்மையும் நிலவுமானால், அவை தடுத்து நிறுத்தப்படவில்லையானால், “ஒரு குடிமகன், ஒரு ஓட்டு” எனும் சமத்துவம் பொருளற்றதாகப் போய்விடும் என்று மீண்டும் பாபாசாகேப்தான் சுட்டிக்காட்டினார். இன்று இந்தியா அம்பேத்கரின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்தாக வேண்டும். இந்திய ஜனநாயகத்தையும் அதன் அரசமைப்பு அடித்தளத்தையும் காத்திட, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரிகளான பாசிச சக்திகளைத் தோற்கடித்திட வேண்டும்.

எம்எல் அப்டேட் தலையங்கம் 2024 ஏப்ரல் 16-22

“மோடி கேரண்டி” - மோடியின் உத்தரவாதம் என்று சொல்லி வெளியிட்டது.