இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக 2023ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள் தலைவர்களுக்கு, ஆளுமைகளுக்கு அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், அயோத்திதாசர், காமராஜர், காயிதேமில்லத், செம்மொழி ஆகிய பெயர்களில் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர்க்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜாவுக்கும் மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கும் காமராஜர் கதிர் விருது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கும் அயோத்திதாசர் ஆதவன் விருது டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கும் காயிதே மில்லத் பிறை விருது பெங்களூர் சட்டப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மோகன் கோபாலுக்கும் செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் வழங்கப்பட்டன.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒ ய்.எம்.சி.ஏ மைதானத்தில் 28.5.2023 அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்கள் தோழர் சிந்தனைச் செல்வன், தோழர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து முதலாவதாக வழங்கப்பட்ட அம்பேத்கர் சுடர் விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் வழங்க இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரியார் ஒளி விருது, காமராஜர் கதிர் விருது, மார்க்ஸ் மாமணி விருது, அயோத்திதாசர் ஆதவன் விருது, காயிதே மில்லத் பிறை விருது, செம்மொழி ஞாயிறு விருது ஆகியவற்றை தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வழங்கினார்கள். விருதினை வழங்குவதற்கு முன்னதாக விருது பெறும் தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் பற்றி தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றி னார். மேலும் அவர்கள் பற்றிய ஒளிப்படமும் மேடையில் திரையிடப்பட்டது.
விருதுகள் தலைவர்களுக்கும் சான்றோர் களுக்கும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தலைவர்கள் தங்களுடைய ஏற்புரையை வழங்கினார்கள். தோழர் தொல்.திருமாவளவன் பேசிய போது, இன்று இந்தியாவிற்கு ஒரு கருப்பு நாள் என்றும், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மோடி திறந்து வைத்தார் அந்த நிகழ்ச்சிக்கு இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப் படவில்லை, ஆனால், மடாதிபதிகள் அழைக்கப் பட்டார்கள். மடாதிபதிகள் உள்ளே, ஜனாதிப தியோ வெளியே இதுதான் சனாதனம் என்று கூறினார்.
விருது வழங்கும் விழாவில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர், மத்தியக்குழு உறுப்பினர்கள் தோழர் பாலசுந்தரம், தோழர் பாலசுப்பிரமணியன், தோழர் சந்திரமோகன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணவேணி, மாநில நிலைக்குழு உறுப்பினர்கள் ஜி.ரமேஷ், சிம்சன், இரணியப் பன், கே.பாலசுப்பிரமணியன், வளத்தான், மாநிலக்குழு உறுப்பினர்கள் கண்ணையன், வரதராஜன், தனவேல், ராஜசங்கர், அதியமான், சி.ரங்கசாமி உள்ளிட்ட பல தோழர்கள் இகக(மாலெ) கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)