அனைத்து மைய தொழிற்சங்கங்களும் இணைந்து திட்டமிட்டிருந்த பெருந்திரள் அமர்வு நிகழ்ச்சிக்கு 2023 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலை முதலே தொழிலாளர்கள் அணி அணியாக வந்து சேரத் துவங்கினர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மிகப்பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை வெற்றி கரமாக்க அனைத்து மைய தொழிற்சங்கங் களும் இணைந்து மாவட்ட மாநாடுகள் நடத்தி மக்களி டையே பிரச்சாரம் மேற்கொண்டு தயார்படுத்தி இருந்தனர். நூற்றுக்கணக்கான தெருமுனை கூட்டங்களும் சைக்கிள் பிரச்சாரம், இரு சக்கர வாகன பிரச்சாரம், வேன் பிரச்சாரம், துண்ட றிக்கை விநியோகம், சுவரொட்டி பிரச்சாரம் என பல வடிவங்களில் அனைத்து மாவட்டங் களிலும் பிரச்சார இயக்கங்கள் நடைபெற்றிருந்தன.
நாடாளுமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம் கலந்து கொள்ள இயலவில்லை. அதனால், பெருந்திரள் அமர்வு நிகழ்ச்சிக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொரு ளாளர் தோழர் நடராஜன் தலைமை வகித்தார். ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் தோழர் சங்கரபாண்டியன், மாநிலப் பொது செயலாளர் தோழர் ஞானதேசிகன், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் முதுபெரும் தலைவர் தோழர் குசேலர், சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர் ஹேமலதா உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் உரையாற்றினர்.
ஏஐசிசிடியுவின் மாநில சிறப்பு தலைவர் தோழர் இரணியப்பன், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் தோழர் அந்தோணிமுத்து, ஏஐசிசிடியு மாநில நிர்வாகக்குழு தோழர்கள் பால்ராஜ், முருகன், சதீஷ், திருநாவுக்கரசு, பாலசுப்பிர மணியன், கோவிந்தராஜ், வெங்கடாசலம், சுசீலா, அதியமான், கட்டுமான சங்க மாநில நிர்வாகக்குழு தோழர்கள் ராஜன், சிவராஜ், வெங்கடேசன், இளையராஜா, ஆப்ரகாம் டாஸ்மாக் சங்க மாநில நிர்வாகிகள் சிவா, சந்திர குமார் ஆகியோருடன் மாநில முழுவதுமிருந்து மின்சார வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், கட்டுமானம், தோல் மற்றும் தோல் பொருள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏஐசிசிடியு பதாகையின் கீழ் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தொழிற்சங்க தலைவர்கள் உழைக்கும் மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதலை தொடுத்து வரும் ஒன்றிய மோடி அரசைக் கடுமையாகச் சாடினர். மணிப்பூர், ஹரியானா கலவரங்களுக்கு மத வெறி பிடித்த மோடி ஆட்சியே காரணம் என குற்றம் சுமத்தினர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி பாசிச மோடி ஆட்சிக்கு முடிவுகட்ட தொழிலாளர் வர்க்கம் தம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.
வரும் ஆகஸ்ட் 24 டெல்லியில் அனைத்து மைய தொழிற்சங்கங்களும் விவசாயிகள் போராட்ட முன்னணியும் இணைந்து மாபெரும் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கான மற்றுமொரு மைல் கல்லாக அமையும்.
ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக அடுத்தடுத்த மிகப்பெரிய மக்கள் போராட்டங்களுக்கு தொழிற்சங்க இயக்கம் தயாராகி வருகிறது.
14 அம்ச கோரிக்கைகள்:
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!
பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே!
தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறு!
* நிரந்தர வேலைகளில் பணி புரியும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரம் செய்! சம வேலைக்கு சம ஊதியச் சட்டத்தை அமல்படுத்து!
10 விழுக்காட்டிற்கு மேல் தற்காலிக தொழிலா ளர்களை பணிக்கு அமர்த்தாதே!
இந்த பத்து விழுக்காடு தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28,000 என நிர்ணயம் செய்!
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய தொகையை குறைந்தபட்சம் ரூ.10,000 ஆக்கிடுக!
விவசாய விளைப் பொருள்களுக்கு விவசாயி களே விலை நிர்ணயம் செய்து கொள்ள சட்டம் இயற்று!
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை விரிவாக்கம் செய்!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கு!
அநியாய அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறு!
சுங்கச்சாவடிக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கொள்ளையை கைவிடு!
கல்வி, மருத்துவம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உத்தரவாதம் செய்!
எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பை உத்திரவாதம் செய்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)